பக்கம் எண் :

494
சங்கீத ரத்னாகரர் துவாவிம்சதி சுருதி முறை.

பஞ்சமமாக வழங்கவேண்டுமென்றும் பஞ்சமத்தின் 4-வது சுருதியை தைவதத்தோடு சேர்த்துக் கொள்ளுகிறதென்றும் தெரிகிறது. மற்ற சுரங்கள் யாவும் தங்கள் ஸ்தானத்திலேயே ஒலித்துக் கொண்டிருக்க பஞ்சமம் ஒன்று மாத்திரம் நாலாவது சுருதியை விட்டுத் தன் மூன்றாவது சுருதியில் பேசுகிறது. மற்ற சுரங்கள் யாவும் சுத்தசுரங்களாகவே யிருக்கின்றன.

காந்தார கிராமம்.

இதன் பின் தேவலோகத்திற்குப்போன காந்தாரம் கிராமம் வருகிறது. ஷட்ஜமம் 4 சுருதியோடும், ரிஷபம் 5, 6 என்ற இரண்டு சுருதிகளோடும், காந்தாரம் 7, 8, 9, 10 என்ற நாலு சுருதிகளோடும், மத்திமம் 11, 12, 13 என்ற மூன்று சுருதிகளோடும், பஞ்சமம் 14, 15, 16 என்ற மூன்று சுருதிகளோடும் கானமுறையில் வழங்கவேண்டுமென்று சொல்லுகிறார். இவைகள் கிரகம் மாற்றும்பொழுதும் இப்படியே நடைபெறவேண்டுமென்று தெளிவாய்த் தோன்றுகிறது. இதில் ஷட்ஜமம், மத்திமம், நிஷாதங்களைத்தவிர, ரிஷபகாந்தாரங்களும், பஞ்சம தைவதங்களும் சுத்த சுர நிலையை இழந்து விடுகின்றன. அதாவது 7 வது சுருதியில் வரவேண்டிய ரிஷபத்திற்குப்பதில் 6 வது சுருதி ரிஷபமும், 9 வது சுருதியில் வரவேண்டிய காந்தாரத்திற்குப்பதில் 10 வது சுருதி காந்தாரமும், 17 வது சுருதியில் வரவேண்டிய பஞ்சமத்திற்கு 16 வது சுருதியில் வரும் பஞ்சமமும் 20 வது ஸ்தானத்தில் வரவேண்டிய தைவதத்திற்குப்பதில் 19 வது ஸ்தானத்தில் வரும் தைவதமுமாக வழங்கவேண்டியிருக்கிறது. இதில் ரிஷப பஞ்சம தைவதங்கள் ஒரு ஸ்தானம் குறைந்தும் காந்தாரம் ஒரு ஸ்தானம் கூடியும் வருகிறது. ஆகவே நாலு சுரங்கள் ஷட்ஜ கிராமத்திலுள்ள தங்கள் நிலையைஇழந்து முன்பின் ஆவதினால் கானம் செய்வதற்குக் கடினமாகும். இதை உத்தேசம் செய்தே காயகசிரோமணிகள் எல்லாரும் கூடி தேவலோகத்திற்கு அனுப்பிவிட்டார்கள் போலும். இதுபோல இன்னும் எதை எதை அனுப்ப இருக்கிறார்களோ நாம் அறியோம். எஞ்சி நிற்கும் தென்னிந்திய சங்கீத முறையையாவது தெய்வம் காக்க. சாரங்கதேவருடைய காலத்திலேயே காந்தார கிராமம் தேவலோகத்துக்குப் போய்விட்டதென்று அவர் சொல்லுகிறதினால் இது வழக்கத்தில் வெகு காலத்திற்கு முன்னேயே இல்லாதொழிந்ததென்று தெளிவாய்த் தெரிகிறது. இக்காந்தாரத்தைச்சேர்ந்த ஷட்ஜம மத்திம கிராமங்களின் கதியைப் பற்றியும் அப்படியே நினைக்கவேண்டியதிருக்கிறது. இப்படிக் கிரக மாற்றுகையில் அவைகள் ஒன்றற்கொன்று மிகுந்த ஒற்றுமை யுடையவைகளா யிருக்கவேண்டுமென்று சொன்ன சாரங்கதேவரின் அபிப்பிராயத்தையே இலக்கங்களால் குறித்துக் காட்டியிருக்கிறேன். ஏனென்றால் சாரங்கதேவர் துவாவிம்சதி சுருதிக்கு அட்டவணையில் கொடுத்த அளவுகள் யாவும் 1, 2, 3 எண்களின் கிரமம் எப்படியோ அப்படியே ஒத்திருக்கின்றனவென்றும் அந்த எண்களுக்குரிய அளவும் ஓசைகளுமே இதற்கும் பொருத்தமாயிருக்கின்றன. வேறு எவ்விதமான அளவும் இதற்கு ஒத்து வரமாட்டாதென்று நான் அங்குத் திருஷ்டாந்தப் படுத்தியிருக்கிறேன். ஆகையினால் நான் இங்கு அதைச் சொல்ல அவசியமில்லை. அட்டவணையில் கண்ட அளவுகளோடும் ஷட்ஜ மத்திம காந்தார கிராமத்தின் அட்டவணையில் கண்ட லக்கங்களோடும் நாம் ஒத்துப்பார்ப்போமேயானால் ஒவ்வொரு சுருதியும் ஒரு அணுப்பிரமாணமும் பேதப்படாமல் வேறு இடைவெளிகள் உண்டாகாமல் வேறு சுருதிகள் நடுவில் உண்டாகாமல் வருகின்றனவென்பதை நாம் திட்டமாய் அறியலாம். இப்படி யிருக்க ஒருவர் 22க்குமேல் 2 சுருதி கண்டுபிடித்ததாகவும் (22 + 2 = 24), 3 சுருதி கண்டு பிடித்ததாகவும் (22 + 3 = 25), 31 சுருதிகள் கண்டுபிடித்ததாகவும் (22 + 31 = 53) சொல்லுவதை அறிவாளிகள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.