பக்கம் எண் :

495
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

சாரங்கதேவரின் துவாவிம்சதி சுருதியில் ச-ப, ச-ம முறையின் கணக்கு.

ச-ப, ச-ம என்னும் வாதி சம்வாதி பொருத்தமுள்ள முறை அவரால் வெகுவாய்க் கையாடப்பட்டு வந்திருக்கிறதென்று நாம் அறிவோம். அவர் எந்த இரு சுரங்களுக்கு நடுவில் 8 சுருதிகள் வருகின்றனவோ அவைகள் ச-ம பொருத்தமுடையதென்றும் எந்த இரண்டு சுரங்களுக்கு நடு மத்தியில் 12 சுரங்கள் வருகின்றனவோ அவை ச-ப முறையில் பொருத்தமுடையதென்றும் சொல்லுகிறார். அதாவது தொட்ட சுரத்தை நீக்கி ஒன்பதாவது சுருதியாகவும் பதின்மூன்றாவது சுருதியாகவும் வரவேண்டுமென்பதே. இம்முறையே எல்லா சுரங்களும் ஒன்றோடொன்று பொருந்தியிருக்க வேண்டும். ஒரு ஸ்தாயியிலுள்ள சுருதிகள் ஒன்றற்கொன்று ஒற்றுமையில்லாத அளவுடையதாயிருக்குமானால் இம்முறைப்படி ஒத்து வரமாட்டாது. இதற்கு முன் சுருதி முறை சொன்ன யாவரும் ச-ப, ச-ம முறையாகவே சுருதிகள் கண்டுபிடித்ததாக தங்கள் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கணக்கின்படி ஒன்றற்கொன்று ஒற்றுமையில்லாத சுரஸ்தானங்களைச் சொல்லுகிறார்கள். இது சாரங்கர் கருத்தல்லாதிருந்தும் சாரங்கர் கருத்து இது என்று சொல்லுகிறார்கள். ச-ப முறையாக 13-வது ஸ்தாயியிலும் ச-ம முறையாக 9-வது ஸ்தாயியிலும் 22 சுருதிகளும் தார ஷட்ஜத்தில் முடிவடைகிறதென்று இதன் முன் 359-வது பக்கம் 15-வது அட்டவணையிலும் 360-வது பக்கம் 16-வது அட்டவணையிலும் தெளிவாகக் காட்டியிருக்கிறோம். அம்முறையையே 478-வது பக்கம் சாரங்கர் சுருதி முறை 44-வது அட்டவணையில் 9-வது கலத்தில் காணலாம். ஒன்பதாவது ஒன்பதாவதாகப் போகும் பொழுது ச-ம முறையாம். அதன்படியே ஒன்பதாவது சுருதிக்கு எதிரிலுள்ள 490.91 என்ற சென்ட்ஸ்களை இரண்டால் பெருக்க அதற்கு இரண்டாமிடமாகிய 18 ம் இடத்திற்குரிய சென்ட்ஸ்களும் அதன்பின் 5ம் இடத்திற்குரிய சென்ட்ஸ்களும் கிடைக்கின்றன. இப்படியே 4, 5, 6 முதலிய எண்களால் பெருக்கப்படும் பொழுது ஒரு ஸ்தாயியிலுள்ள 22 சுருதிகளும் வந்து விடுகின்றன.

இது போலவே 13 வது சுருதியாகிய பஞ்சமத்தின் 709.09 என்னும் சென்ட்ஸ்களை 2, 3, 4, 5 முதலிய லக்கங்களால் பெருக்கிக் கொண்டுபோக ஒரு ஸ்தாயியின் 22 சுருதிகளும் படிப்படியாய்க் கிடைக்கின்றன. இவைகளில் எவ்விதமான மிச்சமாவது குறைவாவது இல்லாமல் முடிகிறதென்று தெளிவாகத் தெரிகிறது. இவ்வட்டவணையில் ம, ப வை நாலாவது சுருதி ஷட்ஜமத்திலிருந்து கணக்கிடுவோமானால் பன்னிரண்டாமிடமாகவும் பதினாறாமிடமாகவும் வரும்.

சாரங்க தேவர் அபிப்பிராயப்படி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளுக்கு மேல் வராதென்றும் மற்றவர் சொல்லுகிறபடி வந்தால் அவைகள் கிரக மாற்றும்பொழுது ஒத்துவராமல் சில தூள்கள் நடுவில் உண்டாகுமென்றும் நாம் திட்டமாய்த் தெரிந்து கொள்வதற்கு அனுகூலமாயிருக்கும்படி இதன் முன் துவாவிம்சதி சுருதியைக் குறித்து வெவ்வேறு அபிப்பிராயம் சொன்னவர்களின் அளவை ஒத்துப் பார்ப்போம்.