பக்கம் எண் :

496
துவாவிம்சதி சுருதியைப்பற்றிய வெவ்வேறு அபிப்பிராயங்களை ஒத்துப்பார்த்தல்.

பதினெட்டாவது.

இந்திய சங்கீதத்தில் வழங்கிவருகிற சுருதிகள் இன்னின்னவையென்று
 சொன்ன கனவான்களின் அபிப்பிராயங்கள் யாவற்றையும் 
ஒத்துப் பார்ப்பது.

சுருதி விஷயமாக நூல்கள் சொல்லியவர்களில் சாரங்கர் முந்தியவரென்றும் அவரும் தமக்கு முன்னுள்ள பரதருடைய அபிப்பிராயத்தை அனுசரித்து எழுதியிருக்கிறாரென்றும் தெளிவாக அறிகிறோம். அது போலவே இந்தியாவிலுள்ள கனவான்களும் மேற்றிசையிலுள்ள சில கனவான்களும் சாரங்கர் சொன்ன 22 சுருதியையே ஆதாரமாக வைத்துக் கொண்டு சுருதி சேர்க்கிறதாகச் சொன்னாலும் உண்மையில் அப்படிச் செய்யாமல் (2/3),(3/4) என்று சொல்லும் மற்றொரு அளவை வைத்துக் கொண்டு சுருதிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் இது சாரங்க தேவருடைய அபிப்பிராயமல்ல. என்றாலும் அவருடைய கருத்து இது அல்ல என்று நான் எவ்வளவு சொன்னாலும் அதை ஆக்ஷேபிக்கத் தயாராயிருக்கிறார்கள். ஆகையினால் அவர் சுருதி முறையை மற்றவர்கள் சொல்லும் முறையிலுள்ள சுருதியோடும் அளவோடும் பின்னங்களோடும், சென்ட்ஸ் கணக்கோடும் ஒத்துப் பார்ப்பது அவசியமாயிற்று.

முதலாவது-46-வது அட்டவணை.

இவ்வட்டவணையில் 32 அங்குலமுள்ள ஒரு வீணைத் தந்தியில் முதல் பாதி பாகமாகிய 16 அங்குலத்தை நுட்பமாக எடுத்துக் கொண்டு அதில் அவரவர்கள் சொல்லும் சுருதியின் அளவைத் திட்டமாகக் குறித்திருக்கிறேன். 16 அங்குலமுள்ள மத்திய ஸ்தாயியில் குறித்திருக்கும் அளவில் அவரவர்கள் சொல்லும் சுருதி ஸ்தானங்களையும் சொல்லியிருக்கிறேன். அவரவர்கள் சொல்லும் அளவில் கண்ட சுருதிகளை வீணையில் பிடித்துப் பார்க்க விருப்பமுள்ளவர்கள் 16 அங்குல நீளமுள்ள ஒரு கடிதத் துண்டை அவரவர் பெயருக்கு நேரேயுள்ள கலத்தில் வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு சுருதி ஸ்தானங்களைக் குறித்து அதன்பின் தாங்கள் 32 அங்குலத்தில் தயார் செய்திருக்கும் வீணையின் மேரு முதல் 16 அங்குலம் வரையும் மெட்டுகள் பதித்து சுரஸ்தானம் கண்டு கொள்ளலாம். மெட்டுகள் திட்டமான அளவைக் காட்டுவதற்காக மிக நுட்பமான முதுகுடையதாயிருக்க வேண்டும். இலகுவில் எடுக்கவும் பதிக்கவும் கூடியதாக அவைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேரு ஸ்தானம் உயர்ந்திருக்குமானால் தந்திகளை இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்கும். அப்பொழுது சுரஸ்தானங்கள் விலகிப் போகும். ஆகையினால் சுரஸ்தானங்களின் மெட்டுக்கும் மேருவின் மெட்டுக்கும் ஒரு கடுதாசி கனம் மாத்திரம் வித்தியாசமிருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படிச் சேர்ப்பது வாசிப்பதற்கல்ல. சுர ஸ்தானங்களை மாத்திரம் பரிட்சை செய்து பார்ப்பதற்கே உதவும். இப்படிச் செய்த வீணையில் அவரவர் சொல்லும் சுரங்களை பதித்துப் பார்த்துக் கொள்வது மிகச் சுலபம்.

இரண்டாவது-47-வது அட்டவணை.

இது முதல் அட்டவணையில் குறித்த அளவுகள் சரியானவையோ அல்லவோ என்று சோதித்துப் பார்ப்பதற்கு 32 அங்குலமுள்ள தந்தியில் இத்தனையாவது அங்குலத்தில் வருகிறதென்று தெளிவாகக் காட்டுகிறது.