மூன்றாவது-48-வது அட்டவணை. இவ்வட்டவணை மேற்கண்ட தந்தியின் அளவுகள் அவரவர் சொல்லும் பின்ன பாகங்களின்படி தயார் செய்யப்பட்டிருக்கிறதென்று காட்டுகிறது. நாலாவது-49-வது அட்டவணை. அவரவர்கள் கொடுத்த பின்ன பாகங்களுக்கு வித்தியாசம் தெரிந்து கொள்வதற்காக சென்ட்ஸ்களுக்கு மாற்றியிருக்கிறது. இவைகள் ஒவ்வொருவர் சொல்லும் சுருதியின் அளவுகளை ஒத்துப் பார்ப்பதற்கு மிகவும் அனுகூலமாயிருக்கும். இவைகளில் நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டிய இரண்டொரு குறிப்புகளை மாத்திரம் இங்கே பார்ப்போம். முதல் கலத்திலுள்ள சாரங்கதேவர் சுருதி முறை அளவானது அவருடைய புத்தகத்தில் கண்டபடியே செய்யப்பட்டிருக்கிறது. அவற்றின் அளவையும் கிரமத்தையும் நாம் நன்றாய்க் கவனிக்க வேண்டும். ஆதார ஷட்ஜத்திலிருந்து சுருதி ஸ்தானங்களுக்குள்ள இடைவெளிகள் கிரமமாக வரவரப் பெருத்து மேற் போகிறதென்று அறியலாம். நாதமும் அப்படியே வரவர தீவிரமாகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளோடு முடிகிறது. இவருடைய மேன்மையான அபிப்பிராயத்திற்கும் ஒழுங்குக்கும் மற்றவர்களுடைய சுருதி முறை ஒத்ததாயில்லையென்று தெளிவாகக் காண்போம். இவர் சுருதியின்படி சுருதி செய்கிறோமென்று சொன்னவர்கள் இவர் கருத்தின்படி செய்யாமல் (2/3),(3/4) என்ற வேறு அளவைக் கொண்டு சுருதி முறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகையினால் மற்றவர் சுருதி முறை இவர் சுருதி முறையோடு ஒத்து வராதென்று தெளிவாகக் காண்போம். 491 சென்ட்ஸ்களோடு வரும் சாரங்கர் மத்திமத்திற்கும் மற்றவர்கள் சொல்லும் 498 சென்ட்ஸ்களுடைய மத்திமத்திற்கும் 7 சென்ட்ஸ்கள் பேதப்படுகிறது. அப்படியே 709 சென்ட்ஸ்களுடைய சாரங்கர் பஞ்சமத்திற்கும் 702 சென்ட்ஸ்கள் என்று சொல்லும் மற்றவர் பஞ்சமத்திற்கும் 7 சென்ட்ஸ்கள் வித்தியாசம் வருகிறது. இந்த ம, ப என்ற இரு சுரங்களிலேயே பேதப்படுமானால் மற்ற எதில் ஒத்திருக்கப் போகிறது. ஒற்றுமையில்லாத இரண்டு மட்டப் பலகையினால் அளந்து போனால் ஒருவருக்கொருவர் பேதப்பட்டு வாதம் உண்டாகுமே. அதை அட்டவணையில் தெளிவாகக் காண்கிறோம். மேலும் மற்றவர் சொல்லும் சுரங்கள் ஒரு வழியிலில்லையென்பதை 46-வது அட்டவணையின் தலைப்பில் முதல் கலத்திலுள்ள ரி1 லிருந்து அவரவர் சொல்லும் ரி1 ஸ்தானங்களைத் தொடும்படியாக ஒரு சிகப்புக் கோடு போட்டுப் பார்த்தால் ஒற்றுமை தெளிவாகத் தெரியும். இப்படியே காந்தார தைவத நிஷாதங்கள் வருகிறதென்றும் இவைகள் ஒற்றுமையான அளவுடையவைகள் அல்லவென்றும் சாரங்கரின் சுருதி முறைக்கு எவ்விதத்திலும் ஒத்த தல்லதென்றும் கர்நாடக சங்கீத முறைக்குப் பொருந்தியதல்ல என்றும் தெளிவாகக் காணலாம். இச்சுருதி முறைகளில் சொல்லப்படும் சில அட்டவணைகளும் சில கனவான்களின் அபிப்பிராயமும் இவ்வட்டவணை தயார் செய்த பின் கிடைத்ததினால் சேர்க்கப்படவில்லை.
|