பக்கம் எண் :

584
16 ஜாதி பண்களிலிருந்துண்டாகும் 112 பண்கள்.

மேற்கண்ட சில பக்கங்களில் பூர்வம் தமிழ் மக்கள் பழகி வந்த இசைத் தமிழில் ஒரு பாகம் மாத்திரம் காணக்கூடியதாயிருக்கிறது. மெலிவு, சமம், வலிவு அதாவது மந்தர, மத்திய, தார ஸ்தாயிகள் ஒன்று இரண்டு பங்காக ஓசை உயர்ந்து போகிறதென்றும் பாடும் பண்களுக்கேற்ற விதமாய் குரல் இளி என்றிரு நரம்பும் பேதமின்றி ஒன்றுபோல் சேரும் ஓசையைக் கேட்கும் உணர்ச்சியுடையவராய் இருக்க வேண்டுமென்றும் யாழில் வரும் சுரங்களைச் ச-ப முறைப்படியே கண்டுபிடித்து கானம் செய்ய வேண்டுமென்றும் தெரிகிறது. இப்படிக் கண்டுபிடித்த 14 சுரங்களில் நடு மத்தியாயுள்ள ம-க வரையுள்ள ஏழு சுரங்களை மத்திய ஸ்தாயியாகவும் ச-ம வரையுள்ள நாலு சுரங்களை மந்தர ஸ்தாயியாகவும் ரி க ம என்ற மூன்று சுரங்களை தார ஸ்தாயியாகவும் வைத்துக் கானம் பண்ணியிருக்கிறார்கள் என்றும் அவைகளில் கிரக சுரம் வைத்து இராகங்கள் பாடி வந்தார்களென்றும் காண்கிறோம். இது ஆயப்பாலை என்று சொல்லப்படுகிறது. இது அரை அரை சுரமாகப் பாடப்பட்டு வந்ததென்றும், ஸ்திரீகளுக்குப் பிரியமானதென்றும் காணப்படுகிறது.

இதன்மேல் 22 அலகுகளுள்ள வட்டப்பாலை சொல்லப்படுகிறது. மேஷாதியாகப் பன்னிரு ராசிகளில் இணை இணை சுரங்களாக இன்னின்ன ராசிகளில் இன்னின்ன அலகோடு வருகிறதென்றும் ச-ப முறைப்படி வலமுறையாக ஏழாவது ஏழாவது ராசியிலும் ச-ம முறைப்படி இடமுறையாக ஐந்தாவது ஐந்தாவது ராசியிலும் சுரங்கள் வரவேண்டுமென்றும் சொல்லுகிறார். அதோடு கிரக சுரங்கள் மாறும்போது வலமுறையாகவும் இடமுறையாகவும் அலகுகள் இன்னபடி வரவேண்டுமென்று சொல்லப்படுகிறது. அதில் பன்னிரு பாலையில் பிறக்கும் ஏழு பெரும்பாலைகளும் ஐந்து சிறுபாலைகளும் சொல்லப்படுகிறது. ஏழு பெரும்பாலையுள் ச ம ப நி என்ற சுரங்களில் பிறக்கும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் 4 வித யாழ்கள் சொல்லப்படுகின்றன. அவைகள் ஒவ்வொன்றுள்ளும் ச-க ப-நி என்ற சுரங்களில் பிறக்கும் பண்கள் அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் என்ற நாலு ஜாதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவைகள் ஒவ்வொன்றும் பெறும் அலகு முறைகளும் சுரக்கிரமமும் பெயர்களும் சொல்லப்படுகின்றன. இப்பதினாறு ஜாதிகளிலிருந்தும் உண்டாகக்கூடிய எவ்வேழு பண்கள் சொல்லப்படுகின்றன.

இவைகள் யாவையும் கவனிக்கையில் சுருதியைப் பற்றிச் சொல்லக்கூடிய முக்கிய அம்சங்களும் அவைகள் கிரகம் மாறும் வகையிலும் அவைகளைக் கொண்டு இராகங்கள் உண்டாகும் முறையிலும் மிக மேலானதாகவே சொல்லப்பட்டிருக்கிறதென்று நாம் காணலாம். ஒரு இராகம் 22 அலகுள்ளதாகப் பாடப்பட்டு வந்ததென்பதையும் மிகத் தெளிவாகக் காண்கிறோம்.

அவ்விதிப்படி பாடிவந்த இராகங்களின் பெயர்களும் ஆரோகண அவரோகண சுரங்களும் கிடைக்கவில்லையேயென்று விசாரிக்கையில் நால்வகை யாழில் பிறக்கும் பண்கள் பதினாறுக்கும் சுரங்களும் அலகு முறையும் காணக்கிடைத்தன. இதோடு 112 பண்களின் சுரக்கிரமம் கிடைக்கிறது. அவைகளுக்கு இன்னின்ன பண்கள் என்று மாத்திரம் சொல்லக்கூடவில்லை. என்றாலும் கோவலன் கதை சொல்ல வந்த இடத்தில் சங்கீதத்திற்குரிய இவ்வளவு விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறதென்று சந்தோஷப்பட வேண்டியதாயிருக்கிறது. உரையெழுதியவர்களின் அபிப்பிராய பேதங்கள் கொஞ்சம் கொஞ்சம் அங்கங்கேயிருப்பதாகக் காண்கிறோம். அவைகளினால் பூர்வம் இசைத் தமிழில் இன்னும் மேலான காரியங்களிருந்ததாகத் தெரிய வருகிறது. அவர்கள் எழுதிய உரைகளைக் கொண்டு பொதுவாய் அறியக் கூடியவைகளை இங்கு எழுதியிருக்கிறேன். இவைகளில் மறைந்திருக்கும் நுட்பமான சில பாகங்களை இதன் பின் பார்ப்போம்.