பக்கம் எண் :

585
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

இதை வாசிக்கும் அன்பர்களுக்குப் பூர்வம் தமிழ்மக்கள் இசைத் தமிழில் இவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்தார்களா? நாலுவித யாழ்கள் அக்காலத்திலிருந்தனவா? அவைகளில் பழகி வந்த விபரம் எப்படி என்று விசாரிக்கும் எண்ணம் வரும். சுருதிகளைப் பற்றியும், சுரங்களின் பொருத்தங்களைப் பற்றியும் எவ்வளவு அறிவு பெற்றிருந்தார்களோ அதற்கேற்ற விதமாய் யாழில் ஓசைகள் இனிமை பெற உண்டாவதற்கு அநேக விதிகள் சொல்லப்பட்டு வந்திருக்கிறதென்றும் அப்படியே கானம் செய்திருக்கிறார்களென்றும் பின்வரும் சில வரிகளில் பார்ப்போம்.

இதை வாசிக்கும் அன்பர்களே! பூர்வம் தமிழ்மக்கள் வழங்கி வந்த யாழ் வகைகளையும் இராகங்களையும் அறிவது கஷ்டமாயிருந்தாலும் ஒருவாறு அறிந்து கொள்ளுவதற்கு உதவியாயிருக்கும் சில சூத்திரங்களைச் சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்து இங்கு காட்டியிருக்கிறேன். இன்னும் இசைத் தமிழ்க்குரிய நுட்பமான பல அம்சங்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். சிலப்பதிகாரத்திற்குப் பின்னுள்ள சில தமிழ் நூல்களில் இசைத் தமிழைப் பற்றிச் சில குறிப்புகள் அங்கங்கே காணப்பட்டாலும் அவைகள் சங்கீதத்திற்கு முக்கிய ஆதாரமான சுருதிகளைப் பற்றியும் இராகங்கள் உண்டாவதைப் பற்றியும் கிரக சுரங்கள் மாற்றுவதைப் பற்றியும் அலகு முறைகளைப் பற்றியும் சொல்லாமல் வெளிப்படையான சில குறிப்புகளை மாத்திரம் சொல்லியிருப்பதினால் அம் மேற்கோள்களை இங்கு சொல்லவில்லை. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் சங்கீத விஷயமாக விசாரிக்க வேண்டிய முக்கிய அம்சங்களைத் தமது நூலில் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லிய கருத்துகளை உரையாசிரியர்கள் அக்காலத்தில் மிக அபூர்வமாய் வழங்கிய இசைத்தமிழ் நூல்களின் பல மேற்கோள்களைக் கொண்டு வெகு பிரயாசத்துடன் விளக்கியிருக்கிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் செய்யுளின் தலைப்பைச் சொல்லிப் புள்ளி போட்டிருக்கிறார்கள். இஃதில்லாதிருந்தால் முதல் ஊழியிலிருந்த அநேக காரியங்களை நாம் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.

முதல் ஊழியின் கடைசியில் தென் மதுரையில் அதாவது அழிந்து போன லெமூரியா நாட்டில் அரசாட்சி செய்து கொண்டிருந்த நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தில் சுமார் 4400 வருஷங்களாக நடந்து வந்த கல்வி அவையத்தில் அகத்தியர் மாணாக்கருள் ஒருவரான அதங்கோட்டாசான் முன்னிலையில் அரங்கேற்றிய தொல்காப்பியம் என்னும் சிறந்த இலக்கண நூலில் அகப்பொருள் இலக்கணத்தில் நால்வகை நிலங்களின் கருப்பொருள் சொல்ல வந்த இடத்தில் நால் வகை நிலங்களுக்கும் நால்வகை யாழ் சொல்லுகிறார். இந் நால்வகை யாழ்கள் வட்டப் பாலையில் உண்டாகுவதைப் பற்றியும் அவைகளில் நாலு ஜாதிகள் பிறப்பதைப் பற்றியும் மற்றும் அவற்றிற்குச் சம்பந்தமான முக்கிய அம்சங்களைப் பற்றியும் இளங்கோவடிகள் சொல்லுகிறார். இளங்கோவடிகளுக்கு வெகு காலத்திற்குப் பின்னுள்ள ஜயங் கொண்டான் கவிச்சக்கிரவர்த்தியும் அடியார்க்கு நல்லாரும் இசைத் தமிழில் வழங்கி வந்த பல அரிய விஷயங்களை உரையாக எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருக்கும் இசைத்தமிழ் குறிப்புகள் எவையோ அவற்றின் படியே இன்றைய வரைக்கும் கர்நாடக சங்கீதம் பாடப்பட்டு வருகிறதென்றும் சில சுரஞானமற்றவர்களினால் அதில் தேசிகக் கலப்பு வழங்கத் தலைப்பட்டிருக்கிறதென்றும் அறிகிறோம். சுமார் 12000 வருஷங்களாக இசைத் தமிழின் உன்னத நிலையை இங்கே நாம் காண்கிறோம். இதில் சொல்லாமற் சொல்லியிருக்கும் சில ரகசியங்களையும் அக்காலத்தில் வழங்கிவந்த இசைத்தமிழ் கலைகளையும் பற்றி அறிவது அவசியமென்று நினைக்கிறேன். என்றாலும் நாம் எடுத்துக் கொண்ட சுருதி நிச்சயத்திற்கு இது அடுத்த பொருளாயிருப்பதினால் அவைகளைப் பற்றி நான் அதிகம் சொல்லாமல் சிலப்பதிகாரத்தில் அங்கங்கே காணப்படும் சிற்சில சூத்திரங்களையும் உரைகளையும் உள்ளபடியே சேர்த்திருக்கிறேன். அவைகளைக் கொண்டு மற்றும் விபரங்களை அறிய விரும்புவோர் சிலப்பதிகாரத்தில் அறிந்து கொள்ளலாம்.