II. பண்டைத் தமிழ்மக்கள் தேர்ச்சிப்பெற்றிருந்த இசைத்தமிழில் வழங்கிவந்த சில கலைகளின் விபரம். இதன் முன் தென்னிந்தியாவின் பூர்வ தமிழ் மக்கள் பயின்று வந்த இசைத்தமிழில் வழங்கி வந்த சுருதி முறையையும் அவர்கள் கிரக மாற்றுவதினால் உண்டாகும் வலமுறை திரிந்த பாலைகளையும் இடமுறை திரிந்த பாலைகளையும் அவை ஒவ்வொன்றில் பிறக்கும் பண்களையும் மருதம், குறிஞ்சி, நெய்தல், பாலை என்னும் யாழ் வகைகளையும் அவைகளில் பிறக்கும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் நாலு ஜாதிகளையும் அவைகளின் அலகு முறைகளையும் பார்த்தோம். இவ்வளவு விஸ்தாரமான இசைத் தமிழின் இயல்புக்கிணங்க. யாழ்கள் அமைத்து அவைகளில் நாற்பத்தொன்பது விதமான அழகு தோன்றப் பாடிக் கொண்டிருந்தார்களென்றும் இன்னின்ன தாளங்களில் அமைத்துப் பாடினார்களென்றும் பாடிய பாடலுக்கிணங்க தாள அமைதி மிக விரிவாய்ச் செய்திருந்தார்களென்றும் பாடலுக்கிணங்க ஆடலிலும், அப்பாட்டின் பொருளுக்கிணங்க நவரசம் விளைக்கும் அபிநயத்திலும் தேர்ந்திருந்தார்களென்றும் அவைகளில் ஒவ்வொன்றும் மிக விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் அறிகிறோம். சுருதியைப் பற்றி அறிய வேண்டியதே நமது முக்கிய கடமையாயினும் பூர்வ தமிழ் மக்கள் சுருதியைப் பற்றி எவ்வளவு நுட்ப அறிவுடையவர்களாயிருந்தார்களோ அதைச் சேர்ந்த மற்றும் கலைகளிலும் அவ்வளவு தேர்ந்தவர்களாயிருந்தார்களென்றும் பூர்வமாகவே இசைத் தமிழிலும் அதற்குரிய கலைகளிலும் தேர்ந்திருந்தார்களென்றும் எவரிடத்திலிருந்தும் இரவல் வாங்க வில்லையென்றும் மற்ற யாவரும் இவர்களிடத்திலிருந்து இரவல் வாங்கியிருக்க வேண்டுமென்றும் யாவரும் அறிவதற்காகவே சில சொல்ல வேண்டியது அவசியமாயிற்று. I. யாழ் வகை. முதலூழியில் வழங்கி வந்த யாழ்களைப் பற்றியும், அவைகளுக்கு இத்தனை தந்திகளிருந்தனவென்பதைப் பற்றியும் சொல்லுகிறார். சிலப்பதிகாரம் உரைப்பாயிரம் பக்கம், 5. உதயணன் கதை, வத்தவ காண்டம், யாழ்பெற்றது :- "தலமுத லூழியிற் றானவர் தருக்கறப் புலமக ளாளர் புரிநரப் பாயிரம் வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச் செலவுமுறை யெல்லாஞ் செல்கையிற் றெரிந்து மற்றை யாழுங் கற்றுமுறை பிழையான் பண்ணுந் திறனுந் திண்ணிதிற் சிவணி வகைநயக் காணத்துத் தகைநய நவின்று நாரத கீதக் கேள்வி நுனித்துப் பரந்தவந் நூற்கும் விருந்தின னன்றித் தண்கோ சம்பி தன்னக ராதலிற் கண்போற் காதலர்க் காணிய வருவோன் கார்வளி முழக்கி னீர்நசைக் கெழுந்த யானைப் பேரினத் திடைப்பட் டயலதோர் கான வேங்கைக் கவர்சினை யேறி யச்ச மெய்தி யெத்திசை மருங்கினு நோக்கினன்"
|