சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை பக்கம், 81. "யாழ் நால் வகைப்படும்; அவை பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழென்பன, இவை நாலும் பெரும் பான்மை; சிறுபான்மையான் வருவனவுமுள; என்னை? "பேரியாழ் பின்னு மகரஞ் சகோடமுடன் சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார்-தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே பின்னு முளவே பிற" என்றாராகலின். இந்நால்வகை யாழிற்கும் நரம்பு கொள்ளுமிடத்துப் பேரியாழிற்கு இருபத்தொன்றும், மகர யாழிற்குப் பதினேழும், சகோட யாழிற்குப் பதினாறும், செங்கோட்டி யாழிற்கு ஏழுங்கொள்ளப்படும்." மேற்கண்ட வரிகளில் பேரியாழ் முதலிய நாலு யாழ்களுக்கும் முறையே 21, 17, 16, 7 என்னும் நரம்புகளிருந்ததாகச் சொல்லுகிறார். பூர்வத்தில் ஆயிரம் தந்திகள் பூட்டிய பெருங்கலமாகிய பேரியாழ் முதலிய யாழிருந்ததாகத் தெரிகிறது. ஆயிரந் தந்திகள் பூட்டிய பேரியாழ் போலவே இருபத்தொரு தந்திகள் பூட்டிய யாழும் பேரியாழ் என்று சொல்லப்பட்டது என்று தோன்றுகிறது. இதோடு பூர்வ காலத்தில் வெவ்வேறு விதமான யாழ்கள் இருந்ததாகப் பல நூல்களில் பார்க்கிறோம். இதில் செங்கோட்டி யாழ் என்பது செவந்த மரத்தாற் செய்யப்பட்டு ஏழு தந்திகளுடன் அதாவது இசை நரம்புகள் நாலும் பக்க நரம்புகள் மூன்று முடையதாய் தற்காலத்தில் நாம் வழங்கி வரும் வீணையென்பதாகத் தெரிகிறது. யாழி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் மேருவின் பக்கம் செய்யப்பட்டிருந்ததினால் யாழ் என்ற பெயர் வந்திருக்கலாமென்று தோன்றுகிறது. தற்காலத்தில் பலா மரத்தில் செய்யப்பட்டு வருகிறது. வட பாஷையில் அது வீணையென்று அழைக்கப்படுகிறது. இற்றைக்குச் சற்றேறக் குறைய 2000 வருஷங்களுக்கு முன்னுள்ள திருவள்ளுவ நாயனார் சொல்லியிருக்கும் திருக்குறளில் "குழல் இனிது யாழ் இனிது என்பர் தம் மக்கள், மழலைச்சொற் கேளா தவர்" என்று சொல்வதைக் கொண்டு அக்காலத்தில் வீணையென்ற சமஸ்கிருத பதம் வழங்கவில்லை யென்றும் அதன் பின்பே சமஸ்கிருத பதங்கள் இசைத் தமிழில் வந்து கலந்தனவென்றும் நாம் அறியலாம். இற்றைக்கு சுமார் 700, 800-வருஷங்களுக்கு முன்னிருந்தவராகச் சொல்லப்படும் கல்லாடர் என்பவர் எழுதிய புத்தகத்தின் 518, 519 ம் பக்கங்களில் உள்ள சில அகவல்களில் பேரியாழ், தும்புருயாழ், கீசகயாழ், மருத்துவயாழ் என்னும் 4 யாழ்களின் விபரம் சொல்லப்படுகிறது. அங்கே அவர் ‘வடமொழி விதித்த இசை நூல் வழக்குடன்’ என்று தொடங்குவதைக் கவனிக்கையில் பூர்வம் இசைத் தமிழில் வழங்கி வந்த சில வாத்தியக் கருவிகளும், பேணுவாரற்றுப் போன பின் பாதர் சங்கீத ரத்னாகரர் போன்ற மகான்கள் எழுதி வைத்த சாஸ்திரங்களின் உதவியைக் கொண்டு சொன்னதாகத் தெரிகிறது. என்றாலும் இவர் சொல்லிய நாரதயாழ், தும்புரு யாழ், கீசகயாழ், மருத்துவயாழ் என்னும் பெயர்களைக் கொண்டே அவை தமிழ் நாட்டுக்குரியவையென்று தோன்றுகின்றன. "தலமுத லூழியிற் றானவர் தருக்கறப், புலமக ளாளர் புரிநரப் பாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்" என்று சொல்லப்பட்டிருப்பதில் ஆயிரம் தந்தி பூட்டிய பேரியாழ் பூர்வம் லெமூரியா என்று அழைக்கப்படும் தென்மதுரை நாட்டில் தமிழ் மக்கள் பழகி வந்த வாத்தியக் கருவிகளில் ஒன்றென்று தெளிவாய்த் தெரிகிறது. அவை வெகு காலத்திற்கு முன் இல்லாமற் போனதினிமித்தம் சொல்லோடு மாத்திரம் நின்றன என்று தெரிகிறது. ஆனால் அதற்கு வெகு காலத்திற்குப் பின் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பரத சாஸ்திரம் எழுதிய பரதர்
|