பக்கம் எண் :

596
யாழ் வாசிக்கும் பொழுது தமிழ்மக்கள் கவனித்துவந்த சில முக்கிய குறிப்புகள்.

என்றார் சிந்தாமணியிலும்; [காந் - 236] மணமகளிர் - கலியாண மகளிர். பத்தர்கோடு ஆணி நரம்பு என்பன யாழுறுப்புகள்;

“கோடே பத்த ராணி நரம்பே
மாடக மெனவரும் வகையின தாகும்.”

என்பதனாலறிக. தொழுது - யாழ், மாதங்கியென்னும் தெய்வமிருத்தற் கிடமென்று நூல்கள் கூறுமாதலின் அதனைத் தொழுது. வாங்கி - வயந்தமாலை கையினின்றும் வாங்கி.

சிலப்பதிகாரம் உரைப்பாயிரம், பக்கம் 4.

இவற்றுட் பெருங்கலமாவது பேரியாழ்; அது கோட்டினதளவு பன்னிருசாணும் வணரளவு சாணும் பத்தரளவு பன்னிரு சாணும் இப்பெற்றிக்கேற்ற ஆணிகளும், திலவும் உந்தியும் பெற்று ஆயிரங்கோல் தொடுத்தியல்வது; என்னை?

“ஆயிர நரம்பிற் றாதியா ழாகு
மேனை யுறுப்பு மொப்பன கொளலே
பத்தர தளவுங் கோட்டின தளவு
மொத்த வென்ப விருமூன் றிரட்டி,
வணர்சா ணொழித்தென வைத்தனர் புலவர்.”

தமிழ் மக்கள் பாட ஆரம்பிக்கும்பொழுது அபசுரங்கள் வராமலும் ஜீவசுரங்கள் குறையாமலும் அவதாளங்கள் நேரிடாமல் தாளத்தோடு சேர்ந்து நன்மையான யாவும் வளர்ந்தோங்கவும் தீமையான யாவும் தங்களைவிட்டு நீங்கவும் தெய்வத்தைத் துதிக்கும் பாடல்களைப் பாடினார்களென்றும் அவர்கள் பாடும்பொழுது குழற் பாடலோடு யாழ்ப் பாடல் ஒத்திருந்த தென்றும் தண்ணுமையென்ற மிருதங்கம் அதோடு பொருந்தியிருந்ததென்றும் அடியில்வரும் பாடலில் சொல்லப்படுகிறது. இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து வாசிக்கும் வழக்கம் தற்காலத்தில் காண்பதரிது.

சிலப்திகாரம் அரங்கேற்று காதை, பக்கம் 100.

“சீரியல் பொலிய நீரல நீங்க
வாரமி ரண்டும் வரிசையிற் பாடப்
பாடிய வாரத் தீற்றினின் றிசைக்குங்
கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங்
குழல்வழி நின்றதி யாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவோடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை"

சீரியல் பொலிய நீரல நீங்க, வாரமிரண்டும் வரிசையிற் பாடவென்பது நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் இரண்டினையும் பாடவென்றவாறு.

இனிச் சீரியல்பொலிய நீரலநீங்க வென்பதற்குத் தாளவியல்பு பொலிவுபெற அவதாள நீங்கவென்றுமாம். வாரமிரண்டாவன ஓரொற்று வாரம் ஈரொற்றுவாரமென்னுஞ் செய்யுள். அவை தாளத்து ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் பெற்று வரும்.

பாடிய வாரத்தீற்றினின் றிசைக்குங் கூடிய குயிலுவக் கருவிகளெல்லா மென்பது தெய்வப்பாடலின் இறுதியிலே நின்று கூடி இசையா நிற்கும் கருவிகளெல்லாமென்றவாறு.

இக்கருவிகள் எவ்வண்ணங் கூடி இசைத்தனவோ வெனின்.

‘குழல்வழி நின்றது யாழே’ என்பது வங்கியத்தின் வழியே நின்றது யாழ்ப்பாடலென்றவாறு.