பக்கம் எண் :

606
தென்னிந்தியாவில் வழங்கிவந்த அபிநயத்தின் சுருக்கம்.

விருத்தி நான்கு வகைப்படும். அவை சாத்துவதி, ஆரபடி, கைசிகி, பாரதியெனவிவை. இவற்றுள் சாத்துவதியாவது அறம் பொருளாகத் தெய்வ மானிடர் தலைவராக வருவது. ஆரபடியாவது பொருள் பொருளாக வீரராகிய மானிடர் தலைவராக வருவது. கைசிகியாவது காமம் பொருளாகக் காமுகராகிய மக்கள் தலைவராக வருவது பாரதியாவது கூத்தன் தலைவனாக நடன் நடி பொருளாகக் காட்டியும் உரைத்தும் வருவது. இச்சொல்லப்பட்ட நால்வகை விருத்தியுள்ளும் பாரதி விருத்தி, அந்த மூன்று விருத்தியும் போல ப்பிறிதின் றலைவர் பிறிது பொருள் பற்றி விருத்தி கூறாது பொருளாலே விருத்தி கூறுமெனக் கொள்க.

சந்தி ஐந்து வகைப்படும். அவை முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தலெனவிவை. இவற்றுள் முகமாவது எழுவகைப்பட்ட உழவினாற் சமைக்கப்பட்ட பூழியுளிட்ட வித்துப் பருவஞ் செய்து முளைத்து முடிவது போல்வது. கருப்பமாவது அந்நாற்று முதலாய்க் கருவிருந்து பெருகித் தன்னுட் பொருள் பொதிந்து கருப்பமுற்றி நிற்பது போல்வது. விளைவாவது கருப்பமுதலாய் விரிந்து கதிர் திரண்டிட்டுக் காய் தாழ்ந்து முற்றி விளைந்து முடிவது போல்வது. துய்த்தலென்பது விளையப்பட்ட பொருளை அறுத்துப் போரிட்டுக் கடாவிட்டுத் தூற்றிப் பொலி செய்து கொண்டு போய் உண்டு மகிழ்வது போல்வது. இவை ஐந்து சந்தியும் நாட்டியக் கட்டுரை."

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, பக்கம் 66-67.

சுவை ஒன்பது வகைப்படும் அவை :-

1.வீரச்சுவை யவிநயம்.4.அற்புதச்சுவை யவிநயம்.7.நகைச்சுவை யவிநயம்.
2.பயச்சுவை யவிநயம்.5.இன்பச்சுவை யவிநயம்.8.நடுவு நிலைச்சுவை யவிநயம்.
3.இழிப்புச்சுவை யவிநயம்.6.அவலச்சுவை யவிநயம்.9.உருத்திரச்சுவை யவிநயம்.

இவற்றுள் :-

1. வீரச்சுவை யவிநயம்.

"வீரச்சுவை யவிநயம் விளம்புங் காலை
முரிந்த புருவமுஞ் சிவந்த கண்ணும்
பிடித்த வாளுங் கடித்த வெயிறு
மடித்த வுதடுஞ் சுருட்டிய நுதலுந்
திண்ணென வுற்ற சொல்லும் பகைவரை
யெண்ணல் செல்லா விகழ்ச்சியும் பிறவு
நண்ணு மென்ப நன்குணர்ந் தோரே."


2. பயச்சுவை யவிநயம்.

"அச்ச வவிநய மாயுங் காலை
யொடுங்கிய வுடம்பு நடுங்கிய நிலையு
மலங்கிய கண்ணுங் கலங்கிய வுளனுங்
கலந்துவர லுடைமையுங் கையெதிர் மறுத்தலும்
பரந்த நோக்கமு மிசைபண் பினவே."


3. இழிப்புச்சுவை யவிநயம்.

"இழிப்பி னவிநயம் மியம்புங் காலை
யிடுங்கிய கண்ணு மெயிறுபுறம் போதலு
மொடுங்கிய முகமு முஞற்றாக் காலுஞ்
சோர்ந்த யாக்கையுஞ் சொன்னிரம் பாமையு
நேர்ந்தன வென்ப நெறியறிந் தோரே."