பக்கம் எண் :

605
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

"பல்வகை யுருவமும் பழித்துக் காட்ட
வல்ல னாதல் வகையெனப் படுமே."

"எனவிவை தாளத்தி னியல்பின வாகும்."

"விநோதக் கூத்து வேறுபா டுடைத்து
வென்றி விநோதக் கூத்தென விளம்புவர்."

இதன் கருத்து : கொடித்தேர் வேந்தரும் குறுநிலமன்னரு முதலாக உடையோர் பகை வென்றிருந்தவிடத்து விநோதங் காணுங் கூத்தென்பதாம்.

13. விலக்கினிற் புணர்ந்து-விலக்குறிப்பினோடு பொருந்துவித்து: இன்-சாரியை; மூன்றனுருபு ஐந்தனோடு மயங்கிற்று; வென்றிக் கூத்து முதலாகிய பல வகைப்பட்ட புறநடங்களையும் வேந்து விலக்குப் படை விலக்கு ஊர் விலக்கென்று சொல்லப்பட்ட விலக்குளாகிய பாட்டுக்களுக்கு உறுப்பாய் வருவனவற்றுடனே பொருந்தப்புணர்த்தி. பொருந்தப்புணர்த்தல்-ஈண்டுப் பாட்டுகளுக்கு வரவு வகுத்தல்.

விலக்குறுப்பாவன :- பதினான்கு வகைப்படும்; அவை பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதமென விவை; என்னை?

"விலக்குறுப் பென்பது விரிக்குங் காலைப்
பொருளும் யோனியும் விருத்தியுஞ் சந்தியுஞ்
சுவையுஞ் சாதியுங் குறிப்புஞ் சத்துவமு
மவிநயஞ் சொல்லே சொல்வகை வண்ணமும்
வரியுஞ் சேதமு முளப்படத் தொகைஇ
யிசைய வெண்ணி னீரே ழுறுப்பே."
என்றாராகலின்.

அவற்றுள் :- பொருளாவது நான்கு வகைப்படும்; என்னை?

"அறம்பொரு ளின்பம் வீடென நான்குந்
திறம்படு பொருளெனச் செப்பினர் புலவர்."
என்றாராகலின்.

இவை நாடகத்திற் பிரிந்துங் கூடியும் வருங்காற் பெயர் வேறுபடும். அவை நாடகம், பிரகரணப் பிரகரணம், பிரகரணம், அங்கமெனப் பெயராம்; என்னை?

"அவைதாம், நாடகம் பிரகர ணப்பிர கரண
மாடிய பிரகரண மங்க மென்றே
யோதுப நன்னூ லுணர்ந்திசி னோரெ."
என்றார் மதிவாணனாரும்.

"அறமுத னான்கு மொன்பான் சுவையு
முறைமுன் னாடக முன்னோ னாகும்"
எனவும்,

"அறம்பொரு ளின்ப மரசர் சாதி" எனவும்,

"அறம்பொருள் வாணிகர் சாதியென் றறைப" எனவும்,

"அறமேற் சூத்திர ரங்க மாகும்" எனவும் சொன்னார் செயிற்றியனார் இவை நான்கும் நாடகமென்றறிக.

யோனி நான்கு வகைப்படும் உள்ளோன் தலைவனாக உள்ளதோர் பொருண் மேற்செய்தலும், இல்லோன் றலைவனாக உள்ளதோர் பொருண்மேற் செய்தலும், உள்ளோன் தலைவனாக இல்லதோர் பொருண்மேற் செய்தலு மெனவிவை; என்னை?

"உள்ளோற் குள்ளது மில்லோற் குள்ளது
முள்ளோற் கில்லது மில்லோற் கில்லது
மெள்ளா துரைத்தல் யோனி யாகும்."
என்றாராகலின்.