அவைகள் ஒவ்வொன்றிற்கும் பொருத்தம் இன்னதென்றும் வலிவு மெலிவு சமம் என்னும் மந்தர மத்திய தாரஸ்தாயிகளில் எதுவரையும் சுரங்கள் வருகின்றனவென்றும் ஆரோகண அவரோகண சுரங்கள் இன்னின்ன. சுவையைக் கொடுக்கக் கூடுமென்றும் திட்டமாய் அறிந்து ஆளத்தி செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார். முதலும் முறைமையும் முடிவுமென்பது நால்வகை யாழின் நாலு ஜாதிப் பண்களில் துவங்கும் சுரம் இன்னதென்றும் அதன் பின் வரும் சுரமுறைமை இன்னதென்றும் முடிக்கும் சுர மின்னதென்றும் தோன்றுகிறது. நிறைவும் குறைவும் என்பது இரண்டு இரண்டாய் அல்லது நாலு நாலாய் வரும் அலகுள்ள சுரங்களையும் அதுவன்றி ஒற்றைப்பட்டு மூன்று மூன்று அலகாய் வரும் சுரங்களையும் குறிக்கும். சிலப்பதிகாரம் கானல்வரி, அரும்பதவுரை, பக்கம் 29. "விளரிப்பண் பண்ணினார் பாணர்." சிலப்பதிகாரம் கானல்வரி, பக்கம் 191. "நுளையர் விளரி நொடிதருந் தீம்பாலை" இதில் விளரிப்பண் என்பது இரங்கினார் பாடும் பண்ணாகும் என்று கவிச்சக்கிரவர்த்தி ஜயங் கொண்டான் சொல்லுகிறார். இதைக் கொண்டு ஒவ்வொரு யாழ் இடத்தும் வரும் ஒவ்வொரு ஜாதிப் பண்ணும் பல ரசங்களுக்கேற்ற விதமாய்த் தெரிந்து பாடப்பட்டதென்று தெரிகிறது. சுரங்கள் மாறும்பொழுது சுவையும் மாறும். பூர்வகாலத்தில் தமிழ் மக்கள் இராகங்கள் பாடும்பொழுது தாளத்தை அனுசரித்தே பாடினார்களென்றும் நாம் காண்கிறோம். தற்காலத்தில் சங்கீத வித்துவான்களிடத்தில் அவை காண்பதரிது. ஆனால் நாக சுரக்காரர்கள் நாளது வரையும் தாளத்தோடு வாசித்துக் கொண்டு வருவதை சாதாரணமாய் நாம் பார்க்கிறோம். மேலும் பாக்கள் செய்யும் ஒருவன் தான்பாட நினைத்த பண்ணின் ச,ரி, க, ம, ப, த, நி என்ற ஏழு எழுத்துக்களில் எந்த எழுத்தில் தாளம் விழுகிறதோ அந்த எழுத்தைத் தன் கவி அல்லது பாக்களில் அமைக்கத் தெரிந்தவனாயிருக்க வேண்டுமென்று சொல்லுகிறார். இம்முறைக்கிணங்க தற்காலத்தில் நடனம் ஆட்டி வைக்கும் சில அண்ணாவிகளும் நட்டுவர்களும் வர்ணங்களிலும் தானங்களிலும் சிட்டா சுரங்களிலும் செய்து வைத்திருக்கிறார்களென்றும் சாதாரணமாய்ப் பார்க்கிறோம். இதை அனுசரித்தே மற்றவர்களும் செய்திருக்கிறார்களென்று தெரிகிறது. பூர்வம் தமிழ் மக்கள் ஆளத்தி அல்லது ராகம் ஆலாபனம் செய்வதில் தேர்ந்தவர்களாயிருந்தார்கள் என்றும் அவர்கள் ஆளத்தி செய்வதற்குரிய அநேக நுட்பமான விதி வகைகளை அறிந்திருந்தார்களென்றும் மேற்காட்டிய சில சூத்திரங்களினால் குறிப்பாகக் காண்கிறோம். இதைக் கொண்டு பூர்வம் ஆளத்தி செய்யும் முறை மிக விரிவாயிருந்ததென்றும் பாட நினைத்த பண்ணின் பொருளுக்கேற்ற விதம் இராகங்கள் 12,000 இருந்தனவென்றும் காண்கிறோம். மேலும் சுமார் 200 வருஷங்களுக்கு முன் வரையிலும் ஒவ்வொரு ராகத்தையும் வந்தது வராமல் எட்டு நாள் பத்து நாள் தொடர்ந்து பாடினார்களென்றும் அதிலும் அதிக விஸ்தாரம் செய்யக்கூடியவர்களாயிருந்தார்களென்றும் கேள்விப்படுகிறோம். இதெல்லாம் நிற்க இராகம் ஆலாபிக்கத் தெரியாமல் வெறும் கீர்த்தனைகளை மாத்திரம் பல கலப்புடன் படித்துக் காலம் தள்ளும் சில புண்ணியவான்கள் பூர்வ காலத்தில் இராகம் விஸ்தரிப்பது இல்லவே இல்லையென்றும் இப்போது 40, 50 வருஷத்திற்குப் பின் தான் இராகம் ஆலாபிக்கும் முறை உண்டாயிற்றென்றும் சொல்லிக் கொள்ளுகிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆரோகண அவரோகண சுரத்தில் இராகம் உண்டாக்கவும் அதை பிரஸ்தரிக்கவும் கூடிய சாஸ்திர ஞானமில்லாததினால் இப்படிச் சொல்லுகிறார்களேயொழிய தெரிந்திருந்தால் இப்படிச் சொல்லமாட்டார்கள்.
|