இராகத்தோடு சொல்லப்படும் வார்த்தைகளின் முடிந்த எழுத்துக்கள் அ, இ, உ, எ, ஒ என்ற குறிலாலும் அவற்றின் நெடிலாலும் நாளது வரையும் அகாரமாய் இராகச் சாயை தோன்றும்படி பாடிக் கொண்டிருக்கிறோமென்பதையும் சரளி வரிசையும் இவ்வெழுத்துக்களில் பழகுகிறோமென்பதையும் தம், நம், இம் என்ற பதங்களையே இராகம் ஆலாபிக்கும்பொழுது உபயோகித்துக் கொண்டிருக்கிறோமென்பதையும் நாம் நன்றாய் அறிவோம். இராகங்களின் மத்திம காலமாகிய தானம் வாசிக்கும்பொழுது தனம், தனம், த அ அ, ன அ அ, ம் ம் ம் என்றே இன்றைக்கு நாம் பாடுவதையும் மெய் எழுத்துகள் பதினெட்டுள்ளும், மவ்வும், நவ்வும், தவ்வுமென்னும் மூன்று எழுத்தினமுமன்றி மற்ற எழுத்துக்கள் ஆளத்திக்கு வரப்பெறா என்பதையும் "நின்றார்ந்த மந்ந தாம் தவ்வொடு நன்றாகா" என்னும் சூத்திரத்தையும் கவனிக்கையில் பல ஆயிர வருஷங்களுக்கு முன் பாடிக் கொண்டிருந்த தமிழ் இசையின் இலக்கணமே இப்பொழுதும் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வருகிறதென்று தெளிவாய்க் காண்கிறோம். "பாவோ டணைத லிசையென்றார் பண்ணென்றார் மேவார் பெருந்தான மெட்டானும்-பாவா யெடுத்தன் முதலா விருநான்கும் பண்ணிப் படுத்தமையாற் பண்ணென்றும் பார்" பல இயற்பாக்களுடனே நிறத்தை இசைத்தலால் இசையென்று பெயராம். பெருந்தான மெட்டினும் கிரியைகளெட்டாலும் பண்ணிப்படுத்தலாற் பண்ணென்று பெயராயிற்று. பெருந்தான மெட்டாவன: நெஞ்சும் மிடறும் நாக்கும் மூக்கும் அண்ணாக்கும் உதடும் பல்லும் தலையுமெனவிவை. கிரியைகளெட்டாவன: எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு எனவிவை." சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 8. இசையோன் வக்கிரித் திட்டதையுணர்ந்தாங், கசையா மரபினது பட வைத்தென்பது இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர்மையை முதலும், முறைமையும் முடிவும் நிறைவும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையுமென்னும் பதினொரு பாகு பாட்டினானுமறிந்து அவன் அவை தாள நிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியினிடத்தே தோன்ற வைக்க வல்லனாயென்றவாறு. மேற்கண்ட ஆளத்தியின் இலக்கணத்தைக் கவனித்தால் குற்றெழுத்தோடு சொல்லப்படுவதொன்றும் நெட்டெழுத்தோடு சொல்ப்படுவதொன்றுமாக இரண்டு விதம் சொல்லுகிறார். அவை அச்சென்றும், பாரணையென்றுமாம். அவற்றுள் அச்சாவது, அகாரமாகத் தாளத்துடன் நிகழ்வதாம். பாரணையோ நெடிலாய் அகண்டமான ஓசையுடன் கூத்துடன் நிகழ்வதாம். இவைகளில் முந்தினதைக் காட்டாளத்தியென்றும், பிந்தினதை நிறவாளத்தியென்றும் சொல்லுகிறார். நெடில் குறில் இரண்டையுஞ்சேர்த்து தென்னா தெனாவென்று பாடப்படும் என்கிறார். பண்ணாளத்தி பண்ணையே கருதி அதாவது பாவோடு பொருந்தினதாய் அவற்றின் பொருளை மனக்கருத்திற் கொத்தவாறு இன்னிசை பிறக்கப் பெருந்தான மெட்டினும் கிரியைகளெட்டாலும் விளங்க வைப்பதென்று அர்த்தமாம். ஆலாபனஞ் செய்வதற்கு ஏற்றவிதமான இலக்கணங்கள் சொன்னது போலவே யாழிடத்தும் பாடுவதற்கேற்ற சில முக்கிய குறிப்புகள் சொல்லுகிறார். மேலும் ஆளத்தி செய்யும்பொழுது எந்தப் பண்ணை அதாவது வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பாக்களில் எதனையெடுத்துக் கொள்வானோ அதன் சீர்களுக்கும் அடிகளுக்கும் பொருளுக்கும் ஏற்ற விதமாய் இராகத்தைத் தெரிந்து கொண்டு அவ்விராகத்தின் ஆரோகண அவரோகண சுரங்கள் இன்னவையென்று முதல் முதல் தெரிந்து அவற்றில் பூர்ண சுரங்கள் இன்னவையென்றும் குறைந்த சுரங்கள் இன்னவையென்றும்
|