ஆளத்தி (ஆலாபனம்.) சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை, பக்கம் 85. இனி ஆளத்தியாமா றுணர்த்துகின்றது. "மகரத்தி னொற்றாற் சுருதி விரவும் பகருங் குறினெடில் பாரித்து-நிகரிலாத் தென்னா தெனாவென்று பாடுவரே லாளத்தி மன்னாவிச் சொல்லின் வகை." முதற்பாடுமிடத்து மகரத்தி னொற்றாலே நாதத்தை யுச்சரிக்கு மரபுபகரிற் பாரித்து முற்கூறிய நாதத்தினைத் தொழில் செய்யுமிடத்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலுஞ் செய்யப்படும். அவை அச்சு பாரணையென்று பெயர் பெறும். அச்சுக்கு எழுவாய் குற்றெழுத்து. பாரணைக்கு எழுவாய் நெட்டெழுத்து. அச்சு தாளத்துடனிகழும். பாரணை கூத்துடனிகழும். ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னாவென்றும் தெனாவென்றும் இரண்டசையுங்கூட்டித் தென்னாதெனாவென்றும் பாடப்படும். இவை தாம் காட்டாளத்தி, நிறவாளத்தி, பண்ணாளத்தி யென மூன்று வகைப்படும். இவற்றுட் காட்டாளத்தி அச்சுடனிகழும். நிறவாளத்தி நிறங்குலையாமற் பாரணையுடனிகழும். பண்ணாளத்தி பண்ணையே கருதி வைக்கப்படும். மேற்கண்ட சூத்திரத்தில் "மகரத்தினொற்றாற் சுருதி விரவும்" என்பதைக் கொண்டு முதற்பாட ஆரம்பிக்கும் பொழுது மகரத்தினொற்றாலே நாதத்தை இம் என்று உச்சரித்து அதன் பின் நெடில் குறில் எழுத்துக்கள் உச்சரிக்கப்படும் என்பதாகச் சொல்லப்படுகிறது. இராகம் பாட ஆரம்பிக்கும் ஒருவன் தான் எடுத்துக் கொண்ட இராகத்திற்கு ஜீவ சுரமாய் விளங்கும் முக்கிய சுரத்தை ஆதார ஷட்ஜம சுரத்திலிருந்து இம் என்று கமகமாய்ப் பிடித்து அதன் மேல் த அ அ அம் என்றாவது ந அ அ அ ம் என்றாவது தனம் என்றாவது பாடுவது வழக்கம். ஆரம்பிக்கும் ஓசை மூலாதாரத்திலிருந்து வரக்கூடிய எழுத்தாகிய ம் என்று தெரிந்து கொண்டதையும் அவ்வெழுத்து பிரணவ அட்சரத்திலும் மற்றும் மந்திரங்களிலும் முக்கியம் பெற்றிருப்பதையும் நாளது வரையும் கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வருகிறதையும் நாம் நுட்பமாய்க் கவனிக்க வேண்டும். ஆரம்பிக்கும் ஓசையையும் அதன் பின் ஆளத்திக்கு வரும் எழுத்துக்களின் இலக்கணங்களையும் நாம் கவனிப்போமானால் இசைத் தமிழ் இலக்கணம் தவிர வேறொன்றும் இவ்வளவு நுட்பமாய்ச் சொல்லியிருக்க மாட்டாதென்பது விளங்கும். "குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்து நின்றார்ந்த மந்நதாந் தவ்வொடு-நன்றாக நீளத்தா லேழு நிதானத்தா னின்றியங்க வாளத்தி யாமென் றறி". என்பது ஆளத்திக்கு இன்னும் படுவதோரிலக்கண முணர்த்துகின்றது. குன்றாக் குறிலைந்துங் கோடா நெடிலைந்துமென்பது குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் ஆளத்தி செய்யப்படும். எ-று. குற்றெழுத்தைந்தாவன : அ. இ. உ. எ. ஒ. நெட்டெழுத்தைந்தாவன: ஆ. ஈ. ஊ. ஏ. ஒ. எனவிவை. நின்றார்ந்தவென்பது மெய்யெழுத்தாகிய பதினெட்டெழுத்தினுள்ளும் மவ்வும், நவ்வும், தவ்வுமென மூன்றெழுத்தினமு மல்லா மற்றையெழுத்துக்கள் ஆளத்திக்கு வரப்பெறா. ஏ-று. இம் மூவகை, மெய்யினுள்ளும் மவ்வினம் சுத்தத்திற் குரித்து; நவ்வினம் சரளகத்திற் குரித்து; தவ்வினம் தமிழ்க்குரித்து. விரவவும் பெறும். இங்ஙனம் மூலாதாரந் தொடங்கி எழுத்தினாதம் ஆளத்தியாய்ப் பின்னிசையென்றும் பண்ணென்றும் பெயராம். மேற்கண்ட சில வரிகளில் ஆளத்தி செய்யும்பொழுது அ, இ, உ, எ, ஒ என்ற குறில் ஐந்தும் அவற்றின் நெடிலும் மவ்வும், நவ்வும், தவ்வும் என்ற மூன்று மெய் எழுத்துக்களும் ஆக 13 எழுத்துக்கள் வரவேண்டுமென்றும் மற்றவை வரமாட்டாவென்றும் சொல்லுகிறார்.
|