என்னை? "ககரங் கொட்டே யெகர மசையே யுகரந் தூக்கே யளவே யாய்தம்" என்றாராகலின். இவற்றின் தொழில் வருமாறு; கொட்டாவது அமுக்குதல்; அசையாவது தாக்கி எழுதல்; தூக்காவது தாக்கித் தூக்குதல்; அளவாவது தாக்கின ஓசை நேரே மூன்று மாத்திரை பெறுமளவும் வருதலெனக் கொள்க. அரை மாத்திரையுடைய ஏகதாள முதலாகப் பதினாறு மாத்திரையுடைய பார்வதிலோசன மீறாகச் சொன்ன நாற்பத்தொரு தாளமும் புறக்கூத்திற்குரிய; ஆறன் மட்டமென்பனவும் எட்டன் மட்டமென்பனவும் தாளவொரியலென்பனவும், தனிநிலை யொரியலென்பனவும், ஒன்றன் பாணி முதலாக எண் கூத்துப் பாணியீறாகக் கிடந்த பதினொரு பாணி விகற்பங்களும் முதனடை வா, முதலாயினவும் அகக்கூத்திற்குரிய வென்க. தூக்குமென்பது இத்தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத் தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கெனப்பட்ட ஏழு தூக்குகளுமென்க; "ஒருசீர் செந்தூக் கிருசீர் மதலை முச்சீர்; துணிபு நாற்சீர் கோயி லைஞ்சீர் நிவப்பே யறுசீர் கழாலே யெழுசீர் நெடுந்தூக் கென்மனார் புலவர்" என்றாராகலின். கூடிய நெறியினவென்பது முற்சொல்லப்பட்ட கூத்தும் பாட்டும் தாளமும் தூக்கும் தம்மிற் கூடின நெறியையுடைய அகக்கூத்தும் புறக்கூத்து முதலாயினவுமென்க." சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 9. "வாங்கிய...............................சேர்த்தியென்பது அப்படி நிகழ்ந்த உருக்களில் யாழ்ப் பாடலும், குழலிசையும் கண்டப் பாடலும் இயைந்து நடக்கின்றபடி கேட்போர்க்குச் செவி கொள்ளா நிற்கத் தண்ணுமைக் கருவியமைந்த கரணத்தாற் குறியறிந்து சேரவாசிக்க வல்லனாயென்ற வாறு." மேற்கண்ட சில வரிகளைக் கவனிக்கையில், அரை மாத்திரையையுடைய ஏகதாள முதல் பதினாறு மாத்திரையையுடைய பார்வதிலோசனம் ஈறாகவுள்ள நாற்பத்தொரு தாளங்களும், கீதாங்கம், நிருத்தாங்கம், உபாங்கம் என்னு மூன்றிற்கும் உபயோகிக்கப்பட்டு வந்தனவென்றும் அகத்திய மாமுனிவர் ராஜசேகர பாண்டியனுக்குக் கற்றுக் கொடுத்த நூற்றெட்டுத் தாளங்களும் கீதத்திலும் நடனத்திலும் வழங்கி வந்தனவென்றும் காண்கிறோம். ஏகதாளத்தில் பாடும் வழக்கமுடையோருக்கு இவை பைத்தியம் போல் தோன்றும். தாளத்தின் அங்கங்களையும் அவைகளின் பிரஸ்தாரங்களையும், அவைகளுக் கேற்பட்ட சொல்லுக் கட்டுகளையும் கவனிப்போமானால் தென்னிந்திய சங்கீதம் மிகவும் மேலான நிலையிலிருந்ததென்று நாம் சொல்லவும் வேண்டுமோ? அவற்றில் மிக உன்னதமான பாண்டித்தியத்தைப் பல்லவி பாடுவதிலும் நடனத்திலும் அறியலாமேயொழிய சொல்லிக்காட்டுவது இலகுவல்ல. இத்தாள இயல்புக் கிணங்க அபிநய சாஸ்திரமும் மிகவும் விரிவாயிருந்ததாகத் தெரிகிறது. 6. ஆளத்தி செய்யும் முறை; அதாவது, இராகம் ஆலாபனஞ்செய்யும் முறை. ஆளத்தி என்று சொல்லப்படும் ஆலாபனத்தைப் பற்றி நாம் அறிவோம். அவற்றிலுள்ள சில பிரிவுகளைப் பற்றியும் ஆலாபஞ் செய்யும் போது எந்தெந்த எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பின் வரும் வசனங்களில் தெளிவாய்த் தெரிந்து கொள்ளலாம்.
|