பக்கம் எண் :

615
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

நிசாளந் துடுமை சிறுபறை யடக்க
மாசி றகுணிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே"

என்றாராகலின். இவை அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமை முழவு, நாண் முழவு, காலைமுழ வென எழு வகைப்படும். அவற்றுள்

அகமுழவாவன :- முன் சொன்ன உத்தமமான மத்தளம் சல்லிகை இடக்கை கரடிகை பேரிகை படகம் குடமுழா வெனவிவை.

அகப்புறக் கருவியாவன :- முன் சொன்ன மத்திமமான தண்ணுமை தக்கை தகுணிச்ச முதலாயின.

புறமுழவாவன :- முன் சொன்ன அதமக் கருவியான கணப்பறை முதலியன.

புறக்கருவியாவன :- முற்கூறப்படாத நெய்தற்பறை முதலாயின.

பண்ணமை முழவாவன :- முன் சொன்ன வீரமுழவு நான்கும், அவையாவன முரசு நிசாளம் துடுமை திமிலையெனவிவை.

நாண்முழவாவன :- நாட்பறை; ஆவது நாழிகைப்பறை.

காலைமுழவாவன :- முன் துடியென்றது.

இனி இவற்றுள் மத்தளம் மத்து ஓசைப் பெயர்; இசையிடனாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலான் மத்தளமென்று பெயராயிற்று. இக்கருவி பல கூத்திற்கும் உரித்தாகலானும் பாடல் எழுத்தான் உள்ளே பிறத்தலானும் முழவுகளெல்லாம் இதனுள்ளே பிறத்தலானும் இதனை நான்முகனாமென்றவாறு.

சல்லிகை என்பது சல்லென்ற ஓசையையுடைத்தாதலாற் பெற்ற பெயர்.

ஆவஞ்சியெனினும் குடுக்கையெனினும் இடக்கையெனினு மொக்கும்; அதற்கு ஆவினுடைய வஞ்சித் தோலைப் போர்த்தலால் ஆவஞ்சியென்று பெயராயிற்று; குடுக்கையாக வடைத்தலாற் குடுக்கையென்று பெயராயிற்று; வினைக்கிரியைகள் இடக்கையாற் செய்தலின் இடக்கையென்று பெயராயிற்று.

கரடி கத்தினாற் போலும் ஓசையையுடையத்தாதலாற் கரடிகையென்று பெயராயிற்று."

மேற்கண்ட வரிகளைக் கவனிக்கையில் முழவுகள் என்ற கொட்டுங் கருவிகளை (1) அக முழவு (2) அகப்புறமுழவு (3) புறமுழவு (4) புறப்புறமுழவு (5) பண் அமைமுழவு (6) நாண்முழவு, (7) காலைமுழவு என ஏழு வகையாகப் பிரித்துச் சொல்லுகிறார். இவையும் பாலை மருதம் குறிஞ்சி நெய்தல் என நான்கு நிலங்களுக்கும், காலை மாலை நண்பகல் என்னுங் காலங்களுக்கும், வெற்றி வீரம் இன்ப துன்ப முதலிய ரசங்களுக்கும், கூத்திற்கும் ஏற்றதாய்ச் செய்யப்பட்டு வழங்கி வந்தனவென்றும் நாமறிய வேண்டும்.

5. தென்னிந்தியாவில் வழங்கிய தாளத்தைப் பற்றியச் சுருக்கம்.

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, பக்கம் 73.

"பாணியுமென்பது தாளங்களுமென்றவாறு :-

"கொட்டு மசையுந் தூக்கு மளவு
மொட்டப் புணர்ப்பது பாணி யாகும்."

என்றாராகலின்.

இவை மாத்திரைப் பெயர்கள்; கொட்டு அரை மாத்திரை; அதற்கு வடிவு, க; அசை ஒரு மாத்திரை; அதற்கு வடிவு, எ; தூக்கு இரண்டு மாத்திரை; அதற்கு வடிவு, உ; அளவு மூன்று மாத்திரை அதற்கு வடிவு ஃ எனக் கொள்க.