தென்னிந்தியாவில் நடனத்தில் சிறந்தவளாகக் கொண்டாடப்படும் காளிதேவி, நடனத்தில் தன்னை ஜயிப்பார் ஒருவருமின்றித் திக்கு விஜயம் செய்து கொண்டு வருங்காலத்தில் சிதம்பரத்தில் நடராஜர் சந்தித்துக் கால் தூக்கி ஆடிய ஊர்த்தவதாண்டவத்தால் காளியை நாணமுற்றுத் தோல்வியடையச் செய்தாரென்று சொல்லப்படுகிறது. அத்தாண்டவத்தில் 93 விதங்கள் சிதம்பரம் கீழைக் கோபுரச் சுவரில் கல்லில் செதுக்கப்பட்டிருப்பதை இன்றும் பார்க்கலாம். 1913-1914க்குரிய Archaelogical Department G. O. No. 920 4th August 1914> ல் 82 ம் பக்க முதல் இவற்றை விபரமாய்க் காணலாம். மேலும் வாத்தியக் கருவிகளின் அம்சங்களிலும் இராகங்களின் தொகைகளிலும் அவைகள் பிறக்கும் முறைகளிலும் விரிவானவை குறுக்கப்பட்டும் பேர்கள் மாற்றப்பட்டும் உண்மையானவை மறைக்கப்பட்டும் போயினவென்று நாம் எண்ண வேண்டியதாயிருக்கிறது. திவாகர முனிவர் எழுதிய ஆதி திவாகரம் மிக விரிவாய் இருந்தது பற்றி அதைச் சுருக்கி அவர் குமாரர் பிங்கல முனிவர் பிங்கலந்தை நிகண்டு செய்தார் என்று சொல்வதைக் கொண்டும், அகத்திய மாமுனிவர் எழுதிய பேரகத்தியம் விரிவாயிருந்தது பற்றித் தொல்காப்பியர் அதைச் சுருக்கித் தொல்காப்பியம் என்னும் இலக்கணம் செய்தார் என்பதைக் கொண்டும் முன் ஊழியில் இருந்த அரிய விஷயங்கள் வரவரக் குறைந்து வந்திருக்கின்றனவென்று நாம் எண்ண வேண்டும். வாசிக்கும் கனவான்களே! தென்னிந்தியாவில் பூர்வத்தோர் அதிக செல்வமும் நீண்ட ஆயுளும், உத்தமநற்குணங்களும், தெய்வ பக்தியும், இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழில் மிகுந்த தேர்ச்சியும் பெற்றிருந்தார்களென்று நாம் அடிக்கடி பார்க்கிறோம். அப்படியே அவர்கள் தாங்கள் பாடும் சங்கீதத்திற்கு ஏற்ற கொட்டுங் கருவிகளிலும் தாளத்திலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர்களாயிருந்தார்களென்று நாம் அறிய வேண்டும். 4. தென்னிந்தியாவில் வழங்கிவந்த கொட்டுங் கருவிகள். எப்படி பரதத்தில் தேர்ந்திருந்தார்களோ, அப்படியே இன்னிசைக் கிசையக் கொட்டுங் கருவிகளைச் செய்து காலத்துக்கேற்பவும் கூத்துக்கேற்பவும் வழங்கி வந்தார்களென்று அடியில் வரும் சூத்திரங்களால் தெரிகிறது. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை, பக்கம் 86. "தாழ்குற்றண்ணுமை யென்பது தாழ்ந்த குரலினையுடைய தண்ணுமைக் கருவி முதலாயின வாசித்தலுமென்க. அவையாவன :- பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடுதூம்பு, நிசாளம், சிறுபறை, துடுமை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழி கைப்பறை, துடி, பெரும்பறை யெனத் தோலாற் செய்யப்பட்ட கருவிகள். என்னை? "பேரிகை படக மிடக்கை யுடுக்கை சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை திமிலை குடமுழாத் தக்கை கணப்பறை தமருகந் தண்ணுமை தாவி றடாரி யந்தரி முழவொடு சந்திர வளைய மொந்தை முரசே கண்விடு தூம்பு
|