பக்கம் எண் :

613
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

24. நஞ்சுண்டோனவிநயம்.

"கொஞ்சிய மொழியிற் கூரெயிறு மடித்தலும்
பஞ்சியின் வாயிற் பனிநுரை கூம்பலுந்
தஞ்ச மாந்தர் தம்முக நோக்கியோ
ரின்சொ லியம்புவான் போலியம் பாமையும்
நஞ்சுண் டோன்ற னவிநய மென்ப."
 

"சொல்லிய வன்றியும் வருவன வுளவெனிற்
புல்லுவழிச் சேர்த்திப் பொருந்துவழிப் புணர்ப்ப" எனவரும்.

இசை இலக்கணம்.

சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 8.

"ஆடல்பாட................................முதல்வனுமென்பது-எல்லாக் கூத்துக்களும் எல்லாப் பாட்டுக்களும் எல்லா விசைகளும் வடவெழுத் தொரீஇ வந்த எழுத்தாலே கட்டப்பட்ட ஓசைக் கட்டளைக் கூறுபாடுகளும் எல்லாப் பண்களும், இரு வகைத் தாளங்களும் எழுவகைத் தூக்குகளும். இவையிற்றின் முடங்களும் இயற்சொல், திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்னுஞ் சொற்களுமென்று சொல்லப்பட்டனவற்றை யுணர்ந்து ஓருருவை இரட்டிக்கிரட்டி சேர்த்தவிடத்து நெகிழாதபடி நிரம்ப நிறுத்தவும் அவ்விடத்துப் பெறுமிரட்டியை ஒப்பாக உருவான யழி நிற்குமான நிறுத்திக் கழியுமானங் கழிக்கவும் வல்லனாய் இப்படி நிகழ்ந்த உருக்களில் யாழ்ப் பாடலும் குழலின் பாடலும் கண்டப் பாடலும் இயைந்து நடக்கிறபடி கேட்போர் செவிக்கொள அமைந்த கரணத்தாற் குறியறிந்து சேர வாசித்தலும் மற்றைக் கருவிகளிற் குறை நிரம்புதலும் அக்கருவிகளின் மிகுதியடக்குதலும் ஆக்குமிடத்தும் அடக்குமிடத்தும் இசையினிரந்திரந் தோன்றாதபடி செய்தலும் செய்யுமிடத்து கைத்தொழில் அழகுபெறச் செய்து காட்டலும் வல்லனாய் அழகுதக்க கண்ணுமைக் கருவியினையும் அரிய தொழிலினையுமுடைய ஆசிரியனுமென்றவாறு."

சிலப்பதிகார அரும்பதவுரை, பக்கம் 5.

"இருவகைக்கூத்தின்..........................ஆடற்கமைந்த வாசான்றன்னொடு மென்றது-தேசியும் மார்க்கமுமென்று சொல்லப்படா நின்ற இரண்டு வகைப்பட்ட அகக் கூத்தினது. இலக்கணங்களையறிந்து பல வகைபட்ட புறநடங்களையும் விலக்குறுப்புக்களைச் சேரப்புணர்க்கவும் வல்லனாகி அல்லிய முதலாகக் கொடுகொட்டியீறாகக் கிடந்த பதினொரு கூத்தும் அகக்கூத்துகளுக்குரிய பாட்டுகளும் அவற்றுக்கடைத்த வாச்சியக் கூறும் நூல்களின் வழியே தெரியவறிந்து அக்கூத்தும் பாட்டும் தாளங்களும் தாளங்களின் வழியே வந்த தூக்குக்களும் தம்மிற்கூடி நிகழுமிடத்துப் பிண்டி பிணையல் எழிற்கை தொழிற்கையென்னும் அந்த நான்கினையும் நூல்களினகத்துக் கொண்ட கூறுபாட்டையறிந்து அகக் கூத்தினிடத்துக் கூடைக் கதியாகச் செய்தகை வாரக்கதியிற் புகுதாமலும் வாரக்கதியாகச் செய்தகை கூடைக்கதியிற் புகுதாமலும் புறக்கூத்தில் ஆடனி கழுமிடத்து அவினய நிகழாமலும் அவினய நிகழுமிடத்து ஆடல் நிகழாமலும் குரவைக் கூத்தும் வரிக் கூத்தும் தம்மில் விரவாதபடியும் செலுத்தவல்ல ஆடலாசிரியனு மென்றவாறு."

மேற்கண்ட சில வரிகளைக் கவனிக்கும்பொழுது பூர்வகாலத்தில் தமிழில் இசை இலக்கணங்கள் எவ்வளவு விரிவாயிருக்க வேண்டுமென்றும் அவற்றில் தமிழ் மக்கள் பல விதத்திலும் எவ்வளவு தேர்ச்சியடைந்திருந்தார்கள் என்றும் நாம் காணலாம். யாழ்ப்பாடலும் குழலின் பாடலும் கண்டப்பாடலும் ஒன்றுபோல் இசைந்து கேட்போர் செவிக்குத் தெளிவுற விளங்கும்படி வாசித்தார்களென்றும் ஒன்றை ஒன்று மிஞ்சுமானால் அடக்கியும் அடங்கினால் எழுப்பியும் இசையினிரந்திரம் தோன்றாதபடி அழகு பெறப்பாடி அதற்குத் தகுந்தவிதமாய்த் தண்ணுமைக் கருவியைச் சேர்த்தும் தாளத்திற்கேற்றபடி நடனம் செய்தும் வந்தார்களென்றும் தெளிவாய்த் தெரிகிறது. மற்றும் அபிநய விபரங்களைச் சிலப்பதிகாரத்தில் காண்க.