பக்கம் எண் :

612
தென்னிந்தியாவில் வழங்கிவந்த அபிநயத்தின் சுருக்கம்.

19. கண்ணோவுற்றோனவிநயம்.

"கண்ணோ வற்றொ னவிநயங் காட்டி
னண்ணிய கண்ணீர்த் துளிவிரற் றெறித்தலும்
வளைந்த புருவத்தொடு வாடிய முகமும்
வெள்ளிடை நோக்கின் விழிதரு மச்சமுந்
தெள்ளிதிற் புலவர் தெளிந்தனர் கொளலே."


20. தலைநோவுற்றோனவிநயம்.

"தலைநோ வுற்றோ னவிநயஞ் சாற்றி
னிலைமை யின்றித் தலையாட் டுடைமையுங்
கோடிய விருக்கையுந் தளர்ந்த வேரொடு
பெருவிர லிடுக்கிய நுதலும் வருந்தி
யொடுங்கிய கண்ணொடு பிறவுந்
திருந்து மென்ப செந்நெறிப் புலவர்."


21. அழற்றிறம்பட்டோனவிநயம்.

"அழற்றிறம் பட்டோ னவிநய முரைப்பி
னிழற்றிறம் வேண்டு நெறிமையின் விருப்பு
மழலும் வெயிலுஞ் சுடரு மஞ்சலு
நிழலு நீருஞ் சேறு முவத்தலும்
பனிநீ ருவப்பும் பாதிரித் தொடையலு
நுனிவிர லீர மருநெறி யாக்கலும்
புக்க துன்பொடு புலர்ந்த யாக்கையுந்
தொக்க தென்ப துணிவறிந் தோரே."


22. சீதமுற்றோனவிநயம்.

"சீத முற்றோ னவிநயஞ் செப்பி
னோதிய பருவர லுள்ளமோ டுழத்தலு
மீர மாகிய போர்வை யுறுத்தலு
மார வெயிலுந் தழலும் வேண்டலு
முரசியு முரன்று முயிர்த்து முரைத்தலுந்
தக்கன பிறவுஞ் சாற்றினர் புலவர்."


23. வெப்பமுற்றோனவிநயம்.

"வெப்பி னவிநயம் விரிக்குங் காலைத்
தப்பில் கடைப்பிடித் தன்மையுந் தாகமு
மெரியி னன்ன வெம்மையோ டியைவும்
வெருவரு மியக்கமும் வெம்பிய விழியும்
நீருண் வேட்கையு நிரம்பா வலியு
மோருங் காலை யுணர்ந்தனர் கொளலே."