பக்கம் எண் :

611
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

14. மழைபெய்யப்பட்டோனவிநயம்.

"மழைபெய்யப் பட்டோ னவிநயம் வகுக்கி
லிழிதக வுடைய வியல்புநனி யுடைமையு
மெய்கூர் நடுக்கமும் பிணித்தலும் படாத்தை
மெய்பூண் டொடுக்கிய முகத்தொடு புணர்தலு
மொளிப்படு மனனி லுலறிய கண்ணும்
விளியினுந் துளியினு மடிந்தசெவி யுடைமையுங்
கொடுகிவிட் டெறிந்த குளிர்மிக வுடைமையும்
நடுங்கு பல்லொளி யுடைமையு முடியக்
கனவுகண் டாற்றா னெழுதலு முண்டே."


15. பனித்தலைப்பட்டோனவிநயம்.

"பனித்தலைப் பட்டோ னவிநயம் பகரி
னடுக்க முடைமையு நகைப்படு நிலைமையுஞ்
சொற்றளர்ந் திசைத்தலு மற்றமி லவதியும்
போர்வை விழைதலும் புந்திநோ வுடைமையும்
நீறாம் விழியுஞ் சேறு முனிதலு
மின்னவை பிறவு மிசைந்தனர் கொளலே."


16. வெயிற்றலைப்பட்டோனவிநயம்.

"உச்சிப் பொழுதின் வந்தோ னவிநய
மெச்ச மின்றி யியம்புங் காலைச்
சொரியா நின்ற பெருந்துய ருழந்து
தெரியா நின்ற வுடம்பெரி யென்னச்
சிவந்த கண்ணு மயர்ந்த நோக்கமும்
பயந்த தென்ப பண்புணர்ந் தோரே."


17. நாணமுற்றோனவிநயம்.

"நாண முற்றோ னவிநய நாடி
னிறைஞ்சிய தலையு மறைந்த செய்கையும்
வாடிய முகமுங் கோடிய வுடம்புங்
கெட்ட வொளியுங் கீழ்க்க ணோக்கமு
மொட்டின ரென்ப வுணர்ந்திசி னோரே."


18. வருத்தமுற்றோனவிநயம்.

"வருத்த முற்றோ னவிநயம் வகுப்பிற்
பொருத்த மில்லாப் புன்க ணுடைமையுஞ்
சோர்ந்த யாக்கையுஞ் சோர்ந்த முடியுங்
கூர்ந்த வியர்வுங் குறும்பல் லுயாவும்
வற்றிய வாயும் வணங்கிய வுறுப்பு
முற்ற தென்ப வுணர்ந்திசி னோரே."