பக்கம் எண் :

621
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- மூன்றாவது பாகம் - இசைத்தமிழ் சுருதிகள்.

மாகவும் குறைந்து வந்திருக்கிறதென்று நாம் நினைக்க வேண்டும். பூர்வ காலத்திலிருந்த மனிதர்களின் ஆயுளும் வாத்தியக் கருவிகளின் ஆயுளும் வாத்தியக் கருவிகளின் அம்சமும் வரவரக் குறைந்து வந்தது போலவே இதுவுமிருப்பது ஆச்சரியமல்ல. மேலும் பன்னிரு பாலையுள் பிறந்த 7 பாலைகளின் கிரமப்படி 12,000 இராகங்களடங்கிய கௌரி கடகம் என்ற பெயருடன் ஒரு நூல்; இருந்ததாகவும் முன் கிரமத்தின் படியே 6,000 இராகங்களடங்கிய அநுமத் கடகம் என்ற மற்றொன்று இருந்ததாகவும் முன் கிரமப்படி உண்டான ஆயிர இராகங்களடங்கிய வியாச கடகம் எனப் பின்னொன்று இருந்ததாகவும் வழக்கத்தில் சொல்லிக் கொள்ளப்படுகிறது. 12,000 த்திலிருந்து 6,000 மும், 6,000 த்திலிருந்து 1,000 முமாய்க் குறுகிய விதமே சங்கீத சூத்திரத்துக்குரிய முக்கிய சில அம்சங்கள் முற்றிலும் மறைந்து போயினவென்று திட்டமாய்ச் சொல்லலாம். மறைந்தே போயிற்றென்பதைச் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் சில விஷயங்களைக் கொண்டும் நிச்சயிக்கலாம்.

மேன்மையும் விஸ்தாரமும் பொருந்திய முதல் ஊழியின் முறைகள் பிற்காலத்தில் குறைந்து போனதினால் சாஸ்திரத்தில் சொல்லியவைகளுக்கும் அனுபவத்திற்கும் ஒவ்வாமை ஏற்பட்டது. இருந்தாலும் அதன் பின் சாஸ்திரம் எழுதிவைத்தவர்கள் பழமையான சாஸ்திரத்தை அனுசரித்தே சில எழுதி வைத்தார்கள். அதன் பின்னுள்ளோர் அவைகளில் தங்களுக்குத் தெரிந்தவைகளை மாத்திரம் எழுதிவைத்தார்கள். இப்படியே காலக் கிரமத்தில் முதலில் மிகவும் தேர்ச்சிப் பெற்ற சங்கீத சாஸ்திரம் "உலக்கை தேய்ந்து உளிப்பிடியானாற் போலத்" தேய்ந்து குறைந்து போனது. இப்படிப் போன பின்பே பரதர் எழுதிய பரதமும் சாரங்கர் எழுதிய சங்கீத ரத்னாகரமும் எழுதப்பட்டன என்று தோன்றுகிறது. அதன்பின் சங்கீத ரத்னாகரத்தை ஆதரவாக வைத்துக் கொண்டு பலர் எழுதியிருக்கிறார்கள். இவ்வுண்மை சிலப்பதிகாரத்தினால் தெளிவாய்த் தெரிகிறது. இதோடு பூர்வீக உண்மையும் தற்கால அனுபவ இரகசியமும் தெரியாத பலர் பலவிதம் எழுதி வைத்திருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தின் விதிகளில் இன்னும் அதிகமானவை அர்த்தமாகாமலிருக்கின்றன. சுரங்களைப்பற்றியும் சுருதிகளைப்பற்றியும் எவ்வளவு மேன்மையாய்ச் சொல்ப்பட்டிருக்கிறதோ அதற்கேற்ற விதமாய் இராகங்களை ஆலாபித்து விஸ்தாரஞ் செய்திருக்கிறார்கள் என்று இதன் பின் பார்ப்போம்.

இவைகள் யாவையும் கவனிக்கையில் பண்கள் ஏராளமாயிருந்தனவென்று சொல்ல இடந்தருகிறது. வட்டப்பாலையில் நாலு யாழ் பிறப்பதைப் பற்றியும் அவற்றின் சுரங்களைப் பற்றியும் ஒரு யாழில் நாலு ஜாதிகள் பிறப்பதைப் பற்றியும் அவற்றின் சுரங்களைப் பற்றியும் சில முக்கியமான காரியங்களை இதன் முன் பார்த்தோம்.

பண்களின் தொகை சொல்ல வந்த இடத்தில் பன்னிரு பாலையினுரு தொண்ணூற்றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் 103 ஆயிற்றென்று சொல்லுகிறார். இன்னவிதமாய் இப்படி ஆயிற்றென்று விபரஞ் சொல்லப்படவில்லை என்றாலும் சற்றேறக் குறைய இவர் காலத்திற்கு முன்னிருந்தவராக எண்ணப்படுகிற பிங்கல முனிவர் எழுதிய பிங்கலந்தை நிகண்டு 280-வது சூத்திரத்தில் "ஈரீரு பண்ணு மெழுமூன்று திறனு" என்பதைக் கொண்டு நால்வகை யாழுள்ளும் எவ்வேழு பாலை பிறக்குமென்றும் குறைந்த சுரமுள்ளதாக முற்காலத்தில் வழங்கி வந்த ஆறு (பண்ணியல்) ஐந்து (திறம்) நாலு (திறத்திறம்) சுர ராகங்கள் இருபத்தொன்றும் ஒவ்வொன்றுள்ளும் உண்டாகும் என்றும் சொல்வதைக் கொண்டு ஒவ்வொரு யாழுள்ளும் பல இராகங்கள் பிறக்கக் கூடியதாயிருந்ததென்று தெரிகிறது. அவர் காலத்தில் பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி என்னும் நாலு வகை யாழிலும் பிறக்கும் என்ற 103 பண்களின் பெயர்கள் பின் வருமாறு.