பக்கம் எண் :

622
103 பண்களின் பெயர்கள்.

2. 103 பண்களின் பெயர்கள்.

பிங்கலநிகண்டு, பக்கம் 170, 171.

1375. நால்வகைப் பண்ணின் பெயர்.

பாலை குறிஞ்சி மருதஞ்செவ் வழியென
நால்வகை யாழா நாற்பெரும் பண்ணே.

(இ-ள்.) நால்வகைப் பண்ணின் பெயர்-பாலை, குறிஞ்சி, மருதம், செவ்வழி.

1376. பாலையாழ்த் திறத்தின் பெயர்.

அராக நேர்திற முறுப்புக் குறுங்கலி
யாசா னைந்தும் பாலையாழ்த் திறனே.

(இ-ள்.) பாலையாழ்த் திறத்தின் பெயர்-அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான்.

1377. குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்.

நைவளங் காந்தாரம் படுமலை மருளொடு
வயிர்ப்புப் பஞ்சுர மரற்றுச் செந்திற
மிவ்வகை யெட்டுங் குறிஞ்சியாழ்த் திறனே.

(இ-ள்.) குறிஞ்சியாழ்த் திறத்தின் பெயர்-நைவளம், காந்தாரம், படுமலை, மருள், அயிர்ப்பு, பஞ்சுரம், அரற்று செந்திறம்.

1378. மருதயாழ்த்திறத்தின் பெயர்.

நவிர்வடுகு வஞ்சி செய்திற நான்கு
மருத யாழ்க்கு வருந்திற னாகும்.

(இ-ள்.) மருதயாழ்த்திறத்தின் பெயர்-நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம்.

1379. செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்.

நேர்திறம் பெயர்திறஞ் சாதாரி முல்லையென
நாலுஞ் செவ்வழி நல்யாழ்த் திறனே.

(இ-ள்.) செவ்வழியாழ்த் திறத்தின் பெயர்-நேர்திறம், பெயர்திறம், சாதாரி, முல்லை.

1380. பெரும்பண்ணின் வகை.

ஈரிரு பண்ணு மெழுமூன்று திறனு
மாகின் றனவிவை யிவற்றுட் பாலையாழ்
செந்துமண் டலியாழ் பவுரி மருதயாழ்
தேவ தாளி நிருபதுங் கராகம்
நாக ராக மிவற்றுட் குறிஞ்சியாழ்
ஆசாரி சாய வேளர் கொல்லி
கின்னராகஞ் செவ்வழி மௌசாளி சீராகஞ்
சந்தி யிவைபதி னாறும் பெரும்பண்.

(இ-ள்.) பெரும்பண்ணின் வகை-பாலையாழ், செந்து, மண்டலியாழ், பௌரி, மருதயாழ், தேவதாளி, நிருபதுங்கராகம், நாகராகம், குறிஞ்சியாழ், ஆசாரி, சாயவேளர்கொல்லி, கின்னராகம், செவ்வழி, மௌசாளி, சீராகம், சந்தி. ஆக 16