1, பொருத்த சுரங்களைக் கண்டுபிடிக்கும் முறை தென்னிந்திய பூர்வ சங்கீதத்தின் விரிவையும் ச-ப, ச-ம முறையாய்ச் சுரங்களை நிச்சயப்படுத்திக்கொண்டு கானம் செய்யும் முறையையும் பற்றி நாம் இதன் முன் பார்த்தோம். அப்படியே, கண்டுபிடித்த சுரங்களுள் இன்னின்ன சுரங்கள் இன்னின்ன சுரங்களோடு பொருந்தும் பொருந்தாவென்றும் வெகு தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்பொருத்தமான ஓசைகள் ஒன்றோடொன்று சேரும் கிரமமும் அவைகள் சிற்ப்புடையனவாய் நாளது வரையும் தனித்து வழங்கி வருவதுமே நம் இந்திய சங்கீதத்தின் பெருமைக்குக் காரணமாம். கர்நாடக இராகம் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சிறந்த இலக்கணமுடையதாயிருப்பதனால் அவ்விராகங்கள் விசேஷ ரசமும் காலத்திற்கேற்ற அமைப்புமுடையனவாய்க் காணப்படுகின்றன. ஒப்பற்ற தனித்த இவ்வமைப்பிற்கு இசைத்தமிழிற் சிறந்த நம் முன்னோர் அமைத்து வழங்கிவந்த சில விதிவிலக்குகளே காரணமாகும். அவ்விதிவிலக்குகள் இசை இலக்கணத்தில் எவ்வளவு விரிவாய்ச் சொல்லப்பட்டிருக்குமோ நான் அறியேன். சிலப்பதிகாரத்தில் இவ்விஷயத்தைப் பற்றிச் சில வரிகளே சொல்லப்படுகின்றன. அவற்றுள்ளும் உரையாசிரியர்களால் சற்று முன்பின்னான அபிப்பிராயங்கள் வந்து கலந்திருக்கின்றனவென்று தோன்றுகிறது. என்றாலும் கருத்தைத் தெரிந்து கொள்வதற்குப் போதுமானவை. சொல்லப்பட்டதில் நமக்குக் கிடைத்தவை மிகவும் சொற்பமாயிருந்தாலும் அவைகளைக்கொண்டு அநேக காரியங்களைக்காண ஏதுவிருக்கிறது. சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் கருத்துக்கு அதற்குச் சுமார் 1,000 வருடங்களுக்குப் பின் எழுதிய அடியார்க்குநல்லார் கருத்தும் அரும்பதவுரை எழுதிய கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் கருத்தும் கொஞ்சம் முன்பின்னாக இருந்தாலும் அவர்களின் வாக்கியங்களைக் கூர்ந்து உற்றுநோக்குவோமானால் நூலாசிரியரின் கருத்து இன்னதென்பதை அறிந்து கொள்ளலாம். அவர்கள் சொல்லும் வசனங்களையும் சிலப்பதிகாரத்தில் சொல்லப்படும் சில அடிகளையும் இங்கே பார்ப்போம். சிலப்பதிகாரம் வேனிற்காதை, பக்கம் 202. "இணைகிளை பகைநட் பென்றிந் நான்கி னிசைபுணர் குறிநிலை யெய்த நோக்கி" இணைகிளை பகை நட்பென்று சொல்லப்பட்ட நான்கினும் இணை-இரண்டு நரம்பு; என்னை? "இணையெனப் படுவ கீழு மேலு மணையத் தோன்று மளவின வென்ப" கிளை-ஐந்து நரம்பு; என்னை? "கிளையெனப் படுவ கிளங்குங் காலைக் குரலே யிளியே துத்தம் விளரி கைக்கிளை யெனவைந் தாகு மென்ப"
|