இராசியினின்ற சட்ஜமத்தையும்சேர்த்து, 7 சுரங்களில் ஒரு ஆரோகண அவரோகண முண்டாக்கி, அதற்குச் செம்பாலைப்பண் என்று பேர் கொடுத்து வழங்கிவந்திருக்கிறார்கள். இதையே நாம் தற்காலத்தில் சதுர் சுருதி ரிஷபம், அந்தரகாந்தாரம், சுத்தமத்திமம், பஞ்சமம், சதுர்சுருதி தைவதம், காகலி நிஷாதம், மேல் சட்ஜமம் உள்ள தீர சங்கராபரண மென்று வழங்கி வருகிறோம். தீர சங்கராபரணத்தில் உள்ள சுர முறைப்படி, அதாவது 1, 2, 2, 1, 2, 2, 2 என்ற இராசி முறைப்படிக் கிரகமாற்றிக்கொண்டுபோகும் பொழுது, படுமலைப்பாலைப்பண் அதாவது கரகரப்பிரியா, செவ்வழிப்பாலைப்பண் அல்லது தோடி, அரும்பாலைப்பண் அல்லது கல்யாணி, கோடிப்பாலைப்பண் அல்லது அரிகாம்போதி, விளரிப்பண் அல்லது பைரவி, மேற்செம்பாலைப்பண் அல்லது பஞ்சமமில்லாத தோடி யென்ற தாய் இராகங்களை உண்டாக்கி, அவைகளில், பண், பண்ணியம், திறம், திறத்திறம் என்ற சம்பூரண சாடவ ஒளடவ சுவராந்த மென்னும் பல இராகபேதங்களைப் பாடினார்களென்று தெரிகிறது. இதன் பின், ஒரு இராசிச்சக்கரத்தில் 12 ஆக வரும் சுரங்களை யாழில் பாடும்பொழுது இன்னின்ன சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கமகமாய்ப் பாடவேண்டுமென்று சொல்வதற்காக, வட்டப்பாலை முறை சொல்லியிருக்கிறார்கள். இதில் சட்சமமே சட்சமமாக (குரல் குரலாக) ஆரம்பிக்கிற காலத்தில் மருதயாழ் என்றும், மத்திமம் சட்சமமாக (உழைகுரலாக) ஆரம்பிக்கிறகாலத்தில் குறிஞ்சி யாழ் என்றும், பஞ்சமம் சட்சமமாக (இளிகுரலாக) ஆரம்பிக்கும்பொழுது நெய்தல் யாழ் என்றும், நிஷாதம் சட்சமமாக (தாரம் குரலாக) ஆரம்பிக்கும்பொழுது பாலையாழ் என்றும், நாலுவகையாகப் பிரித்து அதில் விளரி கைக்கிளையில் (த, க வில்) ஒவ்வொரு அலகு குறைத்துக், கமகமாய்ப் பிடிக்க வேண்டுமென்றும் சொன்னார்கள். இவைகள், நாம் தற்காலத்தில் வழங்கும் சங்கராபரணம், கல்யாணி, அரிகாம்போதி, தோடி என்ற இராகங்களாகும். ஆனால், இவைகளில் விளரி கைக்கிளை போல் வரும் 2 சுரங்களில், ஒவ்வொரு அலகு குறைந்து வரும். இந்நாலு பெரும்பண்களிலிருந்து ச, க, ப, நி என்ற 4 சுரங்களை, ச வாக ஆரம்பித்துக் கிரகம் மாற்றும் பொழுது பிறக்கும் அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்னும் 4 ஜாதிகளுக்கு, விளரி கைக்கிளை போல் ஒவ்வொரு அலகு இன்ன விடத்தில் குறைந்து வரவேண்டு மென்ற முறையும், 16 ஜாதிப் பண்களின் பேர்களும் சொல்லியிருக்கிறார்கள். இம்முறையில், ச-ப, ச-ம முறையாகவரும் விளரி கைக்கிளையில், ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடியது போக, அரை அலகு குறைத்துப்பாடுவதை திரிகோணப்பாலை யென்றும், கால் அலகு குறைத்துப் பாடுவதை சதுரப்பாலை என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொன்னதில், ஒரு ஸ்தாயியில் 22 அலகுகள் என்று சொன்ன நூல் முறைப்படி, பொருள் செய்து அலகு மாற்றியும், ச-ம ஐந்தும், ச-ப ஏழுமானராசிகளில் வரும் மறைப்பு நீங்கிய முறையில், ஒருஸ்தாயியில் 24 அலகுகள் வருகின்றனவென்றும், 2 அலகு குறைத்துக் கமகமாய் யாழில் வாசிக்கும்பொழுது 22 அலகுகளென்றும், இது ‘உய்த்துணர வைப்பு’ என்ற நூல் மரபென்றும் சொல்லி, இம்மறைப்பு நீங்கியபின் ஏழு தாய் இராகங்கள் உண்டாகும் முறையையும், மத்திமத்தின் இரண்டு அலகை குரலில் வைத்துப் பன்னிருகால் கிரகம் மாற்றும் பொழுது உண்டாகும் பன்னிரு பாலை இராகங்களையும், அவைகளுக்குத் தற்காலத்தில் வழங்கும் பேர்களையும், சில மேற் கோள்களையும் காட்டியிருக்கிறேன்.
|