பக்கம் எண் :

760
தற்காலத்திலும் 22 சுருதிகளில் கானம் செய்யப்படுகிறதென் பதற்குச் சில மேற்கோள்.

ஜன்னிய இராகங்களையும் கால் கால் சுரமாய் வழங்கி வரும் வட்டப் பாலையையும் அதன் ஜன்னிய இராகங்களையும் திட்டமாய் அறிந்து பிரித்துச் சொல்ல இயலாமல் ஒரு ஸ்தாயியை 22 சுருதிகளாகப் பிரித்து அவைகளுக்கு வெவ்வேறு பெயர் கொடுத்து ஆயப்பாலை இராகங்களையும் வட்டப்பாலை இராகங்களையும் கலந்து ஒன்றிலும் வழி தோன்றாமல் திகைக்கும்படியாகப் பலர் பல விதமாய் நூல்கள் எழுதி வைத்தார்கள். இது நூல் வேறு அனுபோகம் வேறாக நின்று மலைக்க வைத்தது. இம்மலைப்பு சுருதியைப் பற்றி விசாரிக்கும் எல்லோரையும் கலங்க வைத்தது.

சட்ஜம பஞ்சம முறையாய் ஒரு ஸ்தாயியில் 12 சுரங்கள் உண்டாகுமென்பதை பூர்வம் தமிழ் மக்கள் தெளிவாய் நிச்சயம் செய்திருந்தார்களென்றும் அவைகளில் இரண்டு சுரங்களில் இரண்டு அலகு குறைத்து 22 அலகுகளில் கானம் செய்தார்களென்றும் ஒரு ஸ்தாயியில் 24 அலகுகள் அல்லது 24 சுருதிகள் வைத்திருந்தார்களென்றும் நாம் தெளிவாகக் காண்கிறோம்.

மேலும் ச-ப 2/3, ச-ம 3/4 என்ற அளவின்படி சற்றேறக்குறைய

ஒரு ஸ்தாயியில் பன்னிரு சுரங்களும் கிடைக்கின்றனவென்று இதன் முந்திய கணக்குகளினால் அங்கங்கே காண்கிறோம். அவைகளின் நுட்பமான அளவை நாலாம் பாகத்தில் காண்போம்.

தற்காலத்தில் பாடப்படும் அநேக இராகங்கள் 24 சுருதி முறையில் பாடப்பட்டு வருகிறதென்பதற்குச் சில திருஷ்டாந்தரம் பார்ப்பது ஒருவாறு திருப்தியாயிருக்குமென்று எண்ணுகிறேன்.

32. ஒரு ஸ்தாயியிலுள்ள 24 சுருதிகளில் வட்டப்பாலை முறையாய் த-க வில் இரண்டு சுருதி குறைத்துப் பூர்வம் தமிழ் மக்கள் கானம் செய்தது போலவே தற்காலத்திலும் கானம் செய்து வருகிறோமென்பதற்குச் சில மேற்கோள்.

இதை வாசிக்கும் கனவான்களே! முதல் ஊழியிலிருந்த சங்கீத நூல்களும் இசை இலக்கணமும் பின் ஊழியில் பலவிதத்திலும் அழிந்து போனபின் கடைச்சங்க காலத்தில் வழங்கி வந்த சில பாகமும் இளங்கோவடிகளியற்றிய சிலப்பதிகாரத்தின் சில அடிகளாலும் அவற்றின் உரையினாலும் தெரிகிறது. மிகமேன்மையான இம்முறையும் அபிப்பிராய பேதத்தினால் பொருள் தெரியாமல் மயங்கும்படி நேரிட்டது. அதன் பின் சங்கீதத்தைப் பற்றி எழுதிய நூல்கள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்ததினால் அவற்றின் கருத்தைத் திட்டமாய் அறிந்து கொள்ள இயலாமல் 22 சுருதி என்ற சொல்லுக்குள் அகப்பட்டு நிலைகாணாமல் நினைத்தவாறு தீர்மானிக்கிறார்கள்.

இற்றைக்கு 2000, 3000 வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு வர்த்தக விஷயமாகவும் யாத்திரை காரணமாகவும் வந்தவர்கள் அரும்பொருளாகிய தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த சுருதிகளைத் தங்கள் தேசத்திற்குக் கொண்டு போனார்களென்று தெளிவாய்க் காண்கிறோம். ஒரு காலத்தில் மேன்மை பெற்றிருந்த தென்னிந்தியா வரவரத் தன் பிரதானமிழந்து எளிமைப்பட்டதினால் சங்கீத விஷயமும் துலங்காமற் போனதென்று தெளிவாய் அறிகிறோம். அப்படியிருந்தாலும் தாங்கள் பரம்பரையாகக் கற்று வந்த தென்னிந்திய சங்கீதம் முற்றிலும் ஒழிந்து போகவில்லையென்றும் தேசிகக் கலப்பினால் வரவரமலினமடைந்து வருகிறதென்றும் காண்கிறார்களேயொழிய அவைகள் எப்படிக் கெட்டுப் போயின அவற்றைத் திருத்திக்கொள்வதெவ்வாறு என்று ஆராயாமல் வகை சொல்லும் நூல்களை விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.