தமிழ் நூல்கள் பெரும்பாலும் அகப்படவில்லை. தமிழ்நாட்டு மக்களில் அநேகர் சமஸ்கிருத மக்களாய்ப் போனதனால் சமஸ்கிருத நூல்களைக் கையில் எடுத்துக்கொண்டு பொருள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அவற்றிற் சொல்லிய 22 ல் இடருண்டு தாங்கள் தெரிந்து கொள்ளாத ஒன்றை இதுதானென்று நாட்டுகிறார்கள். இப்படித் தாபிப்பதற்குப் பரதர் சங்கீத ரத்னாகரர் முக்கிய ஆதாரமாயிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியபடியும் போகாமல் தாங்கள் பாடிக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் அடுத்த வீட்டுக்காரன் புறணி பேசுபவர்களைப் போல மற்ற தேசத்தவர் வழங்கும் சுருதிகளை இது தான் சாரங்கள் கருத்தென்று சிலரும் இது இந்துஸ்தானி சங்கீதத்திற்குரியதென்று வடதேசத்தாருள் சிலரும் இது கர்நாடக சங்கீதத்திற்குரியதென்று தென்னிந்தியாவிலுள்ள சிலரும் சொல்வது மிகுந்த ஆச்சரியமாயிருக்கிறது. தானியமறுத்த வயல் போலவும் முத்தெடுத்த நத்தைப் போலவும் தென்னிந்தியாவின் சங்கீதமும் ஆயிற்றே என்று வருத்தப்பட வேண்டியிருக்கிறது. வட்டப்பாலையின் முறைப்படி மிகுந்த சுரஞானத்துடன் வழங்கி வந்த கானம் இணைச்சுர முறையில் இரண்டு சுருதிகள் குறைத்துக் கானம் பண்ணின வழக்கம் நாளது வரையுமிருக்கிறதென்று நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாய்த் தோன்றும். நாம் கொஞ்சம் உற்று நோக்கிப் பார்ப்போமானால் வட்டப்பாலையின் முறைப்படியே பொருத்த சுரங்களுடன் இராகங்களைப் பாடியிருக்கிறார்களென்று தெளிவாய் அறிவோம். பெண்கள் எளிதாகத் தெரிந்து வாசிக்கக்கூடிய சுரங்கள் பன்னிரண்டையும் இராசி பன்னிரண்டாகப் பிரித்து, அதில் ஏழுமூர்ச்சனையும் மந்தர மத்திய தாரஸ்தாயிகளில் 14 கோவைகளில் சுரக்கிரமமும் சொல்லி வழங்கி வந்ததை இதன் முன் பார்த்திருக்கிறோம். இப்பன்னிரு சுரங்களே நம் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வருகின்றனவென்றும் இவைகளையே சங்கீதத்தில் பிரியமும் நுட்ப அறிவுமுடைய மற்றும் சிலர் வழங்கி வருகிறார்களென்றும் நாம் திட்டமாய்க் காணலாம். இந்துஸ்தான் கீதத்தில் வழங்கி வரும் பன்னிரு சுரங்களும் இவைகளே. மேல் நாட்டார் வழங்கி வரும் பன்னிரு சுரங்களும் இவைகளே. பெண்களுக்குரிய முறையென்றும் மாதவி பிரியமாய் வாசித்தாளென்றும் இளங்கோவடிகள் சொல்வதை நாம் கொஞ்சம் கவனிக்க வேண்டும். ஏனென்றால் புருஷர்கள் வாசிக்க வேண்டிய முறை வட்டப்பாலையின் அலகு முறைப்படி என்பதாம். அதாவது 22 அலகுகளில் அல்லது சுருதிகளில் புருஷர்கள் கானம் பண்ண வேண்டுமென்று சொல்லுகிறார். எப்படி என்றால் கைக்கிளை 3 சுருதியாகவும் விளரி 3 சுருதியாகவும் வர வேண்டுமாம். மொத்தத்தில் பன்னிரண்டு இராசிகளில் ஒவ்வொரு இராசிக்கும் இரண்டிரண்டாக 24 அலகில் இரண்டு அலகு குறைத்து 22 அலகில் பாட வேண்டும் என்பதே. இதில் கைக்கிளைக்குரிய இரண்டு இராசிகளின் நாலு அலகில் ஒரு அலகைக் குறைத்தும் விளரிக்குரிய இரண்டு இராசிகளின் நாலு அலகில் ஒரு அலகைக் குறைத்தும் பாடுவதே. இது போலவே பொருத்த சுரமாக வரும் இரண்டு சுரங்களில் பூர்வ பாகத்திலும் உத்தர பாகத்திலும் ஒவ்வொரு அலகு குறைத்துப் பாடுவதற்கு அகநிலை, புறநிலை, அருகியல், பெருகியல் என்ற நாலு வகையும் சொல்லப்படுகிறது. இப்போது ஒரு சுருதி குறைத்துப் பாடவேண்டுமென்பது சங்கீத வித்வான்கள் வழங்கும் குழூஉக் குறியேயொழிய வேறில்லை. கைக்கிளையின் மூன்றாவது அலகு இரண்டாவது அலகிலிருந்து கமகமாய் இழுத்துப் பேச வேண்டும். அப்படியே விளரியின் மூன்றாவது அலகு இரண்டாவது அலகில் கமகமாய் இழுத்துப் பேச வேண்டும்.
|