பக்கம் எண் :

762
தற்காலத்திலும் 22 சுருதிகளில் கானம் செய்யப்படுகிறதென் பதற்குச் சில மேற்கோள்.

இப்படி வாசிப்பது மனுட சாரீரத்தில் பேசுவது போல் இன்பமாயிருக்கும். ஒரு சுரத்தில் அழுத்தி வாசிப்பது மிருதுவான விரல்களையுடைய ஸ்திரிகளுக்குக் கூடியதல்லவாகையால் இது புருஷர்களுக்குரியது என்கிறார். கமகமான சுரங்களைப் பிடித்து வாசித்து வரும் வைணீகர்களுடைய விரல்கள் அரிநெல்லிக்காய்போல் மேடு பள்ளமுடையனவாய்க் காய்ப்புண்டிருப்பதை நாம் நேரிற் பார்க்கிறோம். இவ்வித காய்ப்புகள் ஸ்திரிகளின் காந்தள் மலரின் இதழ்கள் போன்ற விரல்களைக் கெடுத்து விடுமாகையால் இம்முறை பெண்களுக்கு விலக்கப்பட்டது போலும். இன்னிசையின் நுட்பந்தெரிந்த பெண் மக்கள் இதையும் பொருட்படுத்தாமல் பழகுவதையும் காணலாம்.

கர்நாடக இராகங்களில் சுத்த சுரமாய் வாசிப்பதொன்றும் சுரங்கள் குறைத்து வாசிப்பதொன்றுமாக இரண்டு முறைகள் இருந்ததாக இதனால் தெரிகிறது. கர்நாடகத்தில் வழங்கி வரும் சுருதிகள் இன்னதென்று அறிய விரும்பிய நான் சிலப்பதிகாரத்தின் வட்டப்பாலை முறை தெரியாத காலத்தில் சில இராகங்களில் வரும் சுரங்களை நாலைந்து வருடங்களுக்கு முன் சில தேர்ந்த வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்தேன். அவைகளில் 24 சுருதிகள் வழங்கி வருகிறதென்றும் வட்டப்பாலையின் 24 அலகுகளின் முறையே இப்போது வழங்கி வருகிறதென்றும் அறிந்தேன். ஆகையினால் பூர்வ காலத்தில் வழங்கி வந்த வட்டப்பாலையின் கணக்கு சரியென்றும் அதையே தென்னிந்தியாவிலிருந்து மற்றவர் கொண்டு போனார்களென்றும் தெளிவாய்த் தெரிகிறது. கொண்டுபோயுமென்ன? ஒளி குறைந்த மணி போலப் பயனற்றுப் போயிற்றேயொழிய உயிரோடு தழைக்கவில்லை. சொல்லவளவாக நின்றதேயொழிய அனுபோகத்திற்கு வரவில்லை. ஆனால் 24 சுருதியோடு கானம் பண்ணும் தென்னிந்திய சங்கீதத்தை சாஸ்திர முறையுடையதென்றும் ஒவ்வொரு இராகமும் தனித்த சிறப்புடையதென்றும் கொண்டாடுகிறார்கள். எவர் பாட்டைக் கேட்டு மற்றவர் கொண்டாடுகிறார்களோ அவர்கள் தாங்கள் பாடும் பாட்டில் சுருதி இன்னதென்று அறியாமல் திண்டாடுகிறார்கள். தென்னிந்திய இராகங்களில் இன்னின்ன சுருதிகள் வருகிறதென்று பின் பார்ப்போம்.

கர்நாடக ராகங்களில் சிலவற்றிற்கு ஆரோகண அவரோகண சுரங்கள் பேதப்பட்டிருப்பதையும் சிற்சிலவிடங்களில் மாறியிருப்பதையும் நாம் காண்போம். இவை பாடபேதத்தினாலும் பரம்பரை வழக்கத்தினாலும் ஏற்பட்டவை. வட்டப்பாலையின் ஆதிமுறைக்கு சிற்சில இடங்கள் பேதப்பட்டிருப்பதாயிருந்தாலும் தற்காலத்தில் வழக்கத்திலிருப்பதையே இங்கு எழுதியிருக்கிறேன். மேலும் பன்னிரண்டு சுரங்களைத் தவிர, சுருதிகள் வழங்குமிடத்தில் இன்னும் நுட்பமான சில சுருதிகளும் வழங்குவதாகக் காண்கிறேன். அவைகளை இதன் பின் பார்ப்போம்.

அடியில் வரும் மூன்று அட்டவணைகளில் ரி-த, க-நி என்னும் சுர அடுக்குகள் குறைந்தும் கூடியும் வருகிறதாகத் தெரிகிறது. இவைகளைப் பார்க்கிலும் தற்காலத்தில் பழக்கமாயிருக்கும் மற்றும் இராகங்களும் சுருதிகள் கூடியும் குறைந்தும் வருகின்றன. அவைகளுள் அதிக பழக்கமான சில இராகங்களை மாத்திரம் இங்கே சொல்லியிருக்கிறேன்.

அட்டவணையில் காட்டப்பட்ட இராகங்களுள் சிலவற்றிற்கு இன்னும் நுட்பமான சுருதிகள் வழங்கி வருகிறதாக இதன் பின் பார்ப்போம். இவ்விராகங்கள் சுரக்கியானத்தில் மிகுந்த தேர்ச்சியுள்ள அரிகேசவநல்லூர் மகா---ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்களையும் தஞ்சை அரண்மனை வைணீக வித்துவசிரோமணி மகா---ஸ்ரீ ஆதியப்பையர் அவர்கள் குமாரர் மகா---ஸ்ரீ வேங்கடாசலமையர் அவர்களையும் நேரில் வைத்துக் கொண்டு வாய்ப்பாட்டினாலும் வீணையினாலும் நுட்பமாய் விசாரிக்கப்பட்டன.