பக்கம் எண் :

772
முடிவாக நாம் கவனிக்கவேண்டிய சில முக்கிய குறிப்புகள்.

தென்னிந்திய சங்கீதத்தின் முக்கிய அம்சங்களைக் கவனிக்கையில் சுமார் 12,000 வருடங்களுக்கு முற்பட்டுப் பல்லாயிர வருடங்களாக விருத்தி நிலையிலிருந்ததென்றும் பின் வர வரக் குறைந்து ஆயப்பாலையான பன்னிரு சுரங்களில் வந்து நிற்கிறதென்றும் நாம் காண்கிறோம். இதனால் பூர்வமிருந்த 12,000 ஆதி இசைகளும் வரவரக் குறைந்து போக கடைச் சங்க காலத்தில் அவற்றைப் பற்றிச் சொல்லும் நூல்களும் குறைந்து மெலிவடைந்ததென்றும், கடைச் சங்க காலத்தின் பின் அனுபோகத்தினின்ற முறைகள் போக சுருதி முறைகளும் இரகாம் உண்டாக்கும் முறையும் சில சந்தேகத்திற்கிடமாய் ஆடிக் கொண்டிருந்தனவென்றும், அதன் பின் பரதர் எழுதிய பரதமும், சாரங்க தேவர் எழுதிய சங்கீத ரத்னாகரமும் அதன் பின்னுள்ள சமஸ்கிருத நூல்களும் துவாவிம்சதி சுருதியென்ற சந்தேகத்தை தலையிற் சுமந்து தள்ளாடிக் கொண்டிருந்தனவென்றும் இதனைச் சகிக்காமல் அக்காலத்தில் மிக இனிமையுள்ளதென்று கொண்டாடப்பட்ட காந்தாரக் கிராமம் தேவலோகத்திற்கு போய்விட்டதென்றும் 22 சுருதிகளில் பதினான்கு சுருதிகள் பூலோகத்தில் தங்கினவென்றும் தோன்றுகிறது.

13ம் நூற்றாண்டிற்குப் பின் தங்கள் அனுபோகத்திலிருக்கும் கானத்திற்கும் துவாவிம்சதி சுருதிக்கும் பொருத்தமில்லையென்ற கூச்சலும் குதர்க்கமும் உண்டாயிற்றென்றும் அதன் பயனாக ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டாக வரும் சுரங்களைப் பூர்வ தமிழ் மக்கள் பாடி வரும் கானத்திற்கு ஏற்ற விதமாய் நிச்சயம் செய்து, புரந்தர விட்டல்தாஸ், அகோபிலர், சோமநாதர், ராமாமாத்தியர், வேங்கடமகி போன்ற கனவான்கள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் நூல் எழுதி வைத்தார்கள் என்றும் காண்கிறோம். இவைகளில் வழங்கி வரும் சுரங்களும் கிரக மாற்றும் முறையும் இரண்டு சுருதி, நாலு சுருதி, ஆறு சுருதியாய் வரும் சுரங்களும் பூர்வ தமிழ் மக்கள் ஆயப்பாலையில் வழங்கி வந்த முறையேயொழிய வேறில்லை. பூர்வ தமிழ் மக்கள் பாடிக்கொண்டிருந்தவற்றுள் ஒரு சிறு பாகத்தை மட்டும் இப்போது பெயர் மாறாட்டத்துடன் அறிகிறோமேயொழிய மிக விரிவான பாகங்களை அறியாமலிருக்கிறோம்.

மேலும் வட்டப்பாலையில் வரும் அலகு முறையும் சங்கீத ரத்னாகரர் சொல்லும் அலகு முறையும் சில விஷயங்களில் ஒத்திருக்கிறதாக நாம் கண்டாலும் அவைகள் யாவையும் தெளிவாக அலகு முறை கணிதத்துடன் காட்டி ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டாயிருந்ததில்லை யென்றும் இருபத்து நான்கு அலகுகளே இருந்ததென்றும் அவ்விருபத்து நான்கு அலகுகளில் இணை, கிளையாய் இரண்டு அலகுகள் குறைத்து இருபத்திரண்டாகப் பாடிக் கொண்டு வருகிறார்களென்றும் தற்காலத்திலுள்ள இராகங்களிற் சிலவற்றை உதாரணமாகக் காட்டியுமிருக்கிறோம்.

இராசி வட்டத்தில் பன்னிரண்டு இராசிகளில் சோதிட சம்பந்தமாக அவைகள் ஒன்றோடொன்று பொருந்தி நிற்கும் விதத்தைச் சொல்லி சுருதிகள் இருபத்து நான்காயிருக்க வேண்டுமென்பதை மயக்கமறக் காண்பித்திருக்கிறோம். ஆய்ச்சியர் குரவையில் பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த இசைத் தமிழில் கிரக சுரம் பாடும் முறையையும் அம்முறையினால் சுரங்கள் பன்னிரண்டேயென்றும் சுருதிகள் இருபத்து நான்கேயென்றும் காட்டியிருக்கிறோம்.

தென்மதுரையிலுள்ள தமிழ் மக்கள் பாடிக் கொண்டிருந்த தாய் இராகம் சங்கராபரணமென்றும் அது ஆயப்பாலையின் முதல் இராகமென்றும் இதில் அமைந்திருக்கும் சுரக்கிரமப்படியே மற்றும் இராகங்கள் உண்டாக வேண்டுமென்றும் காட்டியிருக்கிறோம். அந்தத் தாய் இராகத்தில் விளரி கைக்கிளையில் (த-க) ஒவ்வொரு அலகு குறைத்து இருபத்திரண்டாக வட்டப்பாலை முறைப்படிக் கானம் செய்யும்பொழுது, மருதப்பண் என்று அழைக்கப்பட்டதென்று காண்கிறோம். இம்முறையில் சுருதிகள் இருபத்து நான்கே.