முதலாம் இரண்டாம் சங்க காலத்திருந்த இசை நூல்கள் பலவற்றுள் பிரளயத்தால் அழிந்தன போக எஞ்சியிருந்த சில நூல்களும் மற்றவரால் கவனிக்கப்படாமலும் பல யுத்தங்களினால் அழிக்கப்பட்டும் போயினவென்று தெளிவாக அறிகிறோம். இருந்தாலும் பூர்வ இசைத் தமிழுக்குரிய சில இலக்கணங்களும் இராகங்களும் அவற்றிற்குரிய பரம்பரையாரால் ஒருவாறு நாளது வரையும் பேணப்பட்டு வந்திருக்கின்றனவென்று காண்கிறோம். இசைத் தமிழின் சில முக்கிய குறிப்புக்களை ஒரு கதையில் இளங்கோவடிகள் சொல்லியவற்றாலும் அதன் உரைகளாலும் ஒருவாறு காண்கிறோம். அவைகள் தற்காலத்துச் சங்கீதம் பாடுவோர் அனுபோகத்திற்கு ஒத்தவையாகவும் இன்னும் அறிய வேண்டிய நுட்பங்களுடையனவாகவும் காணப்படுகின்றன. இற்றைக்குச் சற்றேறக்குறைய 2,000 வருடங்களுக்கு முன்னுள்ள இளங்கோவடிகள் காலத்திலும் அதற்கு முன் பல்லாயிர வருடங்களாகவும் இசைத் தமிழ் மிக மேன்மை பெற்றிருந்ததென்றும் அதைப் பற்றிச் சொல்லும் விரிவான நூல்கள் வரவர அழிந்து போனபின் அனுபோகம் மாத்திரம் மீந்திருக்கிறதென்றும் இவ்வனுபோகத்தைக் கற்றுக் கொண்ட மற்றவர் பிற்காலத்தில் தங்கள் தங்கள் பாஷைகளில் நூல்கள் எழுதி வைத்தார்களென்றும் தோன்றுகிறது. கி. பி. 5-ம் நூற்றாண்டில் வந்த பரதர் எழுதியது முந்தினதென்றும் அதை அனுசரித்துச் சற்று விரிவாகச் சாரங்கரால் 13ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத ரத்னாகரம் என்னும் நூல் பிந்தினதென்றும் அதில் அரிய விஷயங்கள் அடங்கியிருக்கின்றனவென்றும் கொண்டாடப்படுகிறது. இதில் இசைத் தமிழுக்குப் பிராணனாக விளங்கும் சுருதிகளைப் பற்றி ஒருவாறு சொல்லியிருந்தாலும் வட்டப்பாலையில் த-க வில் மறைத்த இரண்டு சுருதிகளின் நிச்சயம் தெரிந்து கொள்ளாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். த-க வில் இரண்டு அலகு குறைத்து மறைத்ததற்கும் இதன் முன் நியாயம் சொல்லியிருக்கிறோம். வட்டப்பாலைச் சக்கரமே அரிய பல இரகசியங்களை நிறைத்து வைத்திருக்கும் சங்கீதத்தின் வீடாம். விளரியினின்று கைக்கிளை தோன்றும் என்று ஆறாம் இராசியாகிய சிம்மத்தைச் சொன்னதே பூட்டாம். விளரியினின்று கைக்கிளை கன்னியில் தோன்றும் என்று சொன்னதே திறவுகோலாம். வீட்டின் உட்பொருளை அறிய இணை, கிளை, நட்பென்ற முறையே தீபமாம். இவ்வழியை நிச்சயமாய்த் தெரிந்து சந்தேகம் தீர்த்துக் கொள்ளாமல் 22 அலகு என்று சொன்ன மறைப்பில் அகப்பட்டு நூல் எழுதியிருக்கிறார்களென்று தெளிவாய்க் காண்கிறோம். இப்படிச் சங்கீதத்தைப் பற்றிய நூல் எழுதிய பின் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் உண்டென்று மற்றவர் சொல்லவும் நூல்கள் எழுதவும் ஆரம்பித்தார்கள். இதனால் 22 சுருதிகள் என்று சொல்லும் எந்த நூல்களும் பரதர் சங்கீத ரத்னாகரருக்குப் பிந்தியவைகள் என்றே தோன்றுகிறது. அப்படியில்லையானால் சங்கீத ரத்னாகரர் அபிப்பிராயத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டு முந்திய நூல்களில் புகுத்தியிருந்தாலும் இருக்கலாம். இப்படிச் செய்வதும் வழக்கமாயிருக்கிறதென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். ஒரு ஸ்தாயியில் இணை, கிளையாக ச-ப, ச-ம முறைப்படி உண்டாகக் கூடிய சுரங்கள் பன்னிரண்டே. இம்முறையில் சந்தேகம் கொள்ளுகிறவர்கள் மயக்கம் உடையவர்களே. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் நுட்பமான விஷயங்களைக் கவனிக்கையில் உலகத்திலுள்ள எந்த தேசத்தாரிலும் பாஷைக்காரரிலும் தென்னிந்திய தேசமும் இயல், இசை, நாடகமென்ற முத்தமிழையும் அங்கமாயுடைய தமிழ்ப் பாஷையும் முதன்மை பெற்றதென்றும், மேன்மை பெற்றதென்றும் துணிந்து சொல்லலாம்.
|