வந்த இருபத்து நான்கு கால் சுரங்களையும் மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் அவைகளின்படி தம் அனுபோகத்திற்குக் கொண்டு வந்திருப்பார்களென்பது சந்தேகமே. தென்னிந்தியாவிற்கு வந்துபோன எந்நாட்டாரும் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சங்கீத இரகசியங்களையுங் கொண்டு போயிருக்க வேண்டுமென்பது நிச்சயம். தென்னிந்தியாவிலிருந்து தர்சீசுக்கும் எகிப்துக்கும் கிரேக்க தேசத்திற்குங் கொண்டு போன பின், அவ்விடத்திலிருந்து அறிகிற மற்றவர்கள் அவ்விடத்தையே பிரதானமாகச் சொல்வது இயல்புதானே. கொண்டு போனவர்கள் தங்களுக்கு முந்தியவர்களைச் சொல்லாமல் தாங்களே கண்டுபிடித்ததாகப் பெருமையாய்ச் சொல்லிக் கொள்வது வழக்கமாயிருக்கிறதே. புத்தகங்களிலிருக்கிற சில விஷயங்களை அப்படியே எடுத்தெழுதிக் கொண்டு இது தங்கள் சொந்தமென்றும், தற்செயலாய்க் கண்டுபிடித்தோமென்றும் தற்காலத்திலுஞ் சொல்லுகிறதைக் காண்கிறோம். இதோடு காலாவதியும் சேர்ந்து கொண்டால் தாங்கள் சொல்வது தானே உண்மையென்று சாதிப்பார்கள். இந்தியாவிலிருந்து பைதாகோரஸ் கொண்டு போயிருப்பாரென்று நாம் சொல்வது சந்தேகமாயிருந்தாலும், தேச சஞ்சாரஞ் செய்யும் மேல் தேச கனவான்கள், அது கீழ்த் தேசத்திலிருந்தே வந்திருக்க வேண்டுமென்றும், தென்னிந்திய சங்கீதம் முற்றிலும் சாத்திரப் பொருத்த முடையதென்றுஞ் சொல்வதை நாம் கவனிக்க வேண்டாமா? ரோம் தேசத்தில் Roman Catholic குருக்கள் பாடும் chant அதாவது, தேவ தோத்திரம் இந்தியாவில் நாம் இன்றைக்கும் காதில் கேட்கும் இருக்கு வேதத்தில் வழங்கி வரும் சுரங்களாகவேயிருக்குமானால் இந்தியாவினின்று இப்பண்கள் மேற்றேசத்திற்குப் போயிற்றோ? அல்லது அங்கிருந்து இங்கு வந்ததோவென்பது தெரிய வரும். எவர் எப்படிச் சொல்லிக் கொண்டாலும் தென்னிந்திய சங்கீதம் மிகவும் மேலானதென்றும், மிகப் பழமையானதென்றும், அவற்றை முற்றிலும் அறிந்து கொள்ளுந்திறமை வருவதற்கு இன்னும் வெகு நாள் செல்லுமென்றும் துணிந்து சொல்லலாம். 34. முடிவாக நாம் கவனிக்கவேண்டிய சில முக்கிய குறிப்புகள். இதுவரையும் நாம் தென்னிந்திய சங்கீதத்தில் அதாவது முத்தமிழில் ஒன்றாகிய இசைத்தமிழில் வழங்கி வந்த சுரங்கள் ஏழும் அரைச்சுரங்கள் பன்னிரண்டும் சுருதிகள் இருபத்து நான்கும் இன்னவென்று பார்த்தோம். அவைகளில் ஆயப்பாலையாய் வரும் பன்னிரண்டு சுரங்களில் இணை, கிளை, நட்பாகப் பொருந்தி வரும் ஏழு சுரங்களே கானம் செய்யப்பட்டு வந்தது. அவ்வேழு சுரங்களில் இணை, கிளைகளாக வரும் இரண்டு சுரங்களில் இரண்டு அலகு குறைத்து வட்டப்பாலையில் இருபத்திரண்டு சுருதியாக கானம் செய்து வந்தார்கள், அவைகளுள் நால்வகையாழ் முறையும் அவ்யாழுள் பிறக்கும் நாலு ஜாதி முறைகளையும் இதன் முன் பார்த்தோம். இதோடு ஒரு இராகம் பாடுவதற்கு யாழில் வழங்கி வரும் கமக பேதங்களையும் ஆளத்திக்குரிய எழுத்துக்களையும், தாளவகைகளையும் பரதத்திற்குரிய நுட்பங்களையும், ஒன்பது வகைச் சுவைகளையும் இன்னும் இசை சம்பந்தமான பல அரிய விஷயங்களையும் நுட்பமாய் அறிந்து 12000 ஆதி இசைகள் பாடிக்கொண்டிருந்தார்களென்றும் பின் அவைகளுள் 103 பண்கள் வழக்கத்திலிருந்தனவென்றும் அவைகளும் வரவர பெயர் மாற்றப்பட்டு மூன்றாம் சங்க காலத்திற்குப் பின் பௌத்தர்களாலும் மற்றவர்களாலும் குறைவெய்தினவென்றும் பார்த்தோம்.
|