இந்த (2/3),(3/4) என்ற அளவு சட்சம-பஞ்சமத்திற்கு நம் இந்தியாவில் சொல்லப்படுவதேயில்லை. மேலும் சட்சம-பஞ்சமத்தையாவது மற்றும் சுரங்களையாவது திட்டமாகக் காட்டக்கூடிய Tuning fork முதலிய கருவிகளிருந்ததில்லை. இந்தியாவில் யாழ் முதலிய வாத்தியத்தில் புதிதாக மெட்டு வைப்பதற்கும் சுருதிசேர்ப்பதற்கும் பரம்பரையாய்த் தாங்கள் கேட்டு வந்த சுருதி ஞானத்தைக் கொண்டே நாளது வரையும் சுருதி சேர்க்கிறார்களென்று நாமறிய வேண்டும். யாழிலுள்ள மெட்டு வைப்பதற்குச் சுரங்களின் திட்டமான ஓசையைக் காட்டும் எந்தக் கருவியும் அவர்களுக்குக் கிடையாது. தாங்கள் முதல் முதல் சுருதி சேர்க்கும்பொழுது யாழின் பக்கத்திலுள்ள 3 தந்திகளையும் ச-ப-ச என்ற மூன்று சுரங்களுக்குப் பொருந்தச் சேர்த்துக் கொள்வார்கள். ச-ப-ச என்ற சுரங்கள் சட்சம-பஞ்சம முறைப்படியும், சட்சம-மத்திம முறைப்படியும் சேருவதினாலும், ச வின் இருமடங்கு ஓசையுடையது மேல் ச வாகவிருப்பதனாலும் 1, 1(1/2), 2 என்ற ஓசையின் அளவுடையதாயிருப்பதனாலும் மிகுந்த பொருத்தமுடையதாய்க் காதுக்கு வரும். ஒன்றாகிய சட்சமத்தோடும் இரண்டாகிய சட்சமத்தோடும் 1(1/2) யாகிய பஞ்சமம் சேரும்பொழுது அணுப்பிரமாணமுந் தவறாமல் பஞ்சமம் ஒத்து நிற்கும். இப்படி சட்சம-பஞ்சமம் ஒத்து நின்ற ஓசைக்குத் தகுந்த விதம் யாழிலுள்ள சாரணைத் தந்தியில் பஞ்சமம் வைப்பார்கள். இப்பஞ்சமத்தை சட்சமமாக வைத்துக் கொண்டு அதற்குப் பஞ்சமம் காண்பார்கள். இப்படி சட்சம பஞ்சம முறையாய் சப்த சுரங்களும் கண்டுபிடிப்பதில் தாங்கள் பழகி வந்த சட்சம பஞ்சமத்தையும் யாழின் பக்கசாரணையிலுள்ள சட்சம-பஞ்சமத்தையும் எப்போதும் ஒத்துப் பார்த்துக் கொண்டு போவார்களேயொழிய ஒரு மட்டப் பலகையை வைத்துக் கொண்டிருந்ததாக நான் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை, பூர்வ நூல்களில் சொல்லப்படவுமில்லை. மேலும் சட்சம-பஞ்சம முறையாய் வரும் சுரங்களில் கிரகம் மாறுவதினாலுண்டாகுங் கர்த்தா இராகங்களைக் கவனிக்கையில் அவைகள் எவ்விதத்திலாவது கூடிக் குறைந்திருக்குமென்று சொல்ல இடமில்லை. வட்டப்பாலையில் எந்த இராசியிலிருந்து ஆரம்பித்த போதிலும் ஐந்தாம் ஏழாமிடங்கள் ச-ம, ச-ப வாக வருமேயொழிய வேறு விதமாக வராது. பூர்வமான இந்த முறை தென்னிந்தியாவிலிருந்தாலும், இதிலும் சந்தேகந் தோன்றும்படியான சில அம்சங்கள் நூல்களி்ல் ஊடாடியதினால் அழுத்தமாய்ச் சொல்ல ஏதுவில்லாமல் அதுவோ, இதுவோ என்று சந்தேகிக்க நேரிட்டது. இப்படிப்பட்ட சந்தேக நிலையைக் கண்ட மற்றவர் தம் அனுபோகத்திலிருக்கும் யாழ், புல்லாங்குழல் முதலிய சில வாத்தியக் கருவிகளையும், தாங்கள் வைத்துக் கொண்ட அளவுகளையும் இந்தியாவிலிருந்து தங்கள் தங்கள் நாட்டிற்குக் கொண்டு போய் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்கள். தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் அமைந்த சுரங்களுக்கேற்பக் கானமுஞ்செய்து வந்தார்கள். அவைகளில் நாளொரு மேனியாய்ப் பொழுதொரு வண்ணமாய்த் திருத்திக் கொண்டும் வருகிறார்கள். என்றாலும் சட்சம-பஞ்சம முறைப்படிச் சுருதி சேர்க்கும் முறையில் மேலான நிலைக்கு இன்னும் வரவில்லையென்றே தோன்றுகிறது. சட்சம-பஞ்சம முறையாயமைந்த தென்னிந்திய சங்கீதத்தின் நுட்பத்தையும், இராகங்களின் விஸ்தாரத்தையும், மற்ற தேசத்தவர் இன்னுமறியவில்லையென்றே சொல்ல வேண்டும். பூர்வ காலத்தில் தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வந்த சில அம்சங்களை, அதாவது, ஏழு சுரங்களையும் அவைகளில் வழங்கி வந்த பன்னிரண்டு அரைச் சுரங்களையும் அதற்கு மேல் வழங்கி
|