பக்கம் எண் :

768
சுரம் சுருதிகளைப் பற்றிச் சில பொதுக்குறிப்புகள்.

இந்தியாவிலிருந்த புத்த சமயக்குருக்கள் சீனா, ஜப்பான், பர்மா, சீயம், தீபேத்து, பாரசீகம் முதலிய இடங்களுக்குக் கொண்டு போனார்கள். இதற்கு வெகு காலத்திற்கு முன் வியாபார சம்பந்தமாய்க் குதிரைகள் விற்கவும் வாசனைத் திரவியங்கள் வாங்கவும் வந்த அரேபியர்கள் மூலமாய் அரேபியா எகிப்து முதலிய இடங்களுக்கும் மிகவும் விஸ்தாரமாய்ப் பரவிற்று.

உஷ்ணப் பிரதேசத்தின் முக்கிய பாகமாகிய தென்னிந்தியாவில் அகப்படக்கூடிய குரங்கு, மயில் முதலானவைகளும், மிளகு, ஏலம், ஜாதிக்காய், கிராம்பு, சந்தனக்கட்டை முதலிய மலைபடுபொருள்களும், யானைத் தந்தங்களும், விலையுயர்ந்த ஒப்பீரின் தங்கமும், செங்கடலின் வழியாய்த் தர்சீசுக்குக் கொண்டு போகப்பட்டு, அதன் இராஜாவாகிய ஈராமினால் சாலோமோனுக்குக் கொடுக்கப்பட்டனவென்று 1. ராஜாக்கள் 10 : 22 ல் பார்க்கிறோம். அது இற்றைக்குச் சற்றேறக்குறைய 2930 வருடங்களுக்கு முன்னென்று தோன்றுகிறது. இந்த தர்சீஸ் பட்டணம் மத்திய தரைக் கடலில் ஆசிய துருக்கியின் மேற்புறத்திலுள்ள ஒரு முக்கிய பட்டணம். இப்பட்டணத்திற்குச் செங்கடலைக் கடந்து போகும் மார்க்கத்திலும் யாத்திரிகர்கள் தரை வழியாய்ச் செல்லும் மார்க்கம் சொற்ப தூரமென்று நாமறிவோம். இற்றைக்கு 2930 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவிலிருந்து வாசனைத் திரவியங்களையும், குரங்குகளையும், யானைத் தந்தங்களையும் அருமையாக நினைத்துக் கொண்டு போனவர்கள் தென்னிந்தியாவிலுள்ள ஒப்பீர் என்ற இடத்திலிருந்து விலையுயர்ந்த பொன்னையும் மேலானதென்று கொண்டு போனார்கள்.

இப்படி வியாபாரம் செய்தவர்கள் பசும்பொன்னிலும் சிறந்ததாய் இன்பம் விளைக்கும் சங்கீதத்தையும் கொண்டு போகாமல் விட்டிருக்க மாட்டார்கள். தர்சீஸ் பட்டணத்தாரும் அதைச் சேர்ந்த பினிசிய வர்த்தகர்களும் அதற்கு முன்னாலேயே வியாபாரப் பழக்கமுடையவர் களாயிருந்ததனால் முன் சொல்லிய காலத்திற்கும் வெகுகாலத்திற்கு முன்னமே மற்ற இடங்களுக்கும் அவர்களால் தென்னிந்திய சங்கீதம் கொண்டு போகப்பட்டிருக்க வேண்டுமென்று தெரிகிறது.

இந்தியாவின் செழிப்பையும் நாகரீகத்தையும் கேள்விப்பட்ட மற்ற தேசத்தாரில் அநேகர் யாத்திரிகராக வந்திருக்கிறார்கள். இப்படி வந்தவர்களுள் மேற்றிசையாரின் சங்கீதத்திற்கு ஆதி காரணராக மற்றவர்களால் கொண்டாடப்படும் பைதாகோரஸ் என்பவரும் ஒருவர். இவர் இந்தியாவில் சில வருடங்களாகச் சுற்றித் திரிந்து, சில அரிய விஷயங்களைக் கற்றுக் கொண்டு போனாரென்று சொல்லப்படுகிறது. இவர் இற்றைக்கு 2400 வருடங்களுக்கு முன்னுள்ளவரென்று தெரிகிறது. சுமார் 8000 வருடங்களுக்கு முன்னுள்ள தொல்காப்பியரின் காலத்தையும், அவர் காலத்தில் வழங்கி வந்த சங்கீதத்தின் தேர்ச்சியையும், இதன் முன் பார்த்தோம். அதற்கு சுமார் 5000 வருடங்களுக்குப் பின் இந்தியாவிற்கு வந்து மறு பிறப்பைப் பற்றியும் யோகத்தைப் பற்றியும் கற்றுக் கொண்டு போனாரென்று சொல்லப்பட்டிருக்கிறதைக் கொண்டு பைதாகோரஸ் மிகுந்த ஞானியென்று கொண்டாடக் கூடியவராகவே தெரிகிறது.

தென்னிந்தியாவில் வழங்கி வந்த சட்சம-பஞ்சம சட்சம-மத்திம முறையே இந்தியா முழுவதும் ஒருவாறு அக்காலத்தில் சொல்லிக் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதைக் கவனித்த இவர் ச-ப, ச-ம முறையாய்ச் சொல்லப்படும் ஓசையின் பிரமாணத்தை ஒரு தந்தியின் (2/3),(3/4) ஆக வைக்க நிர்ணயப்படுத்திக் கொண்டு போனதாக நாம் நினைக்க இடமிருக்கிறது. தாம் இந்தியாவில் காதினால் கேட்ட பண்களின் அழகை அறிந்த இவர் ச-ப ச-ம முறையாய் வரும் சப்த சுரங்களையும் கண்டுபிடிப்பதற்குத் தந்தியின் (2/3),(3/4) என்ற அளவை இந்தியாவிலிருந்து கையோடு கொண்டு போயிருக்க வேண்டும்.