24 சுருதிகளில் ஏதாவது இரண்டு இணைச்சுரங்களில் ஒவ்வொரு சுருதி குறைத்துக் கானம் பண்ணுவது பூர்வமுறையாம். ஒரு சுருதி குறைத்துக் கொள் என்றது கீழ்ச் சுரத்தினின்று மேல் சுரத்தை வருவித்துக் கமகமாய்ப் பாடுவதாம். இக்கமகத்திலும் நுட்பமான அளவுகளுண்டு. அவற்றின் நுட்பத்தை இதன் பின் காணலாம். தென்னிந்திய சங்கீதத்தின் விரிவை அறிவது சற்றுக் கடினமாயிருந்தாலும் வெகு நுட்பமான சுருதிகளை வழங்கி வந்த நம் முன்னோர் கற்றுக் கொடுத்த உருப்படிகள் நாளது வரையுமிருப்பதனால் அவற்றையும் நிதானிப்பது கூடியதென்று தோன்றுகிறது. இணை, கிளை நட்பு, இரண்டா நரம்பு என்ற முறைப்படி வரும் இந்தச் சுரங்கள் சரியானவையென்று நாம் ஒப்புக்கொள்ளுவோம். இம்முறையை இவ்வளவு தெளிவாகவும், அழுத்தமாகவும் நுட்பமாகவுஞ் செய்ய வேண்டுமென்ற எச்சரிப்பும் வேறு எந்த நூல்களிலும் சொல்லப்பட்டிருக்க மாட்டாதென்பது நிச்சயம். தென்னிந்திய சங்கீத நிபுணர்கள் இவ்விஷயத்தில் மிகவும் தேர்ந்தவர்களாயிருந்தார்களென்று பூர்வ நூல்களினால் நாமறிகிறோம். இந்த சட்ஜம-பஞ்சம முறைப்படிச் சுருதி சேர்ப்பதும் கானம் பண்ணுவதும் பல இராகங்களைப் பாடுவதும் பூர்வ காலத்தில் மிகச் சாதாரணமாயிருந்திருக்கிறதென்று தெரிகிறது. ஷட்ஜம-பஞ்சம முறையில் உழை குரலாக ஆரம்பித்துப் பாடும் குறிஞ்சி யாழையும் துத்தம் குரலாக ஆரம்பித்துப் பாடும் நெய்தல் யாழையும், தாரங்குரலாக ஆரம்பித்துப் பாடும் பாலையாழையும், இளி குரலாக ஆரம்பித்துப் பாடும் மருதயாழையும் நால்வகை நிலத்தின் கருப்பொருள் சொல்ல வந்த தொல்காப்பியர் சூத்திரத்தையும் காணும்பொழுது தொல்காப்பியர் காலத்திலேயே, அதாவது, இற்றைக்கு 8000 வருடங்களுக்கு முன்னேயே இவ்வட்டப்பாலையின் முறையும், சட்ஜம பஞ்சம முறைப்படிச் சுருதிகள் வரும் கணக்கும் இருந்திருக்க வேண்டுமென்று தெளிவாய்த் தெரிகிறது. இளங்கோவடிகள் காலத்தையும், அடியார்க்கு நல்லார் காலத்தையும் சற்றுப் பிந்தினதாகச் சொன்னாலும், ஆசிரியர் நல்லந்துவனார் காலமும் அதற்கு முந்திய தொல்காப்பியரின் காலமும் வெகு காலத்திற்கு முந்தினதென்றும், அக்காலத்திலேயும் இம்முறைகளிருந்தனவென்றும் தோன்றுகிறது. அகத்தியம் இசை நுணுக்க முதலிய நூல்கள் இப்போதில்லாதிருந்தாலும் அகத்தியத்திலிருந்து இயற்றமிழை வேறு பிரித்துச் சொல்லிய தொல்காப்பியத்தில் நால்வகையாழும் அவைகளில் பண் பிறக்கும் முறையும் சொல்லப்பட்டிருப்பதினால் எவ்வித சந்தேகமுமின்றித் தென்னிந்தியாவின் தென்புறமாயுள்ள தென்மதுரையே சங்கீதத்தில் உலகத்தில் முதன்மையுற்றிருந்ததென்பது நிச்சயம். தென்மதுரை அழிந்த பின் அரைகுறையாய் மீந்திருந்த சங்கீத நூல்களும் வர வரக் குறைந்து பேணுவாரின்றித் தாழ்ந்த நிலைக்கு வந்தனவென்று தோன்றுகிறது. தென்மதுரை அழிந்த பின் தென்னிந்தியாவில் வழங்கி வந்த அரை குறையான நூல்களும் சொற்ப அனுபோகமும் பூர்வத்திலிருந்த சாஸ்திர முறைகளை ஒருவாறு காட்டும் அறிகுறியாயிருந்தன. தென்னிந்தியாவோடு வியாபாரத்திற்காக வரத்துப் போக்காயிருந்தவர்களாலும், யாத்திரிகர்களாலும் இந்திய சங்கீதத்தின் சில உண்மைகள் பிறநாடுகளுக்குக் கொண்டு போகப்பட்டன
|