பக்கம் எண் :

766
சுரம் சுருதிகளைப் பற்றிச் சில பொதுக்குறிப்புகள்.

பாடும் சுரங்கள் ஒவ்வொன்றும் கமகமாய் வாசிக்கிறதென்று இப்பொழுது சொல்லுகிறோம். அப்படி வாசிக்காமற் போனால் அந்தந்த இராகம் இனிமையைக் கொடுக்காது.

இவைகள் ஒவ்வொன்றின் அலகு முறைப்படி வரும் இராகங்களையும் அவைகளுக்குரிய பொது விதிகளையும் பற்றி இரண்டாம் புத்தகத்தில் தெளிவாக அறியலாம்.

நாம் சாதாரணமாய் தற்காலம் வழங்கும் இராகங்களில் ஆயப்பாலை முறைப்படி பாடி வரும் 72 கர்த்தா இராகங்களையும் வட்டப்பாலை முறைப்படி இரண்டு சுருதிகள் குறைத்துக் கானம் செய்யும் வேறு சில இராகங்களையும் மூன்று சுருதி நாலு சுருதி குறைத்துக் கானம் செய்யும் சில இராகங்களையும் காண்கிறோம்.

33. சுரம் சுருதிகளைப் பற்றிச் சில பொதுக்குறிப்புகள்.

சங்கீத ரத்னாகரர் தமிழ் இசை நூல்கள் அனேகமாய் அழிந்து குறைந்து போன பின் தாம் கேள்விப்பட்டவைகளை ஒருவாறு சேர்த்து எழுதியிருக்கிறதாகத் தெரிகிறது. ஒரு ஸ்தாயியிலுள்ள 24 அலகில் 22 அலகுகள் பாடப்படவேண்டுமென்று தெளிவாகச் சொல்லாமல் ஷட்ஜ மத்திம காந்தாரக் கிராமங்களுக்கு 22 சுருதிகளென்றதும், ச-ப பன்னிரண்டு சுருதிகளையும், ச-ம எட்டுச் சுருதிகளையும், நடுவிலுடையதாயிருக்க வேண்டுமென்று சொன்னதுமே மயக்கம். இவ்விரு மயக்கங்களையும் நீக்கிக் கொண்டால் மற்றும் அவர் சொல்லிய யாவும் சங்கீதத்திற்கு ஒருவாறு பிரயோஜனமானவையென்று சொல்லலாம். தென்னிந்தியாவின் பூர்வ கானத்திற்கு முக்கியமாயுள்ள வட்டப்பாலையின் உண்மை மறைந்து போன வெகுகாலத்திற்குப் பின் இந்நூல் எழுதப்பட்டதனால் மறைப்போ அல்லது மயக்கமோ என்று சந்தேகிக்க வேண்டியதாயிருக்கிறது. அவர் தெளிவாகச் சொல்லியிருப்பாரானால் இந்தியாவின் சுருதி முறைகளே மேலானவையென்று யாவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு வழக்கத்திற்கு வந்திருக்கும். அதில் சந்தேகமுண்டானதால் அரை அரையாய் வழங்கும் பன்னிரண்டு சுரங்களோடு நின்று விட்டார்கள். தென்னிந்தியாவில் தேர்ந்த வித்வசிரோமணிகள் நிலையான 12 சுரங்களிலும் சந்தேகமுற்றார்கள். வேறு சிலர் 53 என்று அவதிப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஒரு ஸ்தாயியில் 22 என்ற சாரங்கருடைய சொல்லே காரணம்.

முதற் சங்கத்தில் வழங்கி வந்த ஆயப்பாலை திரிகோணப்பாலை சதுரப்பாலை வட்டப்பாலைகளில் ஆயப்பாலையும் வட்டப்பாலையு மாத்திரம் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அதன் பின் வட்டப்பாலையின் கணக்குமறைந்து ஆயப்பாலை மட்டும் நின்றதாகத் தெரிகிறது. சாரங்க தேவர் காலத்தில் இருபத்திரண்டு சுருதிகள் என்று சொல்லித் தம்முடைய நூலை ஸ்தாபித்திருக்கிறார். அதன் பின்வந்த பாரிஜாதக்காரரும் வேங்கடமகியும் பன்னிரண்டு சுரங்கள் அடங்கிய ஆயப்பாலையை எடுத்துக் கொண்டு அதையே எழுதியிருக்கிறாரென்று தெளிவாகத் தெரிகிறது. தங்கள் புத்தகங்களில் ஆயப்பாலையில் வழங்கும் பன்னிரு சுரங்களின் முறைகளை எழுதியிருந்தாலும் தாங்கள் பரம்பரையாய் வெகு காலமாய் வழங்கி வந்த வட்டப்பாலையின் 24 அலகுகளில் கானம் செய்து வந்தார்கள்.

தாங்கள் செய்யும் கானத்திற்கும் தாங்கள் எழுதிய நூலுக்கும் வித்தியாசமிருப்பதாகக் காண்பதே தற்காலத்தில் சுருதியைப் பற்றிச் சந்தேகிக்கக் காரணமாயிற்று.

சந்தேகம் தீர்த்துக் கொள்வதற்கு நம் முன்னோர் தென்னிந்திய கானத்தில் வழங்கி வந்த வட்டப்பாலையே பிரதானமாம். அவற்றுள் வழங்கும் 24 அலகுகளும் 24 சுருதிகளாம்.