நாத சொரூபத்தையும் வல்லமையை எவர் அறிவர்? நாம் சொல்லும் சொற்களாலும் ஜெபிக்கும் ஜெபங்களாலும் பாடும் பாட்டுகளினாலும் எத்தனையோ புதிய காரியங்கள் உண்டாகிக் கொண்டிருக்கின்றன. தெய்வ வல்லமையும் மனுட வார்த்தைகளில் விளங்கி நிற்கிறதே! கல் கரைவதை நாம் காணாதிருந்தாலும் கல் போல் கடின மனம் கரைகிறதைப் பார்க்கிறோமே. பாறை நமது சொல்லினால் இடிந்து போகாமற் போனாலும் மனமேட்டிமையாகிய கடின சித்தம் நீங்கித் தாழ்மையடைகிறதைக் காண்கிறோம். புல் பூண்டு தாவரங்கள் நமது சொல்லில் உண்டாவதை நாம் காணாதிருந்தாலும் ஆவியின் கனிகளைத் தரும் ஜீவவிருக்ஷம் வளர்ந்தோங்கக் காண்கிறோமே. இதனாலல்லவோ "மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத் தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று கிறிஸ்து பரமாத்துமா சொல்லியிருக்கிறார். (மத்தேயு. 12-36.) பானைகளையுடைத்த சத்தத்தினால் கோட்டை இடிந்து விழுமா? பேசுவதினால் பாறையிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வருமா? இன்னார் மேல் ஆணை சொல்லுகிறேன் என்றால் துஷ்டமிருகங்களும் சர்ப்பங்களும், ஆவிகளும், நோய்களும் விலகுமா? சுரமண்டலம் வாசித்தால் பொல்லாத ஆவிகள் நீங்குமா? இப்படியே ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலும் நடைபெறுவது நாதத்தின் மகிமையேயன்றி வேறில்லை. இந்நாதத்தைப் பற்றிச் சொல்லும் சாஸ்திரங்கள் மிக அருமையானவைகள். அவைகளின் நுட்பம் கணிதத்திலும் மட்டப் பலகையின் அளவிலும் அகப்படுவது கூடிய காரியமல்லவே. சுருதியைப் பற்றிச் சொல்ல வந்தவர்கள் யாவரும் ச-ப, ச-ம விற்குரிய ஓசையைக் கருவிகளால் அளந்து ஒன்றோடொன்று பெருக்கி பெருக்கி வந்ததை மற்றொன்றால் பெருக்கி அதில் கொஞ்சம் குறுக்கி மற்றொன்றில் கொஞ்சம் கூட்டி அநேக கணக்குகள் காட்டுகிறார்கள். இக்கணக்குகள் ஒருவர் சொல்வதற்கு மற்றொருவர் சொல்வது ஒத்திருந்தாலும் ஒருவாறு ஒப்புக் கொள்ளலாம். குருடனும் குருடனும், கிடங்கில் விழுந்தால் ஒருவர்க்கொருவர் துணையாயிருக்குமே. அப்படிக் கூடயில்லையே. தென்மதுரையிலிருந்த பூர்வ தமிழ் மக்கள் இப்படிப்பட்ட கணக்குகள் சொல்லவேயில்லை. இயற்கை அமைப்பின்படி ஐந்து பூதங்கள் ஐந்துள் ஐந்தாய் வகுக்கப்படும்பொழுது அவைகளில் காணப்படும் பங்குகளும் படிப்படியாய் மெலிந்து நிற்குமென்பது யாவரும் அறிந்த விஷயமே. ஒவ்வொரு பூதமும் அளவிலும் கனத்திலும் அம்சங்களிலும் ஒன்று போலிருக்குமா? நிலத்தின் கனமும் ஆகாயத்தின் கனமும் ஒன்றாகுமா? இவை மிக விரிவும் நுட்பமானவை. ஒன்றிற்கொன்று அணுப்பிரமாணமும் தவறாதிருக்க வேண்டிய ஓசைக்கு நானும் கணக்கு எழுதுவது உடலையும் உயிரையும் நிறுத்து உடல் ஒரு பாரமென்றும் உயிர் ஒரு மணங்கென்றும் கணக்கிடுவது போலாகுமேயொழிய வேறில்லை. இவ்விஷயம் எனக்குப் பிரியமில்லாதிருந்தாலும் சுருதி நிச்சயத்தைக் கணக்கில் காட்டும் நிபுணரான மற்றவர்களுக்கு கணக்கில் காட்டாமற் போனால் ஒப்புக் கொள்ளமாட்டார்களென்று அவர்கள் மனதைத் திருப்தி செய்வதற்கென்றே தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதிகளை சற்றேறக் குறைய கணக்கில் காட்டத் துணிந்தேன்.
|