ஓசை வெகு நுட்பமாயிருப்பதினால் 2/3,3/4,1/2,1/4,1/5,1/6 முதலிய பின்ன அளவுகள் ஒன்றோடொன்று பெருக்கப்படும்பொழுது சரியான சுரத்தின் அளவை ஒருக்காலும் கொடாதென்பது நிச்சயம். ஆகையினால் சற்று நுட்பமாய்க் காட்டக்கூடிய கணக்கே இதற்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. பூர்வ தமிழ் மக்கள் வழங்கி வந்த ஆயப்பாலையான 12 சுரங்களுக்கும் வட்டப்பாலையாய் வழங்கும் 24 சுருதிகளுக்கும் மேற்பட்டு சூட்சமமான சுருதிகள் பல வழங்கி வந்திருக்கிறார்களென்று கர்நாடக சங்கீதத்தில் பாண்டித்தியமுள்ள சிலராவது காண்பார்கள். அச்சூட்சம சுருதிகள் இன்னின்னவென்று நாம் அறிய வேண்டியது அவசியமாயிருப்பதினால் நுட்பமான கணக்கைச் சொல்லித் திருஷ்டாந்தப்படுத்துவது ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் உண்டென்று கலக்கமுற்ற நமக்கு கலக்கம் தெளிவித்து அதற்கு மேல் நிலைக்குப் போவதற்கு ஏதுவாயிருக்கும். நம் முன்னோர்களின் உயர்வையும் இசைத் தமிழின் நுட்பத்தையும் அறிகிறதற்கு அது அனுகூலமாயிருக்குமென்றே 4 வது பாகத்தில் கர்நாடக சங்கீதமென்றழைக்கப்படும் இசைத் தமிழில் வழங்கி வரும் சுருதிகளின் கணக்கு என்ற தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன். மூன்றாம் பாகம் முற்றிற்று.
|