கடவுள் துணை. 
கருணாமிர்த சாகரம். முதல் புஸ்தகம். 4-வது பாகம். கர்நாடக சங்கீதமென்றழைக்கப்படும் இசைத்தமிழில் வழங்கிவரும் சுருதிகளின் கணக்கு. முகவுரை. கருணாமிர்த சாகரத்தின் எல்லையை அறிவதற்குச் சிறந்த மிதவையாய் விளங்கும் சங்கீத சாஸ்திரமானது மிகவும் மேலானதென்றும் அவ்வொழுங்கின்படியே கானஞ்செய்வது உள்ளத்தைப் பரவசப்படுத்திச் சீவர்களை மோட்சக்கரை சேர்க்கும் என்றும் அறிஞர்கள் யாவரும் ஒப்புக்கொள்வார்கள். தெய்வத்தை வழிபடும் உத்தமமான பக்தர்கள் பக்தி நிறைந்த தம் உள்ளத்திலிருந்து தெய்வத்தைத் துதித்துச்சொல்லிய வார்த்தைகளும் ஓசைகளுமே சங்கீதசாஸ்திரத்திற்கு வித்தாகவும் வேதமாகவும் இலக்கண நூற்கு ஆதியாகவுமிருக்கின்றனவென்று நாம் அறியவேண்டும். இம்முதன்மையான தேவ தோத்திரங்களுக்குப் பின்னே அவற்றிற்கு அங்கமாக பல சாஸ்திரங்கள் ஏற்பட்டன. எள்ளினின்று எண்ணெயும் கரும்பினின்று வெல்லமும் உண்டானது போலப் பக்தர்களியற்றிய பகவத்தோத்திரங்களிலிருந்தே எல்லா சாஸ்திரங்களும் உண்டாயிருக்க வேண்டுமென்று சொல்லலாம். எங்கும் நிறைந்த தெய்வத்தின் திரு உருவத்தை இயற்கையின் கருப்பொருளாகக் கண்ட அவர்கள் தம் அனுபோகத்தையும் அதோடு ஒத்திருக்கக் கண்டு ஆனந்தித்தார்கள்.
|