தூலவடிவாகத்தோன்றும் அண்ட பிண்ட சராசரங்கள் யாவும் தமது சூட்சமத்தில் ஒன்றுபட்டு ஒரு சரீரத்தின் அவயவங்கள்போல ஏக ‘சீவனாய் விளங்கி நிற்பதையும் ஒரே உணர்ச்சியுற்று உதவி நிற்பதையும்’ அவர்கள் காணுந்தோறும் கர்த்தன் திரு உருவைக்கண்டதாகவும் அவன் தம்மோடு கலந்து உறவாடியதாகவும் உள்ளபடியே அறிந்து சீவகாருண்ய மூர்த்தியாகிய அவனைப்புகழ்ந்து சீவகாருண்யராய் விளங்கினார்கள். மணியின் ஒளிபோலவும் மலரின் மணம்போலவும் தேனின் சுவைபோலவும் தேகத்தின் உயிர் போலவும் நிறைந்து நின்ற முதல்வனே வார்த்தையாய் (நாதமாய்) இன்னிசையுடன் எங்குமானான். அவ்வார்த்தையே எழுவகைத் தோற்றத்திற்கும் ஆதியாயிருந்ததுபோல எழுவகைத் தோற்றத்திலுள்ள சீவர்களின் சத்தத்திலிருந்தே சப்தசுரங்களும் சுருதிகளும் பிறந்தன. பிராணிகளின் சரீரத்திற் சீவனானது கீழ் ஆறும் மேல் ஆறுமாகிய பன்னிரண்டு இடங்களில் இயங்கி வெவ்வேறு செயல்களை யுடையதாயிருப்பதுபோல ஏழு சுரங்களும் மத்திமத்தின் கீழ் ஆறு இடங்களிலும் மேல் ஆறு இடங்களிலும் நிறைந்து நின்று வெவ்வேறு இன்னிசையாய் விளங்குகின்றன. நாத சொருபியாய் நின்ற முதல்வனே எழுவகைத் தோற்றத்தை அடைந்து சீவர்களின் தூல சூட்சம சரீரத்தில் பன்னிரு இடங்களில் வசித்து வருகிறான் என்பதை சப்த சுரங்களுக்கும் முதன்மையாய் நின்ற சட்சமமானது 1, 2, 3, 4, 5, 6 போலப் படிப்படியாய் உயர்ந்து சப்த சுரமாகி மத்திமத்தின் கீழ் ஆறு சுரங்களாகவும் மேல் ஆறு சுரங்களாகவும் கிரமம்பெற்று விளங்கி நிற்கிறதைக்கொண்டு தெளிவாய் அறியலாம். தூல சரீரத்தின் அமைப்பையும் பிராணனின் நிலையையும் அதன் இயக்கத்தையும் நன்றாய் அறிந்த தெய்வ பக்தர்கள் எவ்விதத்திலும் அத்தூல உடம்பையே ஒத்திருக்கும் யாழ் யென்னும் சிறந்த வாத்தியம்செய்து தங்கள் தெய்வ தோத்திரங்களடங்கிய கானத்திற்கு உதவியாக உபயோகித்துவந்தார்கள். வாத்தியத்தின் அமைப்பும் அதன் இன்னிசைகளும் முற்றிலும் சரீரத்தின் சில இரகசியங்களை வெளிப்படையாக உடையதா யிருக்கிறதென்றும் எல்லா வாத்தியங்களிலும் இனிமை யுடையதென்றும் கானத்தில் வழங்கும் குறில், நெடில், ஒற்று, குறுக்கம், அளபெடை முதலியவற்றைத் தெளிவாய்ச்சொல்லக்கூடியது யாழ் ஒன்றுதான் என்னும் நிச்சயம் பற்றி யாழைக் கொண்டு கடவுளை ஆராதிக்க வேண்டுமென்றும் யாழிசையில்லாத ஆராதனை பயனற்றதென்றும் சொல்லியிருக்கிறார்கள். யாழின் தூலத்தோற்றம் மானுடத்தூலத் தோற்றத்திற்கும் அதன் ஓசை பிராணிகளின் சீவனுக்கும் முற்றிலும் ஒத்திருக்கிறது. இரகசியமான இவ்வாதாரத்தைக் கொண்டே பக்தியிற் சிறந்த நம்முன்னோர் சங்கீத சாஸ்திரம் செய்திருக்கிறார்களென்று நாம் எண்ணப் பல காரணங்களிருக்கின்றன. உலகத்தின் சிருஷ்டிக் கிரமம் எப்படி பல யுகங்களாகப் படிப்படியாய் விருத்தியாகி வந்ததோ அப்படியே சப்த சுரங்களும் ஒன்றின் பின் ஒன்றாய்ப் பல பக்தர்களால் கானத்தில் சேர்க்கப்பட்டு அநேக ஆயிர வருடங்களுக்கு முன்னேயே பூர்ண நிலையை அடைந்திருந்ததென்று தெரிகிறது. இற்றைக்குச் சுமார் 8,000 வருடங்களுக்கு முன் முதல் ஊழியில் முதற் சங்கத்திருந்த 4,400 தமிழ்ப் புலவர்களும் 4,400 வருடங்களாக இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழிலும் தேர்ச்சிபெற்றிருந்தார்களென்று தெளிவாய் அறிகிறோம்.
|