பக்கம் எண் :

780
கர்நாடக சங்கீதத்தின் வழங்கிவரும் சுருதிகளின் கணக்கு. முகவுரை.

சங்கீதத்தை தங்கள் பாஷையின் ஒருபாகமாக வைத்து எல்லோரும் கற்று வந்ததையும் முடிமன்னர்களும் பிரபுக்களும் அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதையும் நாம் அறிகையில் இந்தியாவின் தென்பாகத்திலுள்ள தென்மதுரையே சங்கீதத்திற்குத் தாயகமாயிருந்ததென்று சொல்லக்கூடியதாயிருக்கிறது.

மேலும் இன்றைக்குச் சுமார் 8,000 வருடங்களுக்குமுன்னுள்ள தொல்காப்பியத்தின் நால்வகை யாழ்களையும் இற்றைக்கு 1,800 வருடங்களுக்கு முன்னுள்ள இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் நால்வகை யாழ்களையும் சீர்தூக்கிப்பார்ப்போமேயானால் இந்தியாவின் தென்பாகமே சங்கீதத்திற்கு முதன்மை பெற்றதென்றும் பாண்டியராச்சியமழிந்தபின் சேர சோழ ராசர்கள் சங்கீதத்தை மிகவும் ஆதரித்து வந்தார்களென்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய பாஷை பேசும் திராவிட தேசத்து வித்துவசிரோமணிகள் சங்கீதத்தில் தற்காலத்தில் வழங்கி நிற்கும் பதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், இராகமாலிகைகள், பல்லவிகள் முதலியவைகளை ஏராளமாய்ச் செய்திருக்கிறார்களென்றும் நாம் பெருமையாய்ச் சொல்லிக்கொள்ளக்கூடியதாயிருக்கிறது. புரந்தரவிட்டல் தாஸ், க்ஷேத்திரஞ்ஞர், தியாகராஜ ஐயர், அருணாசலக்கவிகள், கோபாலபாரதி முதலிய கர்நாடக வித்துவசிரோமணிகள் சங்கீதத்திற்குரிய உருப்படிகள் செய்து வைத்திருப்பதுபோல் வேறு எந்த நாட்டிலாவது எந்தப் பாஷையிலாவது ஏராளமாயிருக்காதென்று நாம் துணிந்து சொல்லலாம். துருபத், தில்லானா, கியால், டப்பா, டுமுரி, பத்தியங்கள், திண்டி, ஜாக்கி போன்ற இலேசான முறைகளில் மற்றவர்க கானமிருக்கிறதையும் நாம் மறந்து போகக்கூடாது.

மேலும் இந்தியாவின் தென்பாகமாகிய திராவிட தேசத்து வித்துவசிரோமணிகளில் தஞ்சையிலிருந்த வேங்கடமாகியும், திருவாரூர் முத்துசாமி தீக்ஷதரும், வையைச் சேரி மகா வைத்தியநாதையர் அவர்களும், தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழிற் பாண்டித்திய முடையவர்களாயிருந்தாலும் சமஸ்கிருதத்திலும், தெலுங்கிலும் சில உருப்படிகள் செய்து வைத்தார்கள். சற்றேறக்குறைய 4,400 வருடங்களாக நிலைபெற்றிருந்த முதற் சங்கமும் தென்மதுரையும் அழிந்தபின் தென்னிந்தியாவின் சங்கீதம் பின் ஊழியில் வர வர மலினமடைந்துபோனாலும் தென்னிந்தியாவிலுள்ள சேர சோழ பாண்டிய மன்னர்களாலும் கோவில் மானியங்களாலும் ஒருவாறு ஆதரிக்கப்பட்டு வந்திருக்கிறதென்று தெளிவாய்த் தெரிகிறது. இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் பேணுவாரற்றும் போன பின் ஊழியில் அவற்றையே சீவனமாகக் கொண்டவர்கள் மாத்திரம் அவற்றை ஒருவாறு பேணிவந்தாலும் சங்கீத சாஸ்திரத்திற்கு ஆதாரமாயுள்ள பழமையான நூல்கள் முற்றிலும் அழிந்துபோயினவென்றே சொல்லவேண்டும்.

தமிழ்நாட்டில் தோன்றிய வித்துவசிரோமணிகள் சங்கீத சாஸ்திரத்திற்கு மிக அருமையாயுள்ள அநேக உருப்படிகள் செய்து பரம்பரையாய்ப் பாடம் சொல்லிவைத்தாலும் மற்றவருக்குச் சொல்லப்பிரியமில்லாதவர்களாயிருந்ததி னிமித்தம் அவர்கள் செய்துவைத்திருந்த அனேக வேலைகள் அழிந்துபோயின. அவர்களிடத்திற் பாடம் கேட்டசிஷ்ய வர்க்கத்தாரும் சொல்லாமற்போனார்கள். இப்படி அனேக அருமையான வேலைகள் வர வர அழிந்து கர்நாடக சங்கீதத்தின் சம்பிரதாயம் போய் பார்சி, இந்துஸ்தானி, ஆர்மோனியம், கிராமபோனில் வந்து நிற்கிறது.