இப்படி நான் சொல்வதைச் சிலர் வேறுவிதமாய் நினைக்கலாம். சங்கீதத்தைப்பற்றிய பிரியம் யாவருக்கும் தற்காலத்தில் உண்டாயிருக்கிறதென்பதை மறுக்க வரவில்லை. ஆனால் ஆணிமுத்திற்குப் பதில் சூரத்துமுத்தும், சொக்கச் சிவப்புக்குப் பதில் காச்சுக்கல்லும், பட்டுத்தலைப்பாகைக்குப் பதில் நெட்டித்தலைப்பாகையும் மலிவாய் வழங்குவதுபோல் ஆயிற்றே யொழிய நுட்பமான சுருதிகள் வழங்கிவரும் இராகங்களைக் கேட்கும்படிக்கில்லாமல் போகிறதென்று வருத்தப்படவேண்டியதா யிருக்கிறது. முதல் ஊழியின் பின் சமணர்களாலும் பௌத்தர்களாலும் ஒருவாறு வெறுக்கப்பட்ட சங்கீதம் சாமானியர் வயிற்றுப் பிழைப்பிற்குரிய தொழிலாக எண்ணப்பட்டது. ஆனால் சங்கீதம் எந்தத் தேசத்தில் அதிக விருத்தியுடையதாயிருந்ததோ அந்தத் தேசம் மிகுந்த நாகரிகத்தையுடையதாயிருந்திருக்க வேண்டுமென்று சொல்வது சரியே. அதோடு அந்தத்தேசம் சத்தியத்தைக் காப்பாற்றும் உத்தமர்களும் தன்னுயிர்போல் மன்னுயிர்களை நினைத்துச் சண்டை சச்சரவுகள் உண்டாகாமல் சமாதானத்தையே விரும்பத்தக்கவருமாகிய அரசர்களை உடையதாகவு மிருக்கவேண்டும். மழைக்குறைவினால் தேசத்தில் பஞ்சம் உண்டாகாமல் தானியாதிகள் மலிந்து வேறு கவலையின்றி நீதி நூல்கள் வாசித்தும் பிரசங்கித்தும் எழுதியும் வரும் உத்தமமான காலத்லேயே சங்கீதம் விருத்தியாகக் கூடியதென்று நாம் யாவரும் அறிவோம். ஒருவன் பசியினால் வருந்தும்பொழுது பாடுவானா? மற்றொருவன் பாடினாலும் அவன் பாட்டைக் கேட்பானா? ஐதர் (Hyder) கலகத்தில் சங்கீதக் கச்சேரி நடக்குமா? மேலும் கடவுளை ஆராதிப்பதும் துதிப்பதும் விழாக்கொண்டாடுவதும் தங்கள் துன்பம் நீங்கிய காலத்தேயென்று தெளிவாகத் தெரிகிறது. அரசர்கள் ஒருவருக்கொருவர் பகைத்து ஓயாது படையெடுத்துக் குடிகளையழித்து மீதியுள்ளோர் எங்கே புகலிட மடைவோமென்று திகைத்து தாங்கள் அருமையாய் நினைத்த பொருள்களையும் சுவடிகளையும் புதைத்து ஒளித்து ஓடிப் பிரதேசங்களில் யாசித்து நிற்கும் காலத்தில் சங்கீதம் ஏது? நாகரிகத்தைக் குறிக்கும் கைத் தொழில்களும் கலைகளும் அழிந்து போகும் என்பதை நாம் யாவரும் அறிவோம். தற்காலத்தில் நடக்கும் ஜர்மானிய யுத்தத்தின் கொடுமைகளை விஸ்தாரமாக அறிவோமே. சீர்பெற்றோங்கிய தென்மதுரையும் அரசு இழந்து சோழராசர்கள் முன்னுக்கு வந்தகாலத்தில் ஒருவருக்கொருவர் செய்த கலகத்தினால் சங்கீத வித்தையும் அதைச்சேர்ந்த பல நூல்களும் படிப்படியாய் அழிந்து மீதமாயிருந்தவைகளும் மகமதியர் கைவசப்பட்ட காலத்தில் மிச்சமின்றி அழிந்து போயிருக்கவேண்டும். சோழ ராச்சியத்தின் தலை நகராகிய தஞ்சைமாநகரத்தில் சரஸ்வதி மாலில் சேர்ந்து வைக்கப்பட்டிருக்கும் நூல்களைக் கவனித்தவர்கள் அவைகளில் அநகே அருமையான புத்தகங்கள் கணக்கு ஏற்படுகிறதற்கு முன்னேயே பலரால் எடுத்துக்கொள்ளப்பட்டனவென்று அறிவார்கள். அதிலிருந்த அருமையான சோதிட நூல்களும், சங்கீத நூல்களும், வைத்திய நூல்களும் இன்னும் பல அருமையான நூல்களும் பலரால் எடுத்துக்கொள்ளப்பட்டன. மீதியாயிருந்து கணக்குக்கு வந்த புத்தகங்களில் சங்கீதத்தையும் சோதிடத்தையும் சேர்ந்த நூல்களாகிய சதுர் தண்டிபிரகாசிகையும் சுக்கிரநாடியும் போய்விட்டனவென்று ஏழுதப்பட்டிருப்பதை நாம் இன்றும் பார்க்கலாம். இதுபோலவே ஒவ்வொரு இராஜதானியிலும் புஸ்தகசாலைகள் இருந்தனவென்றும் அவ்விராஜ்யம் அழிந்தபின் புஸ்தகசாலைகளும் அழிந்திருக்கவேண்டுமென்றும் நாம் எண்ண இடந்தருகிறது. 4,000 வருடங்களாய் நடந்துவந்த முதற் சங்கத்திற்க ஒரு பெரிய தமிழ்ப்புத்தகசாலை யிருந்திருக்கவேண்டுமென்று நான் சொல்வது தப்பாகமாட்டாது. புத்தகம் அக்காலத்
|