பக்கம் எண் :

782
கர்நாடக சங்கீதத்தின் வழங்கிவரும் சுருதிகளின் கணக்கு. முகவுரை.

திலில்லை யென்றாலும் புத்தகங்கள் போன்ற சுவடிகள் அல்லது ஏடுகள் ஏராளமாய்ச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கவேண்டும்.

பர்மா (Burma) பிடிபட்டகாலத்தில் பொங்கிகள் என்று அழைக்கப்படும் புத்தமத சன்னியாசிகள் பத்திரம் பண்ணி வைத்திருந்த அரிய விஷயங்களடங்கிய ஓலைச்சுவடிகளை பட்டாளத்திலுள்ளோர் அடுப்புக்கு விறகாக உபயோகித்தார்கள் என்பதைக் கேள்விப்படுகையில் மகமதிய சேனாதிபதியாகிய ஓமர் (Omar) காலத்தில் அலெக்ஸன்றியாவிலுள்ள புத்தக சாலையை ஆறுமாதம் விறகாக உபயோகித்தார்களென்பது ஞாபத்திற்கு வருகிறது. தற்காலத்தில் நடக்கும் ஜர்மானிய யுத்தத்தில் ஜர்மானியர்கள் பெல்ஜியத்திலுள்ள புத்தகசாலைகளை நெருப்பிட்டு அழித்து பிரான்சில் மிகப்பூர்வீகமும் மிக அழகுமுள்ளதென்று உலகத்தில் கொண்டாடப்படும் தேவாலாயத்தையும் மற்றும் மிக அழகான சிற்பவேலையுள்ள தேவாலயங்களையும் சித்திர வேலைப்பாடுள்ள படங்களையும் பாழ்பண்ணினதை நாம் அறிவோமே. முதற் சங்கத்துப் புத்தகசாலை கடலால் அழிந்துபோயிற்று. அதில் மிஞ்சியிருந்த சில புத்தகங்கள் கபாடபுரத்தில் கடலால் அழிந்துபோயின. மூன்றாவது சங்கமிருந்த கூடலாலவாய் என்ற மதுரையிலிருந்த புத்தகசாலையும் பல கலகங்களின் காரணமாய் அழிந்து மிச்சமாயிருந்த நூல்களும் மகமதியர் அரசாட்சிக்கு வந்த காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கவேண்டுமென்று நினைக்க ஏதுவிருக்கிறது.

முத்தமிழில் இசை, நாடகம் என்ற இரண்டு பாகமும் போய் மீதியாயிருந்த இயற்றமிழின் சிறந்த பாஷை நடையும் யாப்பின் நடையும் பல அரும்பதங்களும் குறைந்து அன்னிய பாஷையின் மொழிகள் பல கலந்து மிகவும் மெலிவடைந்த காலம் இதுவென்று அறிவாளிகள் யாவரும் ஒப்புக்கொள்வார்கள். இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழின் பெரும்பாகம் பலவிதமாய் அழிந்துபோனபின் அவைகளிலுள்ள விஷயங்கள் பல பாஷைகளில் எழுதப்பட்டிருக்கவேண்டுமென்று தெரிகிறது.

முன் ஊழியிலிருந்த சங்கீதத்தின் விரிவான பாகமும் 12,000 இராகங்களின் கிரமமும் ஒருவாறு மறைந்துபோன காலத்தில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதியிருக்கிறார் என்று தெரிகிறது. அவர் காலத்திலிருந்த சங்கீத முறையும் ஒருவாறு குறைந்து மெலிந்த காலத்தில் இற்றைக்குச் சுமார் 800 வருடங்களுக்கு முன் உரையாசிரியர்கள் அதற்கு அர்த்தம் எழுதியிருக்கிறார்கள். உரையாசிரியர்களுக்குச் சுமார் 800 வருடங்களுக்குப் பின்னுள்ள நமக்கு உரையின் அர்த்தம் அறிந்துகொள்ளக் கூடாமலிருக்கிறது. அக்காலத்தில் வழங்கிய இராகங்களின் பெயர்களும் சங்கீதத்திற்குரிய சில பெயர்களும் வாத்தியக் கருவிகளும் முற்றிலும் போய் சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற அந்நிய பாஷைகளின் வார்த்தைகளே தற்காலத்தில் நம் வழக்கத்திலிருக்கின்றன. சங்கீத ரத்னாகரம் எழுதிய சாரங்கதேவர் இற்றைக்குச் சற்றேறக்குறைய 700 வருடங்களுக்கு முன்னுள்ளவரென்ற திட்டமாய் அறிகிறோம். இவர் சமஸ்கிருதத்தில் எழுதிய சங்கீத ரத்னாகரமென்றும் நூலே இந்தியாவின் சங்கீதத்திற்கு முதல் நூலாக எண்ணப்படுகிறது.

சங்கீத ரத்னாகரர் சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய அடியாாக்கு நல்லார்க்கும் கவிச் சக்கரவர்த்தி ஜெயங்கொண்டானுக்கும் சுமார் 100, 200 வருடங்களுக்குப் பிந்தினவரென்றும் இளங்கோவடிகள் காலத்திற்கு சற்றேறக்குறைய 1,000 வருடங்களுக்குப் பின்னிருந்தவரென்றும் தெளிவாய்த் தெரிகிறது.