பக்கம் எண் :

849
வட்டப்பாலையில் வழங்கிவந்த இருபத்துநான்கு சுருதிகளுக்குக் கணித முறை.

ஒரு ஆரோகண அவரோகணத்தில் வரும் ஏழு சுரங்களில் கிளை கிளையான அல்லது இணை இணையான இரண்டு சுரங்களில் இரண்டு அலகுகளைக்குறைத்துப் பூர்வ தமிழ்மக்கள் கானம் செய்து வந்திருக்கிறார்கள்.

இதனால் ஒரு ஸ்தாயியை பன்னிரண்டு பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு சுரத்திற்கும் இரண்டு இரண்டு அலகுகளாக வைத்து இருபத்து நான்கு சுருதிகளாக நிச்சயித்து அதில் இரண்டு அலகுகளைக் குறைத்து இருபத்திரண்டு அலகுகளில் கானம் செய்திருக்கிறார்களேயொழிய, ஒரு ஸ்தாயியை 22 அலகுகளாகப் பிரித்து அதில் கானம் செய்ததாக முற்றிலும் தெரியவில்லை. இது தமிழ் மக்களின் கானத்தின் விதி வகைகள் மறைந்து விபரம் சொல்லுவோர் இல்லாமற்போன கடைசிகாலத்தில் இற்றைக்குச் சுமார் 700 வருடங்களுக்கு முன்னதாக சாரங்கரால் தவறுதலாக எழுதப்பட்டதென்று தெளிவாகத் தெரிகிறது.

ஒரு ஸ்தாயியில் இருபத்து நான்கு சுருதிகள் தான் வரவேண்டுமென்றும் அப்படி வராமல் அதற்கு மேற்பட்டாவது அதற்குக் குறைந்தாவது வரும் சுருதி முறைகள் முற்றிலும் பிசகானவையென்றும் கர்நாடக சங்கீதத்தில் எக்காலத்திலும் வழங்கி வரவில்லை என்றும் அங்கங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

மேலும் ஒருஸ்தாயியிலுள்ள இருபத்துநான்கு சுருதிகளில் இணைகிளையாய் இரண்டு சுருதிகள் குறைத்து தற்காலத்திலும் கர்நாடக சங்கீதம் பாடப்பட்டு வருகிறதென்பதற்குச் சில இராகங்கள் திருஷ்டாந்தம் காட்டியிருக்கிறேன். சுருதிகள் ஒன்றுதான், இரண்டுதான், மூன்றுதான், நாலு தான், ஒன்பது விதந்தான், இருபத்திரண்டுதான், அறுபத்தாறுதான், சுருதிகள் அனந்த விதங்கள்தான் என்று சங்கீத ரத்னாகரர் சந்தேகத்தின்மேல் சொல்லி இருபத்திரண்டு சுருதிகள் உண்டென்கிறார். இந்த இருபத்திரண்டு சுருதிகளும் தமிழ மக்கள் வழங்கிவந்த இசைத்தமிழின் இருபத்துநான்கு அலகுகளில் இருபத்திரண்டு அலகுகள் தானேயொழிய வேறில்லை. விளரி கைக்கிளையில் இரண்டு அலகுகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

சங்கீத ரத்னாகரர் ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டு என்று சொன்னது முற்றிலும் சரியானதல்லவென்றும் அவர் முறையின்படி ஒரு ஸ்தாயியை இருபத்திரண்டு பாகங்களாகப் பிரிக்கும்பொழுது அதிலுண்டாகும் சுரங்களும் சுருதிகளும் கர்நாடக சங்கீதத்திற்குக் கொஞ்சமாவது இசைந்து வராதென்றும் உறுதியாகச் சொல்லுவோம்.

ஒரு ஸ்தாயியிலுண்டாகும் ஏழு சுரங்களையும் ஒரு இராசி வட்டத்தில் நிற்கும் பன்னிரு அரைச்சுரங்களையும் பன்னிரு இராசிகளில் இரண்டு இரண்டு அலகோடு நிற்கும் இருபத்து நான்கு அலகுகளையும் அல்லது சுருதிகளையும் சுமார் 12,000 வருடங்களுக்கு முன்னாலேயே பூர்வ தமிழ்மக்கள் இசைத்தமிழாக வகுத்து ஆயப்பாலை முறையாகவும் வட்டப்பாலை முறையாகவும் வழங்கிவந்திருக்கிறார்களென்று திட்டமாகச் சொல்லுவோம். அவர்கள் வழங்கிவந்த வட்டப்பாலை முறையினால் கர்நாடக சங்கீதத்தில் ஒரு ஸ்தாயியில் வழங்கிவரும் சுருதிகள் இருபத்துநான்கேயென்றும் ஒரு ஸ்தாயியில் இருபத்திரண்டென்று அவர்கள் சொல்லவில்லை யென்றும் நாம் தெளிவாகக் காண்கிறோம்.

ஒருஸ்தாயியில் வழங்கிவரும் இருபத்துநான்கு சுருதிகளும் இன்ன அளவோடு வருகின்றனவென்று நாம் கணக்கினால் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இதன்முன் பன்னிரு சுரங்கள் இன்னின்ன அளவோடும் கணக்கோடும் வருகின்றனவென்று சொன்னதுபோலவே இதற்கும் சொல்லவேண்டும்.