சுரங்கள் சரியான அளவில் வரும். அதை இப்புத்தகத்தின் 478-ம் பக்கத்தில் வரும் அட்டவணையில் பத்தாவது கலத்தில் காண்போம். இரண்டாவது பாகத்தில் தற்காலத்தில் விவாதத்திலிருக்கும் சுரஸ்தானங்களும் தந்தியின் இன்னின்ன பாகத்தில் வருகின்றனவென்று காட்டும் பின்னங்களும் அவைகளுக்குரிய சென்ட்ஸும் அவைகளின் பேதமும் காணப்படுகின்றன. இது இயற்கை அமைப்பில் கிடைக்கிற அளவென்றும் சைரன் என்னும் ஓசையைக் கணிக்கும் இயந்திரத்தில் காட்டப்படும் அளவுக்கு ஒத்திருக்கிற தென்றும் சொல்லுவதாகத் தெரிகிறது. இவைகள் ஒன்றற்கொன்று ஒற்றுமையில்லாத அளவில் கிடைக்கிறதாக எட்டாவது கலத்தில் காண்கிறோம். இவைகள் (2/3) என்ற பஞ்சம அளவிலும் (3/4) என்ற மத்திம அளவிலும் சற்றுப் பேதப்படுவதினால் ச-ப, ச-ப முறையாய்ச் சில சுரங்களையும் ச-ம, ச-ம முறையாய்ச் சில சுரங்களையும் ச-க, ச-க முறையாய்ச் சில சுரங்களையும் எடுக்க நேரிட்டதென்று தோன்றுகிறது. இவைகள் வெவ்வேறு அளவுடையவைகளாயிருப்பதினால் கிரகசுரம் பாடுவதற்கும் கிரகசுரம் மாற்றுவதனால் ஆறு தாய் இராகங்கள் உண்டாவதற்கும் முற்றிலும் ஒவ்வாத சுரங்கள் என்று நாம் நிச்சமாய்க் காண்கிறோம். ச-ப, ச-ப வாக அல்லது இணை இணையாக ச-ம, ச-ம வாக அல்லது கிளை கிளையாக வட்டப்பாலையில் பன்னிரு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து நடுவில் வேறு நாதமில்லாமல் வருகின்றனவென்று இதன் முன் பார்த்திருக்கிறோம். ஆகையினால் பூர்வம் ஆயப்பாலையில் வழங்கிவந்த சுரங்களும் அவைகளின் கணக்குமே சரியானவை யென்றும் மற்ற (2/3),(3/4) என்ற பைதாகோரஸ் அளவு முறையாலும் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகின்றனவென்று பரதர் சங்கீதரத்னாகரர் சொல்லிய முறையாலும் வழி விலகிப்போனவை யென்றும் கிரக சுரம் பாடுவதற்குக் கூடியவை அல்ல என்றும் தெளிவாகக் காணப்படுகிறது. 4. பூர்வ தமிழ் மக்கள் வட்டப்பாலையில் வழங்கிவந்த 24 சுருதிகளே தற்காலம் கர்நாடக சங்கீதத்திலும் வழங்கி வருகின்றன என்பதற்குக் கணித முறை. பூர்வ தமிழ் மக்கள் ச-ப, ச-ம முறையாய் ஒரு ஸ்தாயியில் கண்டுபிடித்து தங்கள் கானத்தில் வழங்கிவந்த பன்னிரு சுரங்களே ஆயப்பாலையென்றும், ஆயப்பாலையில் வழங்கிவந்த பன்னிரண்டு சுரங்களே தற்காலம் கர்நாடக சங்கீதத்தில் வழங்கிவருகின்றனவென்றும், மற்றும் அநேகர் உபயோகித்துக்கொண்டு வருகிறார்களென்றும், அவை Geometrical Progression என்ற கணித முறைப்படி ஒன்றற்கொன்று தீவிரமாய் நடுவில் வேறு நாதமுண்டாகாமல் படிப்படியாய் உயர்ந்து ஒரு ஸ்தாயியில் பன்னிரண்டு சுரங்களாக முடிகின்றன என்றும் அவற்றின் ஓசை அலைகளையும் இதன் முன் பார்த்தோம். அதுபோலவே ஆதார சட்சத்திலிருந்து மத்திய ஸ்தாயி சட்சம் வரையும் எத்தனை சுருதிகள் வருகின்றனவென்றும் அவைகளின் கணித முறை இன்னதென்றும் நாம் பார்க்கவேண்டும். ஒரு ஸ்தாயியை பன்னிரண்டு இராசிகளாகப் பிரித்து அதில் இன்னின்ன இராசியில் வரும் சுரங்கள் பொருத்தமுள்ளவையென்றும் மற்றவை பொருந்தாதென்றும் இன்னின்ன இராசியில் நின்ற சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்துக் கானஞ்செய்யவேண்டுமென்றும் அதனால் குறைந்த இரண்டு அலகுகளும் சேர்ந்து சுருதிகள் இருபத்து நான்காக இருக்கவேண்டுமென்றும் மூன்றாம் பாகத்தில் பார்த்திருக்கிறோம்.
|