பக்கம் எண் :

871
சுரம் சுருதிகளின் பெயர்கள்.

இதோடு வட்டப்பாலையில் வழங்கிவந்த 24 அலகுகளுக்கும் அலகுகளிலிருந்துண்டாகும் விக்ருதி சுரங்களுக்கும் பெயர்கள் நாம் பார்க்கவேண்டியது அவசியம்.

மேற்காட்டிய அட்டவணையில் நாம் தற்காலம் வழங்கிவரும் பெயரும் முற்காலத்தில் வழங்கிவந்த சந்தேகமில்லாத பெயரும் தெளிவாகக் காண்போம்.

அவைகளில் இரண்டு இரண்டு அலகுகளாக வரும் பன்னிரண்டு சுரங்களின் பெயர்கள் முன் அட்டவணையைப்போலவே வருகின்றன. நாலாவது அலகிற்கும் இரண்டாவது அலகிற்கும் நடுவில் மூன்றாவது அலகு வரக்கூகூடும் என்பதும் நாலாவது அலகிற்கும் ஆறாவதலகிற்கும் நடுவில் ஐந்தாவது அலகு வருமென்றும் நாம் பிரத்தியட்சமாய் அறிவோம். அதுபோலவே சுத்த ரிஷபத்திற்கும், சதுர் சுருதி ரிஷபத்திற்கும் நடுவில் திஸ்சுருதி ரிஷபம் வருகிறதென்றும், சதுர் சுருதி ரிஷபத்திற்கும் சட் சுருதி ரிஷபத்திற்கும் நடுவில் பஞ்ச சுருதி வருகிறதென்றும் இங்கே குறித்திருக்கிறேன். சுத சட்சம் சுத பஞ்சமம் என்பது சட்சமத்திலும் பஞ்சமத்திலும் ஒரு சுருதிகுறைந்ததென்றும் அச்சுத சட்சமம், அச்சுத பஞ்சமம் என்பது நேத சுருதியென்றும் தெரிகிறது. இதில் நேத சட்சமம் நேத பஞ்சமம் நம் கானத்தில் சுருதிக்கு ஆதாரமாயிருப்பதனால் அவைகளில் எவ்வித மாறுதலும் வரக்கூடாது. ஆனால் சட்சமத்தின் கீழுள்ள நிஷாதமும் பஞ்சமத்திற்குக் கீழுள்ள மத்திமமும் சுத சட்ச நிஷாத மென்றும், சுத பஞ்சம மத்திம மென்றும் அழைக்கப்படும். இதனால் சட்சமத்தின் இரண்டு சுருதிகளையும் பஞ்சமத்தின் இரண்டு சுருதிகளையும் தள்ளிக்கொண்டு கானஞ்செய்கிறது என்பதல்ல. ஆயப்பாலையின் முறைப்படியே கிரகங்கள் மாற்றி இராகங்கள் உண்டாக்கவேண்டும். வட்டப்பாலையின் முறைப்படியே அலகுகள் குறைந்து கானம் செய்யப்படவேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது. இதோடு சட்சம பஞ்சமங்களின் நாலு சுருதிகளுக்கேற்ற விதமாய் கிரக மாறிக் கொண்டுபோவோமேயானால் மிக ஏராளமான இராகங்கள் உண்டாகுமே, காதுக்கு அதிக இனிமையாயிருக்குமே, சங்கீத ரத்னாகரர்அப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று நாம் சற்று யோசிப்போம். அப்படிச் செய்வது பூர்வ காலத்தில் வழக்கமாயிருந்ததில்லை. இப்போதும் அப்படியில்லை. இணை, கிளையான முறைப்படி உண்டான பன்னிரு சுரங்களில் இரண்டு சுரங்களில் ஒவ்வொரு அலகு குறைத்து 22 அலகுகளில் கானம் செய்துகொண்டு வந்த பூர்வ தமிழ் முறையைத் திட்டமாய் அறிந்துகொள்ளாமல் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருகின்றனவென்றும், அவைகளின் பெயர்களும் சந்தேகம் வரும்படி எழுதப்பட்டிருக்கின்றன வென்றும் தெளிவாய்த் தெரிகிறது. ஒரு ஸ்தாயியில் வழங்கிவரும் சுருதிகளின் எண்களிலும் பெயர்களிலும் சந்தேகப்பட்டதாக பலர் நூல் முகமாகவும் தெரிகிறோம்.

மேலும் மேளாதிகாரம் என்ற ஒரு தெலுங்கு நூலில் பிரம்ம மேளத்தில் வழங்கி வரும் 24 சுருதிகளின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அவ்வட்டவணையை இதன் பின் பார்க்க.

அடியில் வரும் அட்டவணையில் ஒற்றைப்பட்ட சுருதிகள் பிரதி என்ற பெயரோடும் இரட்டைப்பட்ட சுரங்கள், சுத்தம், சதுர் சுருதி, சட் சுருதி என்றும் வழங்குகின்றன. நாம் தற்காலத்தில் அரைச் சுரங்களுக்கு வழங்கும் பெயர்களையே இங்கே காண்கிறோம். ஆகையினால் இதுபோன்ற முறை பூர்வ காலத்தில் தமிழ் நாட்டிலிருந்ததென்றும் அம்முறையையே தெலுங்கில் எழுதி வைத்தார்களென்றும் அதனால் வர வர தமிழ் நூல்கள் மறைந்து போயினவென்றும் எண்ண இடமிருக்கிறது. இந்நூல் எழுதியவரோ திருநெல்வேலியில் வேளாள வகுப்பைச் சேர்ந்தவர்.