பக்கம் எண் :

1

1. குறுகிய நோக்கம்

உலகம் போர்க்களம்

     ஓர் ஊரில் அழகான தெருக்கள் பல அமைந்திருக்கின்றன. அவற்றுள்
சில தெருக்கள் சிறியவை; சில தெருக்கள் பெரியவை. ஆனாலும் ஒவ்வொரு
தெருவும் கண்ணுக்கு இனிய காட்சியாக இருக்கின்றது. இது வெளித் தோற்றம்.
வீடுகளின் உள்ளே சென்று பார்த்தால், எங்கோ ஒரு மூலையில் கொஞ்சம்
அரிசி, கோதுமை, சோளம் முதலிய உணவுப் பொருள்கள் இருக்கின்றன.
அதைவிடச் சிறிய மூலையில் திருக்குறள், கீதை, குரான் முதலிய நூல்கள்
தூசுபடிந்த நிலையில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர மற்ற
இடங்களிலெல்லாம் ஈட்டிகளும் துப்பாக்கிகளும் பளபள என்று மின்னிக்
கொண்டிருக்கின்றன; தடிகளும் வாள்களும் கவர்ச்சியாக நிற்கின்றன.
உண்ணும் உணவு இரண்டு பேர்க்கு இரண்டு நாளைக்குத் தான் ஆகும்.
ஆனால் இந்த ஈட்டிகளும் துப்பாக்கிகளும் பல தலைமுறைகளுக்கு நூற்றுக்
கணக்கானவர்களுக்குப் போர் செய்யப் பயன்படும் என்று தோன்றுகின்றன.
சுவர் ஓரத்தில் பெட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. உறுதியான
பெரிய பெரிய பூட்டுக்களால் பூட்டப்பட்டிருக்கின்றன. உள்ளே அடங்கிய
பொருள் இன்னது என்று தெரிவதற்காக மேலே 'குண்டுகள்' 'வெடிமருந்துகள்',
'நச்சுப்புகை' என்று எழுதப்பட்டிருக்கின்றன. இரண்டே பெட்டிகள்
பூட்டப்படாமல், மேலே சீட்டும் எழுதி ஒட்டப்படாமல் இருக்கின்றன.
அவற்றை எளிதில் திறக்கலாம். ஒன்றில் உடைகளும் அணிகலன்களும்
காய்கறி விதைகளும்