தாறுமாறாகக் கிடக்கின்றன. மற்றொன்றில் தலைவலி மருந்து, வயிற்றுநோய் மருந்து முதலிய சில பொட்டலங்களும் கட்டி முதலியவற்றை அறுப்பதற்குச் சில கத்திகளும் கொஞ்சம் பஞ்சும் இருக்கின்றன. வீட்டிலுள்ளவர்கள் வாசற் படியில் நின்றுகொண்டு உறுதியான கதவுகளையும் ஒன்றுக்கு நாலைந்தாக உள்ள தாழ்ப்பாள் வகைகளையும் பார்த்துக் கொண்டு நிற்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு கையிலும் ஈட்டி, துப்பாக்கி அல்லது தடியையாவது வைத்திருக்கிறார்கள். அவர்களோடு பேசலாம் என்று வாயெடுத்தால், ஈட்டி, துப்பாக்கி அல்லது தடியை உயர்த்தி அதன் மூலமாகச் சைகை காட்டிப் பேசுகின்றார்கள். தெருவில் திரிகின்றவர்களைப் பார்த்தாலும் கைகோத்துக் கொண்டு திரிகின்றவர்கள் ஒருவரும் இல்லை. ஒருவர் தோள்மேல் மற்றொருவர் வாளைச் சாய்த்தபடியே நடந்து போகின்றார்கள். ஒரு தெருவினர் மற்றொரு தெருவினரைக் கண்டாலும் வாளால் வணக்கம் செய்கின்றார்கள். வாளோடு வாளைத் தட்டித்தான் வரவேற்புச் செய்கின்றார்கள். இப்படி ஓர் ஊரில் சில தெருக்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் கற்பனை ஊரைப் போல் தான் இந்தக் காலத்து நாகரிக உலகம் வாழ்கின்றது. சில பெரிய நாடுகள், சில சிறிய நாடுகள் எல்லாம் சேர்ந்து வாழ்கின்றன. அவற்றுள் சில வல்லரசுகளாக அமைந்துள்ளன. எல்லா நாடுகளிலும் நாகரிகம் விளங்குகின்றது. ஆனால் உணவுப் பொருள் ஓரளவாகவே உண்டாக்கப்படுகின்றது. சில நாடுகளில் உணவுப் பொருள் போதாமல் அரைப் பஞ்சமும் கால் பஞ்சமும் இருந்து வருகின்றன. வாழ்க்கைக்கு உரிய உயர்ந்த நூல்களைப் போற்றும் முயற்சியும் குறைவாகவே இருக்கின்றது. உடை முதலியவும் போதுமான அளவுக்கு உண்டாக்கப்படவில்லை. மக்களின் |