பக்கம் எண் :

குறுகிய நோக்கம் 3

நோயைத் தீர்த்து உடல் நலம் அளிக்கும் மருத்துவ நிலையங்களும்
கருவிகளும் போதிய அளவுக்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால்
எல்லா நாடுகளிலும் போர்க்கருவிகள் மட்டும் அளவுகடந்து உண்டாக்கப்
பட்டுள்ளன. பலவகைச் சிறப்புகளோடு போற்றப்பட்டு வருகின்றன. வயிற்று
உணவுக்கும் வாழ்க்கைப் பொருள்களுக்கும் கல்விநலத்திற்கும் உடல் நலம்
காக்கும் மருந்து வகைகளுக்கும் செலவாகும் முயற்சியும் பணமும் மிகக்
குறைவே, ஆனால் பகைவர் நாட்டை அழிப்பதற்கு என்று கனாக் கண்டு
கொண்டு எல்லோரும் கூட்டுறவாகச் செய்யும் அழிவு வேலைக்கு - உலகத்தை
அழிக்கும் போர்க் கொடுமைக்குச் - செலவாகும் முயற்சியும் பணமும் ஏராளம்!
போர்க் கருவிகளைப் புதுமையாகக் காண்பதில் அறிஞர் காட்டும் ஊக்கமும்
அரசியலார் தரும் ஆதரவும் வேறு துறையில் காட்டினால், உலகத்தில் எந்த
மூலையிலும் உணவு உடை வீடு முதலிய பஞ்சங்கள் தலைகாட்டாமல்
செய்துவிடலாம்; ஆனால் பஞ்சங்களும் குறைகளும் தீர வழி இல்லை; அதற்கு
மாறாக இந்த உலகத்தைப் போல எத்தனையோ ஆயிரம் உலகங்களை
அழிப்பதற்கு வேண்டிய அணுக்குண்டுகள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. ஒரு
நாட்டுத் தலைவரை மற்றொரு நாட்டு அரசியலார் வரவேற்பதானாலும்,
இராணுவ வரவேற்புத்தான். ஒரு நாட்டோடு மற்றொரு நாடு உறவு
கொள்வதானாலும் படையும் வலிமையும் பற்றிய பேச்சுத்தான். ஒரு நாட்டோடு
மற்றொரு நாடு பிணங்குவதானாலும் குண்டுகள் வெடித்து முழங்கும்
முழக்கந்தான்.