எப்படித் தொடங்கியது? இந்த நிலைமை எப்படி ஏற்பட்டது என்று யாரைக் கேட்பது? எல்லோரும் குற்றவாளிகளே என்ற நிலைமையில் அறத்தை மறந்து அரசியலில் குதித்திருப்பதால், அந்தக் கேள்வியை அப்படியே விட்டுவிட்டு, அந்தக் கற்பனை ஊரையே பார்த்து ஆராய வேண்டும். அந்த ஊரில் வீடுகள் கண்டோம். முதன் முதலில் வீடுகள் அமைந்த காரணமும் முறையும் என்ன? வெயில், பனி, மழை முதலியவற்றிலிருந்து காத்துக்கொள்வதற்காக முதலில் பந்தல் வேண்டியதாக இருந்தது. கொடிய விலங்குகள் துன்புறுத்தாமல் இருப்பதற்காகத் தடி முதலிய கருவிகள் போதாமல், உள்ளே புகாதபடி தடுக்க வேலி வேண்டியதாக இருந்தது. இது படிப்படியாக வளர்ந்து நாற்புறமும் சுவர் வைக்கும் நிலைமை வந்தது. எல்லோரும் சேர்ந்து ஒரே வீடு கட்டி வாழ்வது அருமையாக இருந்தமையால், தனித்தனியே கணவனும் மனைவியும் ஒவ்வொரு குடும்பமாகப் பொறுப்பு ஏற்றுத் தம்தம் கடமையைப் பார்த்துக் கொள்வது எளிதாக இருந்து, தனிதனிக் குடிசைகள் அமைந்தன. அன்றன்றைக்கு உணவு தேடி உண்ணும் வாழ்க்கையில் சில ஏமாற்றங்களும் ஏற்பட்டன. வெளியே போய் உணவு தேட முடியாதபடி மழை நாட்களில் தொல்லை ஏற்பட்டது. வெளியே சென்று தேடினாலும் கிடைக்காத குறையும் மற்றக் காலங்களில் சில நாட்களில் ஏற்பட்டது. ஆகவே, உணவுப் பொருளை அந்த அந்தக் குடிசைகளில் சேர்த்து வைக்கும் வழக்கமும் ஏற்பட்டது. ஆணும் பெண்ணுமாக, சிறு கூட்டமாக, ஒரு தெருவில் உள்ளவர்கள் குடிசைகளை |