| அரசியலையும் பிரிக்காமல் பிணைத்து நோக்கி வாழ்க்கையோடு இணைத்துத் தொண்டாற்றி வழிகாட்டிய உலகப் பெரியார் காந்தி அடிகளே ஆவார். வறுமையையும் கொடுமையையும் ஒழிப்பதே அவர் ஆற்றிய தொண்டுகளின் அடிப்படை. கொடுமை (ஹிம்ஸை)யை ஒழிக்கவேண்டும் என்று அவர் மேற்கொண்ட பெருமுயற்சி உலகத்தில் கண்களை விழிக்கச் செய்துள்ளது. இன்று வறுமையும் கொடுமையும் இல்லாத மூலை முடுக்கு இல்லை. இவற்றைத் தொலைக்க வேண்டும் என்றே எல்லா அரசியலாளரும் அறிஞரும் தொண்டரும் பேசி வருகின்றார்கள்; ஆனால் இந்த இரண்டுமோ வரம்பு கடந்து பெருகி வருகின்றன. வழக்கம்போல் சிலர், "எங்கள் கையில் உலகத்தைக் காக்கும் பொறுப்பை விட்டுப் பாருங்கள். அமைதியை நிலைநாட்டி விடுவோம்", என்று சொல்லி, அமைதிக்கு வழியாக அணுக்குண்டுகளைப் பரபரப்பாகச் செய்து கொண்டு வருகின்றார்கள். மற்றவர்களோ நாடுதோறும் கட்சிகளை அமைத்து, அந்தக் கட்சிகளுக்கு செல்வாக்குக் கொடுக்கும்படியாகப் பொது மக்களைக் கேட்டுக் கொண்டு "செல்வாக்குப் பெற்று, ஆளும் உரிமையும் பெற்றால் சட்டங்களை இப்படி இப்படி மாற்றி அமைதியை நிலைநிறுத்துவோம்," என்று உறுதி கூறுகின்றார்கள். தொண்டும் கட்சியும் கோடிக்கணக்கான மக்கள் கூடி வாழும் வாழ்க்கை அமைந்த அரசியலில், செல்வாக்கைப் பெருக்கினால் தவிர, அரசியல் தொண்டர்கள் |