மிகுதியாகும்போது இந்த மனச்சான்று ஒருவாறு அடங்குகின்றது. ஆனால் இந்தச் செல்வம் முதலியவற்றைப் பெரும்பாலோர் பெறமுடியாது அல்லவா? அந்தப் பெரும்பாலோரிடமும் மனச்சான்று அப்படியே இருக்கின்றது. அவ்வாறு மனச்சான்று வாழும் வரையில் அறம் வாழ்ந்தே தீரும். ஆகையால், கருத்துத் தேர்தலின்படி ஒழுக்கம் கெட்டவர்கள், வஞ்சகர்கள், தந்திரக்காரர்கள் ஆகிய இவர்கள் ஊர் மன்றத்தை அணுக முடியாது; அதனால் பாராளுமன்றத்தைக் கைப்பற்ற முடியாது; ஆகவே அரசாட்சி நல்லவர்களின் கையில் விளங்கும், நாட்டிற்கும் உலகத்திற்கும் நல்லவர்களே தலைவர்களாக வர வேண்டும். வல்லவர்கள் தலைமை பூண்டு பயன் என்ன? வல்லவர்களின் தலைமையில் போரும் பூசலும் திறமையாக - வல்லமையோடு - நடைபெற முடியும். அதைவிட நல்லவர்களின் தலைமையே வேண்டும். அவர்களுக்கு வல்லமை குறைவாக இருந்தாலும் கவலை இல்லை. போரும் பூசலும் குறையும்; அமைதியும் அறமும் தலையெடுக்கும். இன்று கட்சியின் பெயரால் தனிமனிதர் உரிமையைப் பறித்துப் பெரும்பாலோரைக் கைகாட்டி மரங்களாக்கி, அவர்களுடைய மனச்சான்றைக் கொல்வதால் வல்லவர்கள் மேல்நிலை பெறலாம். ஆனால் மக்களின் பொது வாழ்க்கை குலைகின்றது. நாடுகள் வாழவில்லை; கட்சிகளே வாழ முடிகின்றது. இன்று தேர்தல் என்றால் எந்த நாட்டிலும் மக்கள் விலங்குகளாக மாறி நடக்கும் காலம் என்று சொல்லக்கூடிய நிலைமையைக் காண்கிறோம். லட்சக்கணக்காகக் கூட்டம், அங்கங்கே பிளவுகள், |